திருகோணமலையில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுமிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மூதூரில் கடந்த (2025.03.14) அன்று நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (30) திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயது சிறுமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது அம்மம்மா மற்றும் அம்மம்மாவின் சகோதரி ஆகிய இருவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, சிறுமியின் கல்வி கற்கும் உரிமை, அவர் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை மற்றும் அரசியல் அமைப்பில் சிறுவர்களின் சட்ட உரிமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் பிறப்பித்திருந்தார். நீதிமன்றம் சிறுமிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், காசிப் பிணை: 25,000 ரூபாய் மற்றும் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையியிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, சிறுமியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை சிறுமியைப் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மூதூர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு நீதிவான் அறிவுறுத்துதல் வழங்கியுள்ளார்.
சிறுமி சார்பாக சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எதிர்காலத்தையும் மற்றும் கல்வி கற்கும் உரிமையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகப் இத்தீர்ப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

