முன்னாள் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததிலிருந்து தனிப்பெரும் வல்லரசாக இஸ்ரேல் மற்றும் சியோனிச யூத சக்திகளின் தீய வடிவமைப்புகளைச் செயல்படுத்தி வரும் அமெரிக்கா, பல அரபு நாடுகளின் மீது படையெடுப்புக்களை நடத்தி, அந்த நாடுகளை அழித்துள்ளது.
எட்டு ஆண்டுகால ஈராக்-ஈரான் போரிலிருந்து தொடங்கி, குவைத் நெருக்கடி மற்றும் வளைகுடா போர் எண்ணெய் வளம் நிறைந்த மற்றும் அந்தக் காலப் பகுதியில் பெரும்பாலும் வளர்ச்சி கண்டிருந்த ஈராக், லிபியா மற்றும் சிரியா மீதான படையெடுப்புகள் மற்றும் அந்த நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் என இந்த அட்டகாசங்கள் தொடர்ந்தன.
இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இன்று காஸாவில் பலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து வருகின்றது. காஸா இப்போது கிட்டத்தட்ட ஒரு கல்லறையாகவும் தரிசு நிலமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
அரபு சர்வாதிகாரிகள் தங்கள் சொந்த மக்களையே காட்டிக் கொடுத்துள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், இன்றுள்ள இருபத்திரண்டு அரபு நாடுகளில் பதினொரு நாடுகளில் அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது என்று இப்போது அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
அமெரிக்க இராணுவ இருப்பு என்பது இஸ்ரேலிய இராணுவ இருப்பையும் சேர்ந்தே குறிக்கின்றது என்பதை இங்கு மறந்து விடக் கூடாது.
அமெரிக்க வெளியுறவு கவுன்ஸிலின் கூற்றுப்படி மத்திய கிழக்கு முழுவதும் குறைந்தது அமெரிக்காவின் 19 தளங்கள் உள்ளன.

பஹ்ரைனில் 9,000 அமெரிக்க துருப்புக்களுக்கு இடமளிக்கும் வகையில் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை பிரிவின் தலைமையகம் உள்ளது. வளைகுடா, செங்கடல், அரேபிய கடல், மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்தும் தலைமை இடமாக இது அமைந்துள்ளது.
Al Udeid Air Base
கத்தாரில் உள்ள அல்-உதைட் விமானத் தளம் (Udeid Air Base) சுமார் 10,000 துருப்புக்களுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.
இதுவே பிராந்தியத்தின் மிகப்பெரிய அமெரிக்கத் தளமாகும். டோஹாவின் புறநகரில் உள்ள பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள இந்த தளம்தான் செண்ட்காம் என்றும் அழைக்கப்படும் அமெரிக்க மத்திய கட்டளையின் தந்திரோபாய தலைமையகம் ஆகும். இந்த செண்ட்காமின் பொறுப்பில் தான் மத்திய கிழக்கு மற்றும் மத்திய மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகள் விடப்பட்டுள்ளன.
Kuwait-Camp Arifjan & ALi Salem Air Base
குவைத்தின் ஈராக் எல்லையில் அலி அல்-சேலம் விமானத் தளமும் உள்ளது. மற்றொரு குவைத் தளம் கேம்ப் பியூஹ்ரிங் ஆகும். இது ஈராக் மற்றும் சிரியாவுக்குச் செல்லும் பிரிவுகளுக்கான அமைவிடமாக இருந்து வருகின்றது. மொத்தத்தில் சுமார் 13,500 அமெரிக்க துருப்புக்கள் குவைத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 3,500 அமெரிக்க துருப்புக்களும் வொஷிங்டனும் அமீரகமும் பகிர்ந்து கொள்ளும் அல்-தஃப்ரா விமானத் தளமும் உள்ளன. இது ஐ.எஸ் குழுவுக்கு எதிரான பணிகளுக்காகவும் பிராந்தியத்தில் உளவு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஈராக்கில் அமெரிக்காவின் பொறுப்பில் அன்பார் என்ற இடத்தில் உள்ள ஐன் அல்-அசாத் விமானத் தளமும் இதில் அடங்கும். ஓரளவு தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்திஸ்தான் பிராந்தியத்தில் எர்பில் விமானத் தளமும் உள்ளது. இது பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
Saudi Arabia-Prince Sultan Air Base
இங்கு தலைநகர் றியாத்திற்கு அருகிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் ஒரு முக்கிய விமானப்படை மையமாகும்.
