1979 செப்டம்பர் 30...சென்னை கடற்கரையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம். தன் ஆட்சியைக் கலைத்த, தன் கட்சியினரை மிசாவில் கைதுசெய்து சிறையில் சித்ரவதை செய்த, சர்க்காரியா கமிஷன் அமைத்து தன் இயக்கத்துக்கு நெருக்கடியைக் கொடுத்த இந்திரா காந்தியுடன் ஒரே மேடையில் தோன்றினார் கருணாநிதி.

‘இரண்டே ஆண்டுகளில் அரசியலில் இவ்வளவு பெரிய மாற்றமா?’ எனத் தமிழக மக்கள் ஆச்சர்யப்பட்டனர்!

‘நேருவின் மகளே வருக..!

‘டெல்லியில் கேலிக்கூத்து நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை. அங்கு, ஒரு நல்ல அரசு… நிலையான அரசு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று அந்த மேடையில் முழங்கிய கருணாநிதி,

‘நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக!’ என்று இந்திரா காந்தியை வாஞ்சையோடு வரவேற்றார். அந்த மேடையில், அவசரநிலைக் காலத்தில் தான் செய்த குற்றங்களுக்காக, இந்திரா காந்தி மன்னிப்புக் கோரினார்.

`அத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாது’ என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.
‘டெல்லியில் நடைபெறும் கேலிக்கூத்து’ என்று கருணாநிதி குறிப்பிட்டது, மொரார்ஜி தேசாயின் ஆட்சியைத்தான்.

‘இரண்டாவது சுதந்திரம்’ என்றெல்லாம் சொல்லி ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஜனதா கட்சியின் ‘புரட்சி’ சாயம் விரைவிலேயே வெளுத்தது.

ஜனதாவில் இருந்த சோசலிஸ்ட் கோஷ்டி சரண் சிங்கை ஆதரித்தது. இன்னொரு புறம், மொரார்ஜி தேசாயை இந்துத்துவா கோஷ்டி ஆதரித்தது.

இரட்டை உறுப்பினர் பிரச்னையும் அப்போது வெடித்தது. ஜனதா கட்சியில் ஐக்கியமாகியிருந்த ஜனசங்கத்தினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தனர்.

‘ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத்தான் அவர்கள் விசுவாசமாக இருக்கிறார்கள். அந்த எம்.பி-க்களையும் அமைச்சர்களையும் ஆர்.எஸ்.எஸ் இயக்குகிறது’ என்ற பிரச்னை கிளம்பியது.

‘ஆர்.எஸ்.எஸ் தொடர்பைத் துண்டியுங்கள்’ என சோசலிஸ்ட்டுகள் குரல் எழுப்பினர். அதற்கு, ‘ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாசார அமைப்பு’ என்று இந்துத்துவாவினர் பதில் கொடுத்தனர்.

இதனால் ஜனதா கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. சரண் சிங், ராஜ் நாராயண் உள்ளிட்டோர் ‘மதச்சார்பற்ற ஜனதா கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்கள். ஜனதா கட்சிக்குச் சிக்கல் அதிகரித்தது.

இரண்டரை ஆண்டுகள்கூட முழுமையடையாத நிலையில், பதவியிலிருந்து இறங்கினார் மொரார்ஜி தேசாய். ‘காங்கிரஸை ஒழித்துக் கட்டுவோம்’ என்று ஜனதா கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவரான சரண் சிங், அதே காங்கிரஸின் துணையுடன் பிரதமர் நாற்காலியைப் பிடித்தார்.

தஞ்சையில் இந்திரா காந்தி?

இந்திரா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். சில காரணங்களைச் சொல்லி அவரது பதவியைப் பறித்தது மொரார்ஜி தேசாய் அரசு. அந்த நேரத்தில், எஸ்.டி.சோமசுந்தரத்தைத் தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர் சேர்த்தார்.

அதனால், தஞ்சை தொகுதி எம்.பி பதவியை எஸ்.டி.எஸ் ராஜினாமா செய்தார். அதையடுத்து தஞ்சையில் ஜூன் மாதம் இடைத்தேர்தல் வந்தது.

