nncஇனவாதத்தைத் தூண்டி, நாடு முன்னெடுத்துச் செல்லும் பயணத்தைப் பின்னோக்கித் தள்ள எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும், ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களும் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மன்னார், அடம்பன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

“எமது அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

புள்ளிவிபரங்களின்படி, மொத்த சனத்தொகையில் சுமார் 52 சதவீதமானோர் பெண்கள். அதன் அர்த்தம், எமது நாட்டின் மக்கள் தொகையில் பலம்மிக்க ஒரு தரப்பினர் பெண்களே என்பதாகும்.

ஆயினும், பல்வேறு துறைகளை எடுத்துக்கொண்டால் அல்லது அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்த்தால், அந்தப் பலம் நடைமுறையில் பெண்களாகிய எமக்கு இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

எமது நாட்டில் நீண்டகாலமாக இருந்த பிரதான பிரச்சினை யுத்தமும் வன்முறையுமே ஆகும். நாம் ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்த்து வந்தோம்.

உண்மையில் யுத்தம் காரணமாக நாம் பிளவுபட்ட ஒரு நாடாகவே இருந்தோம். இதன் காரணமாகப் பெண்களே அதிகளவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர்.

இந்நாட்டின் பெரும்பான்மையான பெண்கள் தமது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உடன்பிறப்புகளை இழந்து துயரப்படுவதை நாம் அறிவோம்.

இந்தப் பகுதியிலும் அவ்வாறு துயரப்படும் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும்.

யுத்தம் முடிவடைந்து நீண்ட காலம் கடந்துவிட்ட போதிலும், அந்த அமைதி இன்றும் எமது இதயங்களில் ஏற்படவில்லை. இப்போதும் கூட, தமது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாது தவிக்கும் பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். தனித்து நின்று தமது குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் பல பெண்களும் இருக்கிறார்கள்.

எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்நாட்டின் சகலரும் பாதுகாப்பாக, சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம்.

ஆயினும், சில இனவாதக் கும்பல்கள் மக்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன. அவர்களுக்கு ஊழலை ஒழித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்து, சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அவர்களுக்குத் தேவை அதிகாரம் மட்டுமே. அதுவும் சாதாரண மக்களுக்காக அல்ல, அவர்களது சுயநலத்திற்காகவே.

அவர்கள் இந்நாட்டின் வளங்களை எந்த அளவுக்கு அழித்திருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். 2022 ஆம் ஆண்டில் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது.

ஆயினும் 2025 ஆம் ஆண்டளவில், திருட்டு, ஊழல் மற்றும் வீண்விரயங்களைத் தடுத்துப் பொருளாதாரத்தை வலுப்படுத்த எமது அரசாங்கத்தால் முடிந்தது. அதனாலேயே, ‘தித்வா’ சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் யாரிடமும் கடன் பெறாது மக்களுக்கு உதவ எம்மால் முடிந்தது.

21 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் பால் பண்ணையாளர்களுக்கு ‘மில்கோ’ நிறுவனத்தின் இலாபத்தைப் பகிர்ந்து அளிக்க முடிந்தது. ஒரு வருட காலத்திற்குள் வருமான வழிகளை அதிகரித்து, நிறுவனங்களின் வீண்விரயங்களைக் குறைத்ததாலேயே இந்த இலாபத்தை வழங்க முடிந்தது.

வீழ்ச்சியடைந்த நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்பி, மோசடி மற்றும் ஊழலை நிறுத்தி, அரசியல்வாதிகளின் வீண்விரயங்களைத் தடுத்து, அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டை இனவாதத்தைத் தூண்டிப் பின்னோக்கித் தள்ளச் சிலர் முயற்சிக்கின்றனர்.

இனவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெண்களே ஆவர். நாம் மீண்டும் பிளவுபட்டு, ஒற்றுமையின்மையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டுமா? வேண்டாம் என்றால் அதற்குப் பெண்களின் தலைமைத்துவம் அவசியம்.

நாம் ஆரம்பித்துள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களாகிய நீங்களும் முன்வர வேண்டும். நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. ஆகையினால் முன்னோக்கிச் செல்லும் எமது பயணத்தைப் பின்னோக்கித் தள்ள நாம் இடமளிக்க மாட்டோம்.

நாம் எதிர்நோக்கும் மற்றொரு பிரதான பிரச்சினை போதைப்பொருள். எமது பிள்ளைகள் அதற்குப் பலியாகிவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே நாம் இருக்கிறோம்.

இதனால் குடும்பத் தகராறுகள் ஏற்படுகின்றன. போதைப்பொருள் பாவனையாளர்கள் காரணமாக வீதிகளில் நடப்பதற்கும், வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்வதற்கும் அச்சமாக இருக்கிறது.

போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். இது வரை அதிகாரத்தில் இருந்தவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள்.

பொலிஸாருக்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் இன்று சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம்.

இன்று பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்ய முடிகிறது. நீதிமன்றங்கள் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்கின்றன. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும், சட்டம் அனைவருக்கும் சமம். இருப்பினும் சட்டப் பாதுகாப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படாத இடங்கள் இன்னும் இருப்பதை நாம் அறிவோம்.

வன்முறைக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சட்டம் இன்னும் வினைத்திறனானதாக இருக்க வேண்டும். நாம் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இவ்வாறான வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பிள்ளைகளின் கல்வியில் நம்பிக்கை வைத்துத் தாய்மார்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்.

அதனால்தான் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஐந்து வருட இடைவேளையின் பின்னர் இந்த ஆண்டு நாம் பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துகிறோம்.

நிச்சயமாக அந்த ஆசிரியர்கள் வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். இன்னும் அதிபர்கள் முறையாக நியமிக்கப்படாத நிலைமை இருந்து வருகின்றது.

இந்த வெற்றிடங்கள் அனைத்தையும் நிரப்ப நாம் கடந்த ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அத்துடன் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரிய பாடசாலை, சிறிய பாடசாலை என்ற வேறுபாடு இல்லாது, அனைத்துப் பாடசாலைகளிலும் இருப்பது எமது பிள்ளைகளே என்ற சமத்துவ நிலைமையை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்வி வலையத்திலும் ஒரு பாடசாலையை நாம் அபிவிருத்தி செய்வோம். அந்தப் பாடசாலைகளைத் தெரிவு செய்து அனுப்புமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவித்திருக்கின்றோம்.

ஒவ்வொரு இரண்டாம் நிலை பாடசாலையிலும் ‘திறன் வகுப்பறை’ (Smart Class Room) ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் இந்த ஆண்டு முதல் முதலாம் தரத்திற்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் கல்வியை வழங்க ஆரம்பித்துள்ளோம்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே எம்மை மக்கள் ஆட்சிக்குக் கொண்டுவந்தார்கள், அதை நாம் செய்தே தீருவோம்.

பொருளாதாரத்திற்காகப் பெண்களே அதிகளவு உழைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கே மிகக் குறைந்த ஊதியம் கிடைக்கிறது.

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எனவே, வீட்டிலிருந்தே சுயதொழில் செய்வதற்கு அல்லது வேலையில் ஈடுபடும்போது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான பகல்நேர பராமரிப்பு மையங்கள் (Daycare Centers) உருவாக்கப்பட வேண்டும்” எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் உட்பட மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவிலான பெண்களும் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version