திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பெளத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொட வனவாசி காசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்களை திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடீன் முன்னிலையில், புதன்கிழமை (14) அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை எதிர்வரும் 19 ந் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கரையோர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி கடற்கரையில் 2025 நவம்பர் மாதம் கட்டுமானத்தை அமைத்தமை மற்றும் சிலையை வைத்தது தொடர்பில் வனவாசி பலங்கொட காசியப்ப தேரர்,திருகோணமலை கோட்டை விகாராதிபதி கல்ஞானவன்ச திஸ்ஸ தேரர்,சுகித்த வன்ச தேரர்,சிறிமாபுர விகாரையை சேர்ந்த நந்த தேரர் ஆகிய தேரர்களும்,கோட்டை விகாரையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தீபானி லியனகே,விதுரங்க லொக்கு கலப்பதி,எல்.ரீ.பெரேரா,பியலால் பிரேமசிறி,தெக்கும் துலார குணதிலக்க ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதிப்ப லியனகே,சுகத் பிரசன்ன ஆகிய மேலும் இருவர் எதிரிகளாக பெயரிடப்பட்டு இருந்தனர்.அவர்கள் நீதிமன்றில் புதன்கிழமை (14) அன்று முன்னிலையாகி இருக்கவில்லை.இவர்கள் இருவர் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி ஒருவர்,பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

கரையோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றிற்கு இல்லை. மேல் நீதிமன்றத்திற்கு மட்டுமே பிணை வழங்கும் அதிகாரம் உள்ளது என பிரதிவாதிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்த போதும் பிணை வழங்கப்படவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version