இலங்கை அரசாங்கம் குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மிகவும் நுட்பமாக காய்நகர்த்தி, பொருளாதாரத்தை முன்னேற்ற பல திட்டங்களை வகுத்துள்ளது.

சமகால புவிசார் அரசியல் போட்டிகளை கன கச்சிதமாக பயன்படுத்தி இந்தியாவிடம் இருந்து பெருமளவு நிதிகளையும் – நன்கொடைகளையும், அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கை பெறுகிறது. வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

ஏன், அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாக இலங்கைக்குப் பெருமளவு நிதியை அள்ளி வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களை, சமகால புவிசார் அரசியல் சூழல் உருவாக்கி வருகிறது.

2009இல் இருந்த புவிசார் அரசியல் சூழலைப் பயன்படுத்தி எவ்வாறு ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதோ, அதேபோன்றதொரு புவிசார் அரசியல் போட்டி 2026 இல் உருவாகியுள்ளது.

இதனை நன்கு பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார பலவீனங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரமும். வடக்கு, கிழக்கு அபிவிருத்தி என்ற போர்வைக்குள் மூழ்கும் ஆபத்துகள் நெருங்கியுள்ளன.

குறிப்பாக, தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் கிவுல் ஓயாத் திட்டம் போன்ற பல திட்டங்களை செயற்படுத்தி, அதற்குரிய நிதி. தொழில்நுட்ப உதவிகளைக் கூட பெறுவதற்குரிய ஏற்பாடுகள் உண்டு.

பெருமளவு நிதி வழங்குகின்ற இந்தியா, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று மாத்திரமே கேட்கும்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துங்கள் எனவும் இந்தியா அழுத்தம் கொடுக்கும். அதற்கு இணக்கம் தெரிவித்துப் பின்னர், அதனை நடைமுறைப்படுத்த முடியாததற்கான காரணங்கள் கூறப்படலாம்.

13 ஆவது திருத்தம் நிரந்தர அரசியல் தீர்வு அல்ல என்பது வேறு. தமிழர்களில் அதிகமானோர், அதனை ஏற்கவில்லை என்பதும் வேறு. ஆனால், 13 ஐ கூட நடைமுறைப்படுத்த எந்தவொரு சிங்களத் தலைவர்களுக்கும் விருப்பம் இல்லை என்பதே உண்மை.

2009க்குப் பின்னர், 13 கூட தமிழர்களுக்குத் தேவையில்லை என்பதே சிங்கள பெளத்த தேசிய நிலைப்பாடு. ஆனால், 1949 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோய குடியேற்றத் திட்டச் சிந்தனை, 2009க்குப் பின்னரான சூழலில் வடக்கு கிழக்கில் நிறைவேற்றப்படுகிறது.

அதுவும் வெளிநாடுகளின் நிதியுதவியில்.

1970 களில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுத இயககங்கள் உருவாவதற்கான காரண காரியங்கள், 2009க்குப் பின்னர் எந்தவிதமான தடைகளும் இன்றித் தொடருகின்றன என்று கற்பிதம் செய்ய முடியும்.

அதற்கு வசதியாக, தமிழ்த்தரப்பின் கவனத்தை திசை திருப்ப, 2009க்குப் பின்னர் பல சதித் திட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

தமிழ்த் தரப்பும் அதற்குப் பலியாகித் தமக்குள்ளேயே அடிப்பட்டுக் குத்துப்பட்டுத் தம்மைத் தாமே தரம் தாழ்த்தி வருகின்றன.

குறிப்பாக,

1) மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் நாகரிகமற்ற வாக்குவாதங்கள்.

2) தமிழர்களிடம் நிர்வாகத் திறன் இல்லை என்று கணிக்கும் நடைமுறைகள்.

3) சிங்கள தலைவர்கள் – சிங்கள அரச அதிகாரிகள் நல்லவர்கள் என்று கண்பிக்கும் உத்திகள்

4) சுமந்திரன் – சிறீதரன் மோதல். தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தும் கருத்து வெளிப்பாடுகள்…

5) மாவை சேனாதிராஜா மாமனிதர் என்ற விவகாரம்.

6) சுமந்திரன் – கஜேந்திரகுமார் தரப்பு மாறி மாறி வசைபாடுதல்.

7) நல்லூர் ஆலயச் சூழலில் உலகக் கிண்ணக் கோப்பையை கொண்டு வந்த விவகாரம்,

போன்றவை பற்றிய வாதங்கள், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடுதலை தொடர்பான சிந்தனைகளைத் திசை திருப்புகின்றன.

16 வருடங்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு வடிவங்களில் தமக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட சதிகள் பற்றிப் புரிந்துகொள்ளாமல், தமிழ்ச் சமூகம் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து செல்கிறது?

ஆகவே, தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கடந்து. பொது அமைப்புகள் – சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.

குறிப்பாக, ஜே.ஆர் காலத்திலிருந்து, ஏன் பண்டாரநாயக்க, சேனநாயக்க காலத்தில் இருந்து , தமிழர் விவகாரத்தில் சிங்களத் தலைவர்கள் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டோடு தான் செயற்பட்டு வந்தனர் என்பதை, வரலாறு காட்டி நிற்கிறது. இது தமிழர்களுக்கான இலகுவான அரசியல் விஞ்ஞான விளக்கம்.

-அ.நிக்சன் பத்திரிகையாளர்-

Share.
Leave A Reply

Exit mobile version