ராஜபக்ஷ குடும்பம் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கான பாரியதொரு இரகசிய நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ள நிலையில்,
இந்த விவகாரத்தை மையப்படுத்தி வாஷிங்டனுக்கு அரசாங்கத்திற்கும் இடையில் தகவல் பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலும் இதுபோன்றதொரு இரகசிய தகவல் பரிமாற்றம் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை எப்படியாவது இலங்கைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அடுத்த வாக்குறுதியான ராஜபக்ஷர்களின் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உத்தேச மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் இந்த இரு விடயங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதே அடுத்த அரசியல் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்பது அரசாங்கத்தின் கணிப்பாக உள்ளது.

அர்ஜுன மகேந்திரன்
குறிப்பாக அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த முயற்சியை வெற்றிகரமாக முடிப்பதற்காக அரசாங்கத்தின் சார்பில் இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் சிங்கப்பூருக்குப் பயணிக்கவிருந்தனர்.
எனினும், இறுதி நேரத்தில் ஏற்பட்டதொரு சிக்கலினால் அந்தப் பயணம் தடைப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அர்ஜுன், சில இடைத்தரகர்கள் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பல்வேறு செய்திகளை அனுப்பி, அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்திருந்தார்.
எனினும், இந்தப் பேச்சுவார்த்தை நூற்றுக்கு நூறு வீதம் வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை.
சிஐடி அதிகாரிகளின் இரகசிய லண்டன் பயணம்
இதற்கிடையில், கடந்த வாரம் மற்றுமொரு விசேட விடயம் ஊடகங்களால் வெளியிடப்பட்டது.
அதாவது, ஒரு விசேட பணிக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆறு அதிகாரிகள் லண்டனுக்குப் பயணித்துள்ளனர்.
அந்தப் பயணம் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டிருந்தும், ஏதோவொரு வழியில் தகவல் கசிந்தது.
இல்லையெனில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளின் இந்தப் பயணம் யாருக்கும் தெரியவந்திருக்காது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கிற்கான ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்காகவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் லண்டன் சென்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதன்போது, ரணில் மற்றும் அவரது மனைவி மைத்திரி விக்கிரமசிங்க லண்டனில் மேற்கொண்ட பயணம் உத்தியோகபூர்வமானதா என்பதை உறுதிப்படுத்துவதே குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் முக்கியப் பணியாக இருந்தது.
அத்துடன், மைத்ரீ விக்கிரமசிங்க கலாநிதிப் பட்டம் பெற்ற வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பு உண்மையானதா என்பதையும் உறுதிப்படுத்துவது இந்தப் பயணத்தில் ஒரு நோக்கமாக இருந்தது.
ஆனால், சிஐடி அதிகாரிகள் ஆறு பேரும் ரணிலின் லண்டன் பயணம் குறித்த தகவல்களை பெறுவதற்காக மட்டும் லண்டன் செல்லவில்லை.
மேலும் சில விசேட விடயங்கள் தொடர்பாகவும் தகவல்களைச் சேகரிப்பதே அவர்களின் பயணத்தின் விசேட நோக்கமாக இருந்துள்ளது.
அதன்படி, ரணிலின் லண்டன் பயணம் நடந்த நேரத்தில் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக இருந்த சரோஜா சிறிசேனவிடம் அது தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதும் அவர்களின் நோக்கங்களில் ஒன்றாகும்.
அப்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கடமையாற்றிய பல உயர் அதிகாரிகளிடம் சிஐடி இது தொடர்பாக வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவர்கள் இப்போது இராஜதந்திர சேவையில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை விசேடமாக இலங்கைக்கு அழைப்பித்து குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பிரித்தானியாவில் அப்போது கடமையாற்றிய உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவுக்கும் வாக்குமூலம் அளிப்பதற்காக இலங்கை வருமாறு அறிவித்திருந்த போதிலும், அதற்கு பதிலளித்து இலங்கைக்கு வராது,
லண்டனில் இருந்தே குறித்த சம்பவம் தொடர்பாக சத்தியக் கடதாசியைத் தயாரித்து சிஐடிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனினும், இந்த விசாரணை மிகவும் முக்கியமானதாகவும், பாரதூரமானதாகவும் இருந்ததால், சரோஜாவின் சத்தியக் கடதாசியில் சிஐடி திருப்தியடையவில்லை. எனவே, உடனடியாக இலங்கைக்கு வந்து விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அவர்கள் சரோஜாவுக்குத் தொடர்ந்து அறிவித்துள்ளனர்.
