லொறி ஒன்றைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரால் ஏற்பட்ட இரண்டு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (15) இரவு கந்தானைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியா வீதிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வியாபாரி தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த லொறியை ஒருவர் திருடிச் சென்ற நிலையில், லொறியின் உரிமையாளரும் அவரது ஊழியர்களும் லொறியைப் பின்தொடர்ந்துள்ளனர்.

அப்போது சந்தேகநபர் லொறியை நிறுத்தாமல் தப்பிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், எதிர்த் திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளிலும் மோதிய லொறி, அருகில் இருந்த சுவரில் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளது.

முதல் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், இரண்டாவது விபத்தில் இரண்டு பேரும் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர், இரண்டாவது விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 43 வயதுடைய கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறியைத் திருடி விபத்துக்களை ஏற்படுத்திய சந்தேகநபர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு கந்தானைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபர் தற்போது ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் 46 வயதுடைய ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version