1957-ம் ஆண்டு, மார்ச் 31-ம் தேதி கறுப்பும் சிவப்புமாகக் காட்சியளித்தது சென்னை மெரினா கடற்கரை. முதல் தேர்தலிலேயே 15 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றதால், தி.மு.க-வினரிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
அந்த வெற்றிக்கு உழைத்தவர்களுக்கான பாராட்டு விழாவை, கடற்கரையில் நடத்தியது தி.மு.க. பெரும் கூட்டம் திரண்டிருந்தது.
அவர்களுக்கு மத்தியில் அண்ணா உரையாற்றினார். ‘தி.மு.க சார்பில் போட்டியிட ஆளே கிடைக்காது என்று நம்மைப் பார்த்து கேலி பேசினார்கள்.
பிறகு, தி.மு.க-வுக்கு ஓர் இடம்கூட கிடைக்காது என்றார்கள். இப்போதோ, வெறும் 15 இடங்கள்தானே என்று சொல்கிறார்கள்.
அவர்களின் கேலி மொழி நமக்கு உற்சாகத்தைத் தரட்டும்…’ என்ற அண்ணாவின் பேச்சைக் கேட்டு, கூட்டம் ஆர்ப்பரித்தது!
காங்கிரஸை அச்சுறுத்திய தி.மு.க!
தி.மு.க சட்டமன்றக்குழுவின் தலைவராக அண்ணாவும், துணைத் தலைவராக பேராசிரியர் க.அன்பழகனும், கொறடாவாக மு.கருணாநிதியும் தேர்வுசெய்யப்பட்டனர்.
அதுவரை வீதிகளில் மட்டுமே ஒலித்துவந்த திராவிடக் குரல், சட்டமன்றத்துக்கு உள்ளேயும் ஒலிக்கத் தொடங்கியது.
‘சென்னை மாகாணத்துக்கு `தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுங்கள்’ என்று தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குரல் எழுப்பினார்கள். திராவிட நாடு கோரிக்கை, இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள் என இடைவிடாமல் இயங்கி, வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது தி.மு.க.
தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காங்கிரஸ், நேரு தலைமையில் மீண்டும் ஆட்சியமைத்தது.
நேரு அரசின் முதல் பட்ஜெட்டில் ஏழை, நடுத்தர மக்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்கு வரிகள் உயர்த்தப்பட்டன.
சர்க்கரை, மண்ணெண்ணெய், நல்லெண்ணெய், தேயிலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தன.
ரயில் கட்டணமும், தபால் தந்திக் கட்டணமும் அதிகரித்தன.
அவற்றைச் சமாளிக்க முடியாமல் ஏழைகளும், நடுத்தர மக்களும் திக்குமுக்காடினர். போதாக்குறைக்கு உணவு நெருக்கடி வேறு வந்து சேர்ந்தது.
பல மாநிலங்களில் பஞ்சமும் தலைதூக்கியது. ஆனால், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதிலும் நசுக்குவதிலும் மட்டுமே நேரு அரசு கவனம் செலுத்தியது.
தி.மு.க-வின் வளர்ச்சியைத் தங்களுக்கான அச்சுறுத்தலாக காங்கிரஸ்காரர்கள் பார்த்தனர். அதனால், பல நெருக்கடிகளை தி.மு.க-வுக்குக் கொடுத்தார்கள்.
கம்யூனிஸ்ட் ஆட்சி கலைப்பு!
மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆட்சியதிகாரத்தில் கோலோச்சிவந்த நிலையை, 1957 தேர்தலில் கேரள மக்கள் தகர்த்தெறிந்தனர்.
அங்கு, இ.எம்.எஸ் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அமைந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் நிலவரிக் குறைப்பு உட்பட மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை இ.எம்.எஸ் அரசு மேற்கொண்டது.
அதில் முக்கியமானது, நிலச்சீர்திருத்த மசோதாவும், முற்போக்குக் கல்வி மசோதாவும்தான். அந்த மசோதாக்களால் பாதிக்கப்பட்ட நில உடைமையாளர்களும், பிற்போக்குச் சக்திகளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர்.
இதுதான் தக்க தருணம் என்று நினைத்த நேரு அரசு, இ.எம்.எஸ் ஆட்சியைக் கலைத்தது..
உலகில் ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு, 27 மாதங்களில் (1959, ஜூலை 31) கலைக்கப்பட்டது. `பிரிவு – 356’ என்ற ஆயுதம் அப்போதுதான் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

காமராஜர் ஆட்சிக்கு சோதனை!
கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு கலைக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில், தமிழகத்தில் காமராஜர் அரசு பெரும் சோதனையை எதிர்கொண்டது.
1957-ம் ஆண்டு, ஜூலை மாதம் முதுகுளத்தூரில் சாதிக் கலவரம் வெடித்தது. இரு சமூகத்தினருக்கு இடையே பெரும் வன்முறை ஏற்பட்டு, வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
அமைதியை ஏற்படுத்த காமராஜர் அரசு முயன்றது. செப்டம்பர் 10-ம் தேதி, இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார் மாவட்ட ஆட்சியர். அது பலன் தரவில்லை.
மறுநாள் செப்டம்பர் 11-ம் தேதி. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் தலைவரான இம்மானுவேல் சேகரன் பரமக்குடியில் படுகொலைசெய்யப்பட்டார்.