அங்குள்ள சொத்துக்களில் பேட்ரியாட் ஏவுகணை (வான்வழி எதிர்ப்பு ஏவுகணைகள்) மற்றும் அவற்றை இயக்கும் கருவிகள் என்பனவும் அடங்கும். இந்த தளம் மத்திய கிழக்கில் அதன் பணிகளுக்கு ஜோர்டானின் அஸ்ராக்கில் உள்ள முவாஃபாக் சால்டி விமானத் தளத்தை முக்கிய மையமாக பயன்படுத்துகின்றது. இது அமெரிக்காவின் 332 ஆவது விமான படைப் பிரிவை உள்ளடக்கியது.
Jordan-Muwaffaq Al Salti Air Base
துருக்கியில் மேலதிக தளமாக துருக்கியப் படைகளுடன் இணைந்து இயங்கும் முக்கிய தளம், தெற்கு அதானாவில் உள்ள இன்சிர்லிக் விமானத் தளமாகும். அந்த தளத்தில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சமீபத்தில் இந்தப் பிராந்தியத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்க சொத்துக்கள் என்ன?
தற்போது மத்திய கிழக்கில் சுமார் 40,000 அமெரிக்க துருப்புக்கள் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் கால் பகுதியினர் அல்-உதைட்டில் உள்ளனர். இங்கு போர் விமானங்கள், இராணுவ தாங்கிகள், வான்வழி எரிபொருள் நிரப்பும் வசதிகள், மற்றும் உளவுத்துறை சொத்துக்கள் என ஏராளமான வளங்கள் குவிக்கப்பட்டுள்ளன. பணியாளர்களைப் பொறுத்தவரை அடுத்த மிகப் பெரிய தளம் பஹ்ரைனில் உள்ள கடற்படைத் தளம் என்று கருதப்படுகின்றது.
தற்போது மத்திய கிழக்கிற்கு கடற்படை வலுவூட்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தென் சீனக் கடல் பகுதியில் இருந்து வெளியேறி தற்போது செண்ட்காம் பகுதியில் சேவையாற்றும் வகையில் அரபிக் கடல் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ள இராட்சத யூ.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் மத்திய கிழக்கு செயற்பாடுகளின் மையப்பகுதியாக இருக்கும்.
மேலும் இந்த கப்பலில் பல்வேறு வகையான தாக்குதல் விமானங்கள், இலத்திரனியல் யுத்த சாதனங்கள், மற்றும் (ரேடார்களை செயலிழக்க செய்யும்) ரேடார்-ஜாமிங் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், மிகவும் பலம் வாய்ந்த ஸ்டெல்த் ரக போர் விமானங்கள், மற்றும் அவற்றின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பல படைப்பிரிவுகள் என்பனவும் உள்ளன.
