வவுனியாவில் பெண் கிராம அலுவலர் ஒருவர்மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகக் கூறப்படும் பிரபல ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம், வெள்ள நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையின் போது நிகழ்ந்துள்ளது. நிவாரணத் தொகை வழங்கல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, குறித்த நபர் கிராம அலுவலரை தாக்க முயன்றதுடன், அவரது உத்தியோக கடமைகளுக்கும் இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று (19) வவுனியா பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதான நபர் வவுனியாவில் பிரபல ரவுடி என அறியப்படுவதாகவும், ஆரம்பத்தில் பொலிஸார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத நிலையில், கிராம அலுவலர் சங்கங்கள் தலையிட்டு அழுத்தம் கொடுத்ததன் பின்னரே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் வவுனியா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அரச ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