சரோஜாவின் பதிலளிப்பு
அத்துடன், அவர் பிரித்தானிய குடியுரிமை கொண்ட ஒருவரைத் திருமணம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்டகால அறிவித்தல்களுக்குப் பிறகும் சரோஜா சிறிசேன இலங்கைக்கு வராததால், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வந்து ரணிலின் லண்டன் பயணம் குறித்து வாக்குமூலம் அளிக்குமாறும் கடந்த வாரம் சரோஜா சிறிசேனவுக்கு சிஐடி அறிவித்திருந்தது.
சிஐடி மிகவும் இரகசியமாக இந்த லண்டன் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தாலும், சரோஜா சிறிசேனவுக்கு விடுக்கப்பட்ட இந்த அறிவிப்புடன் அவர்களின் லண்டன் பயணத்தின் இரகசியம் கசிந்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு லண்டனில் இருந்து செய்தி கிடைக்க ஒரு நொடி கூட செல்லவில்லை.
இந்தத் தகவல்கள் வெளியானவுடன் ரணில், உடனடியாக அது தொடர்பான தகவல்களை தேட ஆரம்பித்தார். தனது விசுவாசமான அதிகாரிகள் மூலம் சிஐடி தரப்பில் மட்டுமன்றி, தனது சட்டத்தரணிகள் மூலம் சட்டமா அதிபர் திணைக்களம் தரப்பிலும் தகவல்களை தேட ரணில் நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி, ஆறு பேர் கொண்ட சிஐடி குழு ரணிலின் லண்டன் பயணம் குறித்த தகவல்கள் வெளியாகியது. மேலும் லண்டன் சென்றதை உறுதிப்படுத்திய போதும், இந்தப் பயணம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களமோ அல்லது சட்டமா அதிபரோ அறிந்திருக்கவில்லை என்று பின்னர் செய்திகள் வெளியாகின.
நாமலின் பட்டம் குறித்த சந்தேகம்
மேலும் இரண்டு விசேட விடயங்கள் தொடர்பாகவும் தகவல்களைத் தேடுவதும் அவர்களின் பயணத்தின் விசேட நோக்கமாக இருந்தது.
அதில் ஒன்று, ஒரு முக்கிய முன்னாள் அரசியல்வாதியின் பிரித்தானியாவில் உள்ள அதி இரகசிய வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை பெறுவதாகும்.
அத்துடன், மேலும் பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த தகவல்களை பெறுவது போன்ற கால அட்டவணையின் அடிப்படையிலேயே சிஐடியின் ஆறு அதிகாரிகளும் லண்டனுக்குப் பயணித்திருந்தனர்.
குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பிரித்தானியாவில் உள்ள ‘சிட்டி ஆஃப் யூனிவர்சிட்டி’ பல்கலைக்கழகத்தில் பெற்ற சட்டம் தொடர்பான பட்டச் சான்றிதழின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் சிஐடி குழு நடவடிக்கை எடுத்ததா என்ற பாரதூரமான சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கே நாமலின் பட்டச் சான்றிதழுக்கும் சிஐடி அதிகாரிகளின் லண்டன் பயணத்துக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றுவதற்கு பிரதான காரணமாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, திடீரென நாமலுக்கு ‘சிட்டி ஆஃப் யூனிவர்சிட்டி’ பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பட்டச் சான்றிதழ் குறித்து பாரதூரமான சிக்கல் இருப்பதாகக் கூறியமையாகும்.
பேரணி மீதான அச்சம்
எதிர்க்கட்சிகள் நடத்திய நுகேகொடை பேரணி காரணமாக ஆளும் கட்சி சற்று பதற்றம் அடைந்த அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் சற்று குழப்பம் அடைந்துள்ளது.