யூ.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் கப்பலில் 5,680 பணியாளர்கள் உள்ளனர். செண்ட்காம் பகுதியில் உள்ள யூ. எஸ்.எஸ் மெக்ஃபால், யூ.எஸ்.எஸ் மிட்சர் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள யூ.எஸ்.எஸ்.ரூஸ்வெல்ட் உள்ளிட்ட பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைகொண்டிருந்த கடற்படை கப்பல்களும் தற்போது இந்த அணியில் இணைந்துள்ளன. ஈரானை இலகுவாக தாக்கக்கூடிய தூரத்திற்குள் அமெரிக்கப் படைகள் மற்றும் தாக்குதல் விமானங்கள் ஆயுதங்கள் என்பன நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“கடற்படை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அமெரிக்க இராணுவம் அதன் தரை வழி செயற்பாடுகளையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தவும் தயாராகி வருகின்றது. எதிர்வரும் நாட்களில் ‘தாட்’ ரக வான்வழி பாதுகாப்பு முறையும் இணைத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக” இஸ்ரேலின் சேனல் 13 செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானில் உள்ள முவாஃபாக் சால்டி (Muwaffaq Salti Air Base) விமானத் தளத்தில் எவ்-15 ரக போர் விமானங்களின் ஒரு படைப்பிரிவைக் கட்டியெழுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திறந்த அடிப்படையில் பரவலாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய விமான கண்காணிப்பு தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
மத்திய கிழக்கை நோக்கி செல்லக்கூடிய இன்னும் பல வான்வழி நடவடிக்கைகள் குறித்த சமிக்ஞைகளும் வெளியாகி இருப்பதாக மேலும் தெரிய வந்துள்ளது.
இது மிகவும் சித்தரிக்கப்பட்ட ஏற்பாடுகளாகவும் தெரிகின்றது. கட்டார் ஊடாக ஈரான் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் டோஹாவும் மற்றும் வொஷிங்டனும் முன்கூட்டியே தங்களை நன்கு தயார் செய்து கொள்ள முடிந்தது. தனது எல்லைக்குள் ஈரான் மீண்டும் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்துவது குறித்து கட்டார் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றது.
Iran Has Big Military Presence On Ground, But Not In Air
ஈரான் மீது அமெரிக்கத் தாக்குதல் நடந்தால் செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக ‘அன்சார் அல்லா’ என்று அழைக்கப்படும் யேமனின் ஹவுத்திகள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் ஈராக்கில் ஈரான் ஆதரவு துணைப்படைகளும் அமெரிக்கர்களுக்கு எதிராக பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியுள்ளன. அது ஈராக் அல்லது ஜோர்டானில் உள்ள தளங்களை யுத்தத்துக்குள் பலவந்தமாக இழுத்து வரக்கூடும்.
பிரபலமான பிரிட்டிஷ் பத்தி எழுத்தாளர் டேவிட் ஹெர்ஸ்ட் ஈரானின் இருப்புக்கான யுத்தமானது அரபு உலகின் போராட்டமாகவும் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொருவரும், இஸ்லாமிய குடியரசுடன் அவர்களின் கடந்தகால வரலாறு எதுவாக இருந்தாலும், ஈரானைப் பாதுகாக்கவும் அதன் இறையாண்மையை உறுதிப்படுத்தவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.
ஆதிக்கம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக அரபு நாடுகள் நடத்தும் அதே போராட்டத்தை ஈரான் மிகப் பெரிய அளவில் எதிர்கொள்கின்றது.
காஸாவின் தாக்கம் இந்தப் பிராந்தியம் முழுவதும் உணரப்படுகின்றது. காஸாவே ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானுக்கு ஒரு இராணுவ தோல்வியாக அமைந்தது.
காஸாவின் விளைவு வேறு எதுவும் இல்லை. காஸாவை நசுக்கி மத்திய கிழக்கை மறுவடிவமைப்பதாக நெதன்யாஹு பலமுறை பல இடங்களில உறுதியளித்துள்ளார். இதற்காக அவர் அடிக்கடி “மத்திய கிழக்கின் முகத்தை மாற்றுகின்றார்” என்றும் இந்த மோதல் ஒரு “மறுபிறப்புக்கான போர்” என்றும் டேவிட் ஹெர்ஸ்ட் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தாக்குதலும் ஒரு விரிவான பிராந்திய மோதலைத் தூண்டும் என்று ஈரானின் ஆன்மிக தலைவர் ஆயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்
. “அவர்கள் ஒரு யுத்தத்தை தொடங்கினால் இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்பதே ஈரானின் இறுதி எச்சரிக்கையாகும்.
லத்தீப் பாரூக்