தென்தமிழகம் கொந்தளித்தது. கொலையாளிகளைக் கைதுசெய்ய கீழத்தூவல் கிராமத்துக்குக் காவல்துறை விரைந்தது. அரிவாள், கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கூட்டம் தங்களைத் தாக்கியதாக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதில், ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள்.‘அப்பாவி மக்கள் ஐந்து பேரைப் பிடித்து, போலீஸ் சுட்டுக் கொன்றுவிட்டது’ என்று கீழத்தூவல் மக்கள் குற்றம்சாட்டினர்.
காமராஜர் அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 28 உறுப்பினர்களும், எதிராக 146 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தீர்மானம் தோல்வியடைந்தது. அரசுக்கு ஆபத்தும் இல்லை. ஆனால், காமராஜர் அரசுமீது அதிருப்தி அதிகரித்தது.
தடம் பதித்த கருணாநிதி!
அடுத்த சில மாதங்களில் சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் வந்தது. 1959-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில், காங்கிரஸுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
தி.மு.க-வில் மு.கருணாநிதிக்குத் தேர்தல் பொறுப்பை அண்ணா வழங்கியிருந்தார். அண்ணா தொடங்கி அத்தனை தி.மு.க தலைவர்களும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 100 இடங்கள். அவற்றில், 90 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க., 45 இடங்களில் ஜெயித்தது. 100 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 36 இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது. மேயர் பதவியையும் தி.மு.க கைப்பற்றியது.
1949-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி ராபின்சன் பூங்காவில் தி.மு.க-வின் தொடக்கக் கூட்டம் நடைபெற்றபோது, அதில் பங்கேற்ற தலைவர்கள் 28 பேர். அந்தப் பட்டியலில் கடைசியாக இருந்த பெயர் மு.கருணாநிதி. அண்ணா, ஈ.வி.கே.சம்பத், இரா.நெடுஞ்செழியன், வி.என்.நடராஜன், கே.ஏ.மதியழகன் ஆகியோர் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள்.
அந்தப் பட்டியலில் மு.கருணாநிதி இல்லை. ஆனாலும், தனது தனித் திறமைகளாலும், கடும் உழைப்பாலும் உயர்ந்துகொண்டிருந்தார் கருணாநிதி.
ஈ.வெ.கி.சம்பத்
தி.மு.க-வில் முதல் பிளவு!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தி.மு.க வளர்ந்தது. அதேநேரம், கட்சிக்குள் பூசல்களும் எழ ஆரம்பித்தன. தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த இரா.நெடுஞ்செழியனின் பதவிக்காலம், 1960 அக்டோபருடன் முடிவடைந்தது.
‘அடுத்த பொதுச்செயலாளர் யார்?’ என்ற கேள்வி எழுந்தது. மு.கருணாநிதி, கே.ஏ.மதியழகன் ஆகிய பெயர்கள் அடிபட்டன. ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.கி.சம்பத்துக்கும், மு.கருணாநிதிக்கும் ஏழாம் பொருத்தம்.
பொதுச்செயலாளராக கருணாநிதி வந்துவிடக் கூடாது என்று சம்பத் நினைத்தார்.இந்த விவகாரம் கட்சிக்குள் ஒரு சிக்கலாக எழுந்தது. எனவே, அண்ணாவே பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார்.
ஈ.வெ.கி.சம்பத் அவைத்தலைவராகவும், மு.கருணாநிதி பொருளாளராகவும் தேர்வுசெய்யப்பட்டனர். ஆனாலும், பிரச்னை தீரவில்லை.
ஒருகட்டத்தில், கருணாநிதி மீது சம்பத்துக்கு இருந்த வெறுப்பு அண்ணா பக்கம் திரும்பியது. அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பத், ‘சினிமாக்காரர்களின் பிடியில் தி.மு.க சிக்கிக்கொண்டது. கணக்கு வழக்கு சரியில்லை’ என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி, கட்சியிலிருந்து வெளியேறினார்.
பின்னர், ‘தமிழ்த் தேசியக் கட்சி’ என்று தனிக்கட்சியை சம்பத் ஆரம்பித்தார். சம்பத், தி.மு.க-வின் திராவிட நாடு கோரிக்கையை ‘பகல் கனவு’ என்று விமர்சித்தார்.
கட்சி ஆரம்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளில் முதல் பிளவைச் சந்தித்தது தி.மு.க.</
ராஜாஜியுடன் கைகோத்த அண்ணா!
காமராஜரை ‘பச்சைத் தமிழன்’ என்று சொல்லி பெரியார் தீவிரமாக ஆதரிக்க… ‘சுதந்திரா கட்சி’யை ஆரம்பித்திருந்த ராஜாஜியோ, அண்ணாவுடன் நெருங்கினார்.
அண்ணாவும் ராஜாஜியும் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினார்கள். ‘வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கத்தை அண்ணா எழுப்பினார்.
இந்தச் சூழலில், 1962-ம் ஆண்டு மூன்றாவது பொதுத்தேர்தல் வந்தது. பிப்ரவரி 17-ல் தொடங்கி, மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
அதில், காங்கிரஸுக்கு மட்டுமல்ல, தி.மு.க-வுக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. என்ன அதிர்ச்சி அது?
(இன்னும் அறிவோம்)