இஸ்ரேல் எப்போதும் ஈரானின் அணு திட்டம் யூத அரசுக்கு ஒரு  நிரந்தர அச்சுறுத்தல்” (existential threat) என வாதிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈரானின் மூன்று அணு தளங்களை குண்டுவீசி தாக்கியதற்கு பிறகு, தெல் அவீவும், வாஷிங்டனும் மீண்டும் மத்திய கிழக்கில் இதுவரை இல்லாத அளவிலான இராணுவப் படையணிகளை திரட்டிக் கொண்டு, தேஹ்ரானை அதன் அணு ஆயுதத் திட்டத்தை கலைக்க அழுத்தம் கொடுக்கின்றன.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இந்த இராணுவ திரட்டல், 2003 ஆம் ஆண்டு ஈராக் போருக்குப் பிறகு அந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய படை திரட்டலாகும். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் “கெட்ட விஷயங்கள் நடக்கும்” என்று ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

பல பாதுகாப்பு ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்த முன்னெப்போதும் இல்லாத இராணுவ திரட்டலைக் கருத்தில் கொண்டால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் அடுத்த கட்ட குண்டுவீச்சுகள் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதவை போல் தெரிகிறது.

ஆனால் உலகம் மத்திய கிழக்கில் இன்னொரு போருக்கான  முன் நிகழ்வுகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும்போது, இஸ்ரேல் ஏற்கனவே தனது அடுத்த இலக்காக பாகிஸ்தானை குறிவைத்திருக்கலாம்.

பாகிஸ்தான் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே முஸ்லிம் நாடாக மட்டுமல்லாமல், தனது அணு குண்டை அடிக்கடி “இஸ்லாமிய குண்டு” என்றும் விவரித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு அணு பரவல் (nuclear proliferation) தொடர்பாக மோசமான வரலாறு உள்ளது. ஈரான், லிபியா, வட கொரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அணு தொழில்நுட்பத்தை கசிந்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதோடு, அணு ஆயுதத்தை எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்துவதாக அடிக்கடி மிரட்டும் ஒரே அணு சக்தி நாடு என்ற பெயரையும் பாகிஸ்தான் பெற்றுள்ளது.

பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் வழங்கியதாகக் கூறப்படும் அரச ஆதரவு, அதன் பொருளாதார அசாதாரண நிலை, மேலும் சமீபத்தில் சவுதி அரேபியாவுடன் கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் — இதன் மூலம் சவுதிக்கு அணு பாதுகாப்பு குடை (nuclear umbrella) வழங்கப்படலாம் என்ற ஊகங்கள் — ஆகியவை பாகிஸ்தானின் அணு ஆயுதக் களஞ்சியத்தை மேலும் சிக்கலாக்குகின்றன.

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி ஆகியவை முன்னெடுக்கும் “இஸ்லாமிய நேட்டோ” பற்றிய பேச்சுவார்த்தைகள், மேலும் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களால் அது பாதுகாக்கப்படும் என்ற கருதுகோள், மிகவும் ஆபத்தான ஒன்றாக மாற்றுகின்றன.

இத்தகைய “இஸ்லாமிய நேட்டோ” முக்கியமாக இஸ்ரேலை குறிவைத்து செயல்படும், மேலும் அது ஈரானின் அணு திட்டம் அளவுக்கு ஆபத்தான ‘நிரந்த அச்சுறுத்தல்” ஆக மாறும் என்ற சந்தேகம் தெல் அவீவுக்கு உள்ளது.

உண்மையில், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்தை இஸ்ரேல் நீண்டகாலமாக உணர்ந்துள்ளது.

1980களில், பாகிஸ்தானின் அணு திட்டத்தை குண்டுவீசி அழிக்க இந்தியாவுடன் சேர்ந்து ஒரு ரகசியத் திட்டத்தையும் இஸ்ரேல் தீட்டியிருந்தது.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை நோக்கி இஸ்ரேலின் கவனம்

முன்னாள் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் சமீபத்தில், துருக்கி, கட்டார், முஸ்லிம் பிரதர்ஹூட் மற்றும் அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய கூட்டு உருவாகி வருவதாக கூறினார்.

அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களின் மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த கூட்டணி இஸ்ரேலுக்கு எதிரான பகையை அதிகரித்து வருவதாக எச்சரித்தார்.

“துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகான் ஆபத்தான எதிரி. அவர் இஸ்ரேலை சுற்றிவளைக்க முயற்சிக்கிறார். நாம் கண்மூடி இருக்கக்கூடாது,” என்றார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சுட்டிக்காட்டிய அவர், “முஸ்லிம் பிரதர்ஹூட் ( the Muslim Brotherhood) அச்சு, பாகிஸ்தானின் அணு ஆயுத ஆதரவுடன், துருக்கியால் முன்னெடுக்கப்படுகிறது,” என்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ‘மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்’ ஒன்றில் கையெழுத்திட்டன. “ஏதேனும் ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் இரு நாடுகளுக்கும் எதிரானதாக கருதப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது, பாகிஸ்தான் தனது அணு பாதுகாப்பு குடையை சவுதிக்கு நீட்டித்திருக்கலாம் என்ற கருத்தை உருவாக்கியது.

சில பாதுகாப்பு நிபுணர்கள் இந்த ஒப்பந்தத்தை “அணு பரவல் நேரக்குண்டு” (proliferation time bomb) என்று கூட விவரித்தனர்.

மேலும், கடந்த ஆண்டு  ஈரான்-இஸ்ரேல் மோதலின் போது, ஈரானின் IRGC தளபதி மொஹ்சென் ரெசாயி, “இஸ்ரேல் அணு ஆயுதம் பயன்படுத்தினால், பாகிஸ்தான் இஸ்ரேலை அணு ஆயுதத்தால் தாக்கும்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின.

பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி அப்துல் கதிர் கான் தலைமையில் நடந்த உலகளாவிய கரும்பழை வலையமைப்பு, ஈரான், லிபியா, வட கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அணு தொழில்நுட்பம் பரவ வழிவகுத்தது.

இந்த வரலாறு காரணமாகவே, பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை இஸ்ரேல் நீண்டகாலமாக தனது இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதி வருகிறது.

1980களில், இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானின் கஹூட்டா அணு நிலையத்தை தாக்க ஒரு ரகசியத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் கடைசிநேரத்தில் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

அந்த தாக்குதல் நடந்திருந்தால், ஈரானின் அணு திட்டமே உருவாகியிருக்காது என்று சிலர் கருதுகின்றனர்.

இவ்வாறு, பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை இஸ்ரேல் நீண்டகாலமாக கவலைக்குரிய அச்சுறுத்தலாகவே பார்த்து வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version