உலக அரசியலில் பார்வை மீளவும் உக்ரைன்- ரஷ்ய போர்ச்சூழலை நோக்கி நகர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகம் முயல்கின்றார்.

அலாஸ்கா சந்திப்புக்கு பின்னர் விடுபட்டிருந்த ரஷ்ய – அமெரிக்க உறவை, அழுத்தங்களுக்குள்ளால் ரஷ்ய ஜனாதிபதி மீது மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

ஆனாலும் ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பது, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மீது ரஷ்யாவின் கண்காணிப்பையும் கடல் ரோந்து நடவடிக்கைகளையும் முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளதனால் ஏற்பட்ட பதற்றமாகவே தெரிகிறது.

இக்கட்டுரையும் ரஷ்ய- உக்ரைன் போரை நிறுத்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்துள்ள அம்சங்களையும் பின்பற்றும் அணுகுமுறைகளையும் தேடுவதாக அமைந்துள்ளது.

பிரஸ்சில்ஸில் கூடுகின்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் உடனான ரஷ்யப் போரை அழுத்தங்களுக்குள்ளால் முடிவுக்கு கொண்டு வர திட்டமிடுகின்றன.

உக்ரைன் ஜனாதிபதியும் துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில், பொருளாதார, இராணுவ உதவிகளை பெறும் நோக்கில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இதேநேரம் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டன் டிறிஸ்கோல் உக்ரைன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கும் நோக்கோடு உக்ரைனுக்கு(19.11.2025) பயணமாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இவ்வாறு தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலும், அதனைக் கையாளும் நகர்வுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறு, போரை நிறுத்துவதற்கான தேவைப்பாடும் அதற்கான நடவடிக்கைகளும் மேற்குலகத்தினால் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய அணுகுமுறையை ஆழமாக தேடுவது அவசியமானது.

முதலில் அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்துள்ள 28 அம்சத் திட்டத்தை சுருக்கமாகப் பார்ப்பது அவசியமானது. உக்ரைனின் இறையாண்மை பாதுகாக்கப்படும். ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் மற்றும் உக்ரைனுக்கும் விரிவான ஆக்கிரமிப்பில்லாத ஒப்பந்தம் ஒன்று வரையறுக்கப்படும்.

அது கடந்த 30 ஆண்டுகளில் ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்குமான தெரிவின்மைகளைத் தீர்க்கும்.

ரஷ்யா அயல்நாடுகளை ஆக்கிரமிக்காது. அவ்வாறே நேட்டோ மேலும் விஸ்தரிக்கப்படாது. உலகளாவிய அமைதி, பாதுகாப்பு அச்சுறுத்தலை தவிர்த்தல், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்கல், அனைத்து பாதுகாப்புப் பிரச்சினைகளையும் தீர்த்தல் மற்றும் ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் பேச்சுக்களை நடத்துதல்,

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கல், உக்ரைன் இராணுவத்தின் எண்ணிக்கை 6 இலட்சத்துக்குள் மட்டுப்படுத்தப்படுதல் என்பன நிகழும்.

உக்ரைன் நேட்டோவில் சேர்த்துக் கொள்ளப்படாது என்பதை, நேட்டோவும் உக்ரையின் சேராது என்பது சட்டரீதியாகவும் உறுதிப்படுத்தப்படும்.

நேட்டோ படைகள் உக்ரைனில் நிறுத்தப்படாது என்பதுடன் ஐரோப்பாவின் விமானங்கள் போலந்தில் மட்டுமே நிறுத்தப்படும், என்பது உறுதி செய்யப்படும்.

இவற்றுக்கு அமெரிக்கா உத்தரவாதமளிக்கும். உக்ரைன் ஐரோப்பிய சந்தையில் குறுகிய காலம் செயற்பட அனுமதியுண்டு.

உக்ரைனை மீளக்கட்டி யெழுப்புவதற்கான நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும். ரஷ்யா உலகப் பொருளாதாரத்தில் மீளவும் இணைக்கப்படும்.

