பிரிட்டனின் கேம்பிரிட்ஜ்ஷயரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் 9 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
டான்கேஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் சென்றுகொண்டிருந்த ரயிலில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் நாட்டவர்கள் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் யாரென்ற அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.
சனிக்கிழமை இரவு 7.42 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பயணிகள் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ரயில் கேம்பிரிட்ஜ்ஷயரில் உள்ள ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. எனினும், அந்த ரயில் வழக்கமாக அங்கு நிற்காது.
பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தல்

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பயங்கரவாத தடுப்பு காவல்துறையும் இணைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு லண்டன் வடகிழக்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
நேரில் பார்த்த சாட்சியங்களின்படி, இச்சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் காயமடைந்தவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளனர்.
எல்லோரையும் ஒரு நபர் கத்தியால் தாக்கியதையடுத்து, “ஓடுங்கள், ஓடுங்கள்!” என பலரும் அலறியதை தாங்கள் கேட்டதாக, நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர், பலரும் ஆரம்பத்தில் இதை ஹாலோவீன் இரவில் வேடிக்கையாக செய்ததாக கருதியுள்ளனர்.
ஆனால், ஒருவரின் கைகளில் இருந்த ரத்தத்தையும் இருக்கையில் இருந்த ரத்தத்தையும் பார்த்த பின்னரே பலரும் இதை தாக்குதல் என்று உணர்ந்துள்ளனர்.
பீட்டர்பரோ ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயில் கிளம்பியதையடுத்து, இத்தாக்குதல் நடைபெற்றதாக, ஹண்டிங்டன் எம்.பி. பிபிசியிடம் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை முதன்மை கண்காணிப்பாளர் கிரிஸ் கேசே, இத்தாக்குதல் “அதிர்ச்சியளிப்பதாக” தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கத்திக்குத்து தாக்குதல்கள்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இத்தகைய கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக, அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
2011ம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை “நிலையான அளவில் அதிகரித்து வருகின்றன”. இது “தேசிய நெருக்கடியாக” உள்ளதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறும் அளவுக்கு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஓராண்டில் அரசின் கடும் நடவடிக்கையால், போலீஸார் 60,000 கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர் அல்லது பலரும் அவர்களாகவே ஒப்படைத்துள்ளனர்.
பொது இடங்களில் கத்தி வைத்திருப்பது குற்றம், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் வரை அதற்கு சிறைத்தண்டனை அளிக்கப்படும்.
கடந்த மாதம் இதேபோன்று மான்செஸ்டரின் சினகாக்கில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.