ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை! நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம்.

நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது.

இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள்.

கடும் மழையால் பிடிமானம் இழந்திருந்த மண்மேடுகள் சரிந்து வந்து அவர்களது வீடுகளை முழுவதுமாக விழுங்கிக் கொள்கிறது. உள்ளே மனிதர்கள் குழந்தைகள் முதியோர்கள் நோயாளர்கள் எல்லோரும்தான்.

நீரில் கசிந்து வீடுகளில் வீழ்ந்த மண்மேடுகள் பெரும் பெரும் வீடுகளைக் கூட முழுமையாக மூடிக் கொள்கின்றன. மக்கள் மூச்சுக்காற்றை மட்டுமன்றி முகவரியைக் கூட இழந்த பரிதாபம் இது.

யாரும் உடனடியாகச் சென்று உதவ முடியாதவாறு பாதைகள், சிறு வீதிகள் எல்லாமே சிதைந்து போனது.அதனால் பல மணித்தியாலங்கள் இந்த கிராமம் உலகப்பார்வையிலிருந்தே துண்டிக்கப்பட்டது.

இப்போதுதான் மக்கள் அங்கே படையெடுக்கிறார்கள்.ஆனால் யாருக்கும் எதுவுமே செய்ய முடியாத நிலை. அந்தப்பிரமாணடமான மண் சரிவுக்கு முன்னால் அவர்கள் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது.

இலங்கை இராணுவம் முழு மூச்சாக முயன்றதில் சுமார் பத்துப்பேரின் உடல்களை மட்டும் தோண்டியெடுக்க முடிந்தது. அதற்கு மேல் தம்மால் எதுவுமே செய்ய முடியாதென அவர்களும் கையை விரத்துவிட்டதாகத்தகவல்.

எஞ்சியுள்ள உடல்களை தோண்டியெடுக்க என்ன செய்யலாம் என அரசாங்கம் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல். சுமார் 50 குடும்பங்களைச்சேர்ந்த 200 அல்லது 180 பேரளவில் இந்த கிராமத்தில் மண்மேடுகளால் காவுகொள்ளப்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது.

காரணம் ஒரு வீட்டில் சுமார் நான்கு பேர் உறங்கியிருந்தாலும் அவர்களது மொத்தம் 200. ஆகக்குறைந்தது மூன்றுபேர் என்றாலும் 150 பேர். ஜனாஸாக்களை காலம் கடத்தி தோண்டி எடுப்பது மிகவும் சவால் நிறைந்து. நிஷ்டையில் உயிர்பிரிந்த தியாகிகளின் ஒரு கூட்டு மக்பராகவே அது மாறியுள்ளது.

இந்தக் கிராமம் எங்கேயுள்ளது?

ரம்புக்வெல விலானகம கிராமம் அக்குரணை நகரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அன்கும்புர-அளவத்துகொட வீதியில் அமைந்துள்ளது. இது அகுரணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 590ஆவது கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ளது.

சூழ இருக்கின்ற தமிழ் சிங்கள சமூகத்தையும் உள்ளடக்கிய சனத்தொகை 800 குடும்பங்கள் . முஸ்லிம்கள் சுமார் 400 குடும்பங்கள். அவர்களில் 50 குடும்பமே இந்த வரலாற்றுத் துயரத்தினை எதிர்கொண்டுள்ளன.

இந்த ஊரில் ஒரு ஜீம்ஆ பள்ளியும் இரண்டு தக்யாக்களும் உள்ளன.சுமார் நானூறு மாணவர்களைக்கொண்ட ஒரு Type 2 பாடசாலையும் உண்டு. இந்தப்பாடசாலைக்கு ஒரு முறை (2016) ஆசிரியர் வலுவூட்டும் நிகழ்ச்சியில் வளவாளராக கலந்து கொண்டுள்ளேன்.

மிக ரம்மியமான கிராமம் இது. பல்வேறு வகையான புவியமைப்பைக்கொண்ட (Landscaping) இந்த அழகிய கிராமம் இயற்கையின் மடியில் சயனித்திருந்தது கண்டு நான் வியப்பைத் தேன்.

இப்போது சயனத்தில் இருந்த மக்கள் மண்மேடுகளால் ஷஹீதானது கண்டு மனம் வெம்புகிறேன். இதயத்தையே உடைத்துச் போடும் இது போன்ற துயரங்கள் சகிப்பது சாதாரண மனிதர்களால் முடியாத காரியம்.

இந்த மண்ணில் மூழ்கடிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கதறியழும் காட்சிகளை காண்கையில், அவர்களது அழுகுரல்களைக் கேட்கையில் கண்கள் பனிக்கின்றன. இதயம் கனக்கின்றது.

வரலாற்றில் இவர்கள், 2025 இல் ஈழத்தில் நிகழ்ந்த இயற்கை அனர்த்தத்தின் “ஷஹீதுகள்” என நிச்சயம் பதிவாகுவார்கள். இந்த ஷஹீத்களுக்காக இருகரமேந்தி இறைவனைப் பிரார்த்திப்போமாக!

கலாநிதி றவூப் ஸெய்ன் 30/11/2025

Share.
Leave A Reply

Exit mobile version