முடக்கப்பட்ட ரஷ்ய நிதியை மீள செயல்படுத்தவும் ரஷ்ய- அமெரிக்க கூட்டு முதலீட்டுத் திட்டங்களை உக்ரைனில் மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும்.

இதில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பிரச்சினைக்கு ரஷ்ய- அமெரிக்க கூட்டுக் குழுவொன்று அமைக்கப்படும்.

ர‌ஷ்யா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் மீது, ஆக்கிரமிப்பில்லாத நிலை சட்டரீதியாக உறுதிப்படுத்தும். அணுவாயுதத் தடை மற்றும் பரவலைத் தடை செய்யும் முன்னய உடன்பாட்டை நீடிக்கவும், செயற்படுத்தவும் ரஷ்ய- அமெரிக்கா உடன்பாடு ஏற்படும்.

2009 இல் கலாவதியான START–1 மீளமைக்கப்படும். உக்ரைன் அணுவாயுதம் அல்லாத நடாக இருப்பதற்கு ஒப்புதலளிக்கும். ஜபோஜ்ஜிச்யா(Zaporizhzhya) அணுமின் நிலையம் மீளமைக்கப்பட்டு இரு நாடுகளும் சமமாக மின்சாரத்தை பெற உத்தரவாதமளிக்கப்பட வேண்டும்.

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட ஐந்து பிராந்தியங்களை அமெரிக்கா அங்கீகரிக்கும். ஏனைய பிராந்தியங்களை நோக்கிய விஸ்தரிப்பை ரஷ்யா மேற்கொள்ளாது.

வர்த்தகத்துக்கு கருங்கடலை உக்ரைன் பாவிக்க முடியும். 100 நாட்களில் உக்ரைனில் தேர்தல் நடைபெறும். போரில் ஈடுபட்ட இரு தரப்பும் மன்னிக்கப்படும். சமாதான உடன்பாடு ட்ரம்ப் தலைமையிலான சமாதான சபையினால் கண்காணிக்கப்படும். உடன்பாட்டின் பிரகாரம் போர்நிறுத்தம் உடனடியாக அமுலுக்கு வரும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது ஐரோப்பாவை பொறுத்தவரையில் ரஷ்யாவுக்கு எதிரான அணுகுமுறைகளில் ஒன்றாகவே உக்ரைன் போரைக் கருதுகின்றனர். தோற்கடிக்கவும் அல்லது எதிர்கொள்ளவும்; தேவை என்ற எண்ணப்பாங்கு மேற்கு ஐரோப்பிய அரசுகளிடம் உண்டு.

இது கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பீடித்துள்ளது. ரஷ்யா தனது முன்னைய சோவியத் கனவுகளை மீளமைக்க முயலும் என்ற அச்சம் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்ல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் உண்டு.

இதனால் முழு நீளப்போர் ஒன்றை உக்ரைன் ரஷ்யா மீது நிகழ்த்துவது ஐரோப்பாவுக்கு ஒட்டுமொத்தமாக இலாபத்தை கொடுக்கும் ஒன்றாகவே தெரிகின்றது.

பிரித்தானியாவின் விமானங்களை ரஷ்ய போர்க்கப்பல்கள் கண்காணிப்பதாகவும் கடல் வழியான கேபிள் தொடர்புகளை தொடர்ச்சியாக ரஷ்ய போர்க் கப்பல்கள் அவதானிப்பதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததோடு ர‌ஷ்யா மீதான எச்சரிக்கைகளையும் முன் வைத்திருக்கிறது.

ஆனால் அதேநேரம் இப்போது கடல் எல்லை தீவிரமான நிலையை அடைந்துள்ளது. என்ற அச்சமும் நாடுகளிடம் உண்டு. குறிப்பாக ரஷ்யா மேற்கு நோக்கி தனது விஸ்தரிப்பை தீவிரப்படுத்துகின்ற ஒரு சூழலில் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி சமாதானத்தின் ஊடாக ரஷ்யா மீது அழுத்தத்தை பிரயோகித்து, உக்ரைனை பலப்படுத்தும் விதத்தில் செயற்பட முனைகின்றது.