நுகேகொடை பேரணி தொடங்குவதற்கு முன்னரும், பேரணி முடிவடைந்த பின்னரும் அரசாங்கம் நடந்துகொண்ட விதம், அவர்களுக்கு இருந்த பயத்தை நன்றாகவே வெளிப்படுத்தியது.
அதே போன்று ஐக்கிய மக்கள் சக்தி , நுகேகொடை பேரணிக்குப் பிறகு, இரண்டு பேரணிகளை வைக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்தக் கூட்டங்கள் குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்த இடத்திலேயே மங்கிப் போனது. அதன் பிறகு, தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் கூட்டம் ஒன்றில், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையத் தயார் என்று சஜித் அறிவித்திருந்தார்.
சஜித்தின் அந்தக் கட்டுப்படும் தன்மைக்கு உடனடியாக பதிலளித்த ரணில், ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைக்கும் முடிவுக்கு நன்றி தெரிவித்து ஐ.தே.க.வினால் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில், ஐ.தே.கவுடன் ஐக்கிய மக்கள் சக்தியை இணைக்கும் பணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனிப்பட்ட முறையில் முன்வந்தமைக்கு சிறப்பு நன்றியைத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணையும் பயணத்தில் எதிர்காலத்திற்கான தரகர்களை நியமிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். அனைத்து பேச்சுவார்த்தைகளையும் இந்தக் மூன்று பேர் கொண்ட குழுவே வழிநடத்தும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது.
வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் சஜித் பிரேமதாசவின் திடீர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
‘கட்சிக்குள் எழும் எதிர்ப்பை சமாளிக்கவா சஜித் பிரேமதாச இவ்வாறு இ.தே.கவுடன் இணைவதாக அறிவித்துள்ளாரா என்று ஐ.தே.க.வின் ஒரு இளம் பிரதிநிதி ஒருவர் ரணிலிடம் கேட்டபோது’ அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் புன்னகையுடன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டார். சற்று நேரத்தில், ‘நாம் நமது வேலையை நேர்மையாகச் செய்வோம், அவ்வளவுதான்’ என்று சிறிது மௌனத்திற்குப் பிறகு ரணில் கூறினார்.
‘ரணிலின் வழக்குக்கு புதிய சாட்சியங்களைத் தேட இங்கிலாந்துக்குச் சென்ற குழுவுக்கு என்ன நடந்துள்ளது’ என்று வஜிர அபேவர்தன கேள்வியெழுப்பினார்.
பழமொழியுடன் இதற்கு பதிலளித்த ஹரின் பெர்னாண்டோ, ‘களுவா என்ற வேலைக்காரப் பையனிடம் ஒரு நாள் இரவு அவரது எஜமானர், ‘நாளை காலையில் மாரப்பன சென்று வா’ என்று கூறியதாகவும், களுவா எஜமானரிடம் எதற்காக மாரப்பன செல்ல வேண்டும் என்று கேட்காமலேயே, மறுநாள் காலையில் தேவையில்லாமல் மாரப்பனவுக்குச் சென்று மீண்டும் வீட்டிற்கு வந்ததார்’ என்றார். ‘புதிய பழமொழி இப்படி அமைய வேண்டும், அதாவது ‘ரணிலின் வழக்குக்கு சாட்சியம் தேட இங்கிலாந்துக்குச் சென்றது போல” என்று ஹரின் கூறியதைக் கேட்டு ரணிலும் அங்கிருந்தவர்களும் பேரொலியுடன் சிரித்தனர்.
‘ரணிலின் உத்தியோகபூர்வ விஜயம் குறித்து ஏற்கனவே சாட்சியங்கள் பெறப்பட்டு விட்டன.
அந்த சாட்சியங்களின்படி, இது ஒரு உத்தியோகபூர்வ விஜயம் என்று ஆளுங்கட்சி சாட்சியங்கள் மூலம் கூறப்பட்டது.
