தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30ஆம் திகதி வரை வெள்ளப்பெருக்கு அபாயம்

நீர் நிலைகளில் நீர் மட்டம் மிக அதிகமாக இருப்பதால், திடீர் மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று ( 25) முதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுவதால், நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிடும் முன் கூட்டிய வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகளின் மீது அனைத்து நீர்த்தேக்கங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் மக்களும் மிகுந்த கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும் யாழ் மாவட்டத்தில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும், நேற்றைய தினம் 99.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version