இதனால் உக்ரைன் மீதான போரை இராணுவ ரீதியில் பலப்படுத்திக் கொண்டு இராஜந்திர ரீதியில் அதாவது, சமாதானத்தை உச்சரித்துக் கொண்டு நகர்வதற்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முயல்கிறார்களா என்ற சந்தேகம் ரஷ்யாவுக்கு உண்டு.

இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் ஒரு முயற்சியாக உக்ரைன் ரஷ்யப் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

குறிப்பாக ரஷ்யா மீது அதன் நிறுவனங்கள் மீதும் தடைகளை விதித்தது அமெரிக்கா. அது சாத்தியப்படாத போது உக்ரைன் மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது.

போரை முடிவுக்கு கொண்டு வர இரண்டு பிரதான உத்திகளை ட்ரம்ப் முன்வைத்திருக்கிறார்.

உக்ரைன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாதுகாப்பு அரணாக கருதும் பிரதேசங்களை விட்டு வெளியேறுவதுடன் ரஷ்யாவின் கோரிக்கைக்கு இசைந்து போகின்ற அணுகுமுறையை உருவாக்க அமெரிக்கா திட்டமிடுகின்றது.

உக்ரைன் இராணுவத்தின் அளவையும், அந்த திறன் அளவையும் மட்டுப்படுத்துவதற்கான சிபார்சை உக்ரைன் ஜனாதிபதியின் முன்மொழிவோடு மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதை கண்டு கொள்ள முடியும்.

இவ்வாறான இரு விடயங்களை உள்ளடக்கியே அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளார்.

இத்தகைய அழுத்தங்களை உக்ரைன் எதிர்கொள்ளுகின்ற விதத்திலும் மற்றும் துருக்கி போன்ற நாடுகளை நோக்கி பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்புகளையும் அதற்கான உதவிகளையும் பெறுகின்ற நோக்கிலும் ஒரு விஜயத்தை திட்டமிட்டிருக்கிறது.

அமெரிக்காவை முழுமையாக ரஷ்யாவோடு இணைய விடாது தடுத்துக் கொண்டும், உக்ரைன் ஜனாதிபதியைப் பாதுகாத்துக் கொண்டும் மேற்கு தலைவர்கள் இராஜதந்திர ரீதியான அரசியல் களத்தை தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதிலும் கவனம் கொள்ளுகிறார்கள்.

ரஷ்யாவை தனிமைப்படுத்த முயன்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போன சந்தர்ப்பங்களில், போர் நிறுத்தத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்த மேற்கு ஐரோப்பா முயலுவதாகவே தெரிகிறது.

எனவே உக்ரைன்- ரஷ்யப் போர் நிறுத்தம் முடிவுக்கு வருவது என்பது கடினமான சவாலாகவே தெரிகிறது.

காரணம் உக்ரைன் ஜனாதிபதி, அமெரிக்காவின் வலுவான செல்வாக்குக்குள் இல்லாத நிலையும், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பிரதான பங்காளியாகவும் செயற்படுவதும் அமைதி விரைவில் சாத்தியமாகாது என்பதையே காட்டுகிறது.

s)

உக்ரைனின் பாரிய அழிவுக்குப் பின்னரும், ஐரோப்பாவின் கூலியாகவே ஜெலன்ஸ்கி செயற்படுகிறார்.

ஒரு தேசத்தை அழித்த ஜனாதிபதியாக ஜெலன்ஸ்கி மாறிக்கொண்டிருப்பது உக்ரைனின் துயரமாகவே தெரிகிறது.

அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் அமைச்சர்களின் இராஜினாமாக்களும் அதிகமான அரசியல் நெருக்கடியை உக்ரைனுக்கு ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழலில் தேர்தலை எதிர்கொள்வாரானால் ஐரோப்பாவின் இலக்கு கடினமாகும். நேட்டோவின் இலக்கும் பலவீனமடையும்.

Share.
Leave A Reply

Exit mobile version