இங்கிலாந்துக்குச் சென்ற குழு, கொழும்பில் சாட்சியம் அளித்த அரசாங்க அதிகாரிகளை விட பதவிநிலையில் குறைந்த அதிகாரிகளிடம் சாட்சியம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக கொழும்பில் உயர் அதிகாரிகளிடம் சாட்சியம் பெற்றுவிட்டு, பதவிநிலையில் குறைந்த அதிகாரிகளிடம் சாட்சியம் பெற பெரும் நிதியை செலவழித்து இங்கிலாந்துக்கு ஏன் செல்ல வேண்டும்’ என இதன் போது சாகல ரத்நாயக்க கேள்வியெழுப்பினார்.
மேலும், நீதவான், இங்கிலாந்தின் வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பரஸ்பர சட்ட உதவி பெறுமாறு கேட்டிருந்தார்.
அதாவது, இலங்கை பிரித்தானியாவுக்கு எழுதிய பிறகு, பிரித்தானியப் காவல்துறை ஒரு நடவடிக்கையை எடுத்து, இலங்கைக்கு தேவையான தகவல்களை அறிவிப்பதாகும். அவ்வளவுதான் கேட்டப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில், இந்தக் குழு இங்கிலாந்துக்குச் சென்றது ‘களுவா மாரப்பன சென்றதன்’ இரண்டாம் பாகமாகும். அப்படி இங்கிலாந்துக்குச் சென்ற குழுவில் மூன்று பேர் சம்பந்தமில்லாதவர்கள் என்ற தகவலும் எதிர்க்கட்சிக்குக் கிடைத்தது என்று ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
‘ரணிலின் வழக்குக்கு சாட்சியம் தேடுவதாக கூறி இவர்கள், டில்வினின் இங்கிலாந்து பயணத்திற்கான பின்னணியைத் தயார் செய்யவும், போராட்டங்களை நிறுத்தவுமே சென்றுள்ளனர்’ என்று பிரதான எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்குக் கிடைத்த இரகசியத் தகவலை வெளிப்படுத்தினார்.
ஆனால், அந்தக் குழு சென்ற உண்மையான காரணத்தைக்கூட அவர்களால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை. டில்வின் வரும்போது இங்கிலாந்தில் உள்ள தமிழ்ச் சமூகம் வீதியில் நின்று கூச்சலிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரணிலின் வழக்கில் பெறப்பட்ட சாட்சியங்கள், இங்கிலாந்துக்குச் சென்ற இந்தக் குழு கண்டுபிடித்த விடயங்களுடன் முரண்பட்டால், அனைத்து சாட்சியங்களும் உடைந்துபோகும். புதிதாக எதையும் கண்டுபிடிக்காமல், அவர்கள் ஏற்கனவே உள்ளதையே சொன்னால், மேலும் சாட்சியங்கள் எதற்கு? என்ற கேள்வி எழும்பும் என வஜிர அபேவர்தன இதன் போது கூறினார்.
‘இந்த ஐந்து பேரும் இங்கிலாந்துக்குச் சென்று, ஐந்து நாட்கள் இருந்தனர். நான் இருந்தது ஒரு நாள் மட்டும்தானே’ என்று ரணில் கூற, மீண்டும் அனைவரும் பேரொலியுடன் சிரித்தனர்.
‘அதாவது, இந்தப் பயணத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பைக் கண்டுபிடிக்க மேலும் நான்கு அல்லது ஐந்து மடங்கு செலவு செய்கிறார்கள்’ என்று ருவன் விஜேவர்தன கூறினார்.
சாட்சியங்களுடன் வழக்கை வழிநடத்துவது சட்டமா அதிபர் திணைக்களம். சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கூட சொல்லாமல் இப்போது அந்த வேலையைச் செய்வது எப்படி என்பதில் ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் இங்கிலாந்துக்குப் போனதை மறைத்தும், எமக்கு அந்தத் தகவல் கிடைத்ததால்தான் பிரச்சினை பெரிதானது’ என்று அரசாங்க தகவல் தினைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கூறினார்.
(லியோ நிரோஷ தர்ஷன்)