அதில், இந்திரா காந்தியை நிறுத்துவதற்கு காங்கிரஸார் விரும்பினர். தஞ்சையில் போட்டியிட்டால் இந்திரா காந்திக்கு ஆதரவு தருவோம்’ என்று எம்.ஜி.ஆர் உறுதியளித்தார். இந்திராவும் ஆர்வத்துடன் இருந்தார்.

ஆனால், அந்த ஆட்டத்தைக் கலைக்க நினைத்த மொரார்ஜி தேசாய், திடீரென எம்.ஜி.ஆரை டெல்லிக்கு அழைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆரின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. தஞ்சையில் போட்டியிடும் எண்ணத்தை இந்திரா கைவிட்டார்.

ஆனாலும், சிங்கார வடிவேலு என்ற வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தியது. அ.தி.மு.க தனது வேட்பாளரை நிறுத்தாமல், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது. அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து, பெரும் வெற்றியைப் பெறச் செய்தார் எம்.ஜி.ஆர்.

ஆனாலும், காங்கிரஸாருக்கு எம்.ஜி.ஆர் மீதான கோபம் தணியவில்லை. மத்தியில் இரு அமைச்சர்கள்! மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்களுடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை. அதனால்தான், மொரார்ஜி தேசாய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை அ.தி.மு.க அளித்தது.

சரண் சிங் பிரதமரானவுடன், தனது ஆதரவு நிலையை அ.தி.மு.க மாற்றிக்கொண்டது. அது மட்டுமல்ல, சரண் சிங் அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறவும் செய்தது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த சத்தியவாணி முத்து மத்திய சமூக நலத்துறை அமைச்சராகவும், அரவிந்த பாலா பழனூர் பெட்ரோலியம், ரசாயனம், உரங்கள்துறை அமைச்சராகவும் இருந்தார்கள்.

முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற வரலாறு அது.

சரண் சிங் பிரதமராக வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. திடீரென ஆதரவை வாபஸ் பெற்றார் இந்திரா காந்தி. சரண் சிங் ஆட்சி கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, 1980, ஜனவரியில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதுவரை சரண் சிங் அரசு, காபந்து அரசாக நீடித்தது. தமிழகத்தில் காங்கிரஸும் தி.மு.க-வும் கைகோத்துக் களமிறங்கின.

Morarji Desai with Charan Singh

மொரார்ஜி தேசாயும் சரண் சிங்கும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், மத்தியில் சரண் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அ.தி.மு.க., மக்களவைத் தேர்தலில் மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சியுடன் கூட்டணிவைத்தது. எரிச்சலடைந்த சரண் சிங், அ.தி.மு.க-வின் இரு அமைச்சர்களையும் ராஜினாமா செய்யச் சொன்னார்.

1980, ஜனவரி 3, 6 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல். ஒருபுறம் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி. இன்னொரு புறம் அ.தி.மு.க தலைமையில் ஜனதா கட்சி, சி.பி.எம்., சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற அணி. பெரும் பரபரப்புடன் நடைபெற்ற அந்தத் தேர்தலில், காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது.

காங்கிரஸ் 20 இடங்களிலும், தி.மு.க 16 இடங்களிலும், முஸ்லிம் லீக் ஓர் இடத்திலும் வெற்றிபெற்றன. அ.தி.மு.க-வுக்கு இரண்டு இடங்கள்தான் கிடைத்தன.

தேசிய அளவில் 351 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. ஜனதா கட்சிக்கு 32 இடங்களே கிடைத்தன. சரண் சிங் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா கட்சிக்கு 41 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 35 இடங்களும் கிடைத்தன.

திரை வேறு, களம் வேறு!

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க., மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. சரிவை எப்படிச் சரிசெய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர்., சில அதிரடியான முடிவுகளை எடுத்தார். அவற்றில் ஒன்று, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் அரசாணையை ரத்துசெய்யும் முடிவு.

அதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்…‘பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பயன்பெற, குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.9,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்’ என்று 1979, ஜூலை 2-ம் தேதி அரசாணை வெளியிட்டது எம்.ஜி.ஆர் அரசு. அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அ.தி.மு.க-வுக்கு உள்ளேயும் அதிருப்தி இருந்தது.

‘ஆரிய மாயை எழுதிய அண்ணாவின் பெயரில் கட்சியையும் கொடியையும் வைத்துக்கொண்டு, இட ஒதுக்கீட்டில் கைவைக்கலாமா?’ என்ற கேள்வியும் எழுந்தது. ‘

சமூகரீதியிலான ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண, பொருளாதாரரீதியில் அளவுகோல் வைப்பது தவறு’ என்று தி.மு.க-வும் தி.க-வும் போராட்டத்தில் குதித்தன. அந்த அரசாணையை எரித்து, சாம்பலைத் தமிழக அரசுக்கு அனுப்பினார்கள்.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்று நினைத்த எம்.ஜி.ஆர்., இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை ரத்துசெய்தார்.

அத்துடன், 31 சதவிகிதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, 50 சதவிகிதமாக உயர்த்தும் முடிவையும் எம்.ஜி.ஆர் அரசு எடுத்தது.

புகை, மது போன்ற தீய பழக்கங்களுக்கு எம்.ஜி.ஆர் எதிரானவர் என்பதை அவரது திரைப்படங்களில் பார்க்கலாம்.

அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் தலைமையிலான அரசு, மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மது அருந்துவதற்கான வயதை 40-லிருந்து 30-ஆகக் குறைத்து,

அரசின் விதிகளை மாற்றியது. மேலும், `தனியார் விடுதிகளில் மது அருந்தினால் இனிமேல் காவல்துறை நடவடிக்கை எடுக்காது’ என்ற அறிவிப்பும் வெளியானது. திரை வேறு களம் வேறு என்று தமிழக மக்கள் உணர்ந்த தருணம் அது.

`நாங்கள் என்ன தவறு செய்தோம்?’

மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று 1980, ஜனவரி 14-ல் மீண்டும் பிரதமராக அரியணை ஏறினார் இந்திரா காந்தி. தனது அதிரடியையும் அவர் காண்பிக்கத் தொடங்கினார். அ.தி.மு.க அரசு உட்பட காங்கிரஸ் அல்லாத ஒன்பது மாநில அரசுகள் ஒரே நேரத்தில் கலைக்கப்பட்டன.

தனது அரசு கலைக்கப்பட்டது என்ற செய்தி எம்.ஜி.ஆர் தலையில் இடியென இறங்கியது. அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க மீண்டும் அரியணையில் அமர வேண்டும் என்று தீவிரமாகக் களமிறங்கினார்.

1980, மே 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் என அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க அரசின் சாதனைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, ‘இது தவறா… இது தவறா?’ என்ற கேள்வியை அ.தி.மு.க எழுப்பியது. ‘

நாங்கள் என்ன தவறு செய்தோம்?’ என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றினார் ஆர்.எம்.வீரப்பன். அந்த உரையைப் பதிவுசெய்து, தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர் மன்றத்தினர் ஒலிக்கச் செய்தார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அளித்த தீர்ப்பு தவறு என்றால், அதை இப்போது திருத்தி எழுதுங்கள். புரட்சித்தலைவருக்கு வாக்களியுங்கள்’ என்று ஆர்.எம்.வீரப்பனின் குரல் தமிழக வாக்காளர்களின் மனதில் ஆழமாக ஊடுருவியது.

பெரும் பரபரப்புடன் தேர்தல் நடைபெற்றது. தீர்ப்பைத் திருத்தி எழுதினார்கள் தமிழக வாக்காளர்கள். இரண்டாவது முறையாக அரியாசனத்தில் அமர்ந்த எம்.ஜி.ஆர்., ஆவேசத்துடன் ஒரு வேட்டைக்குத் தயாரானார்!

(இன்னும் அறிவோம்)

ஆ.பழனியப்பன்

“தி.மு.க-வை அடித்த காங்கிரஸ்… காங்கிரஸை அணைத்த தி.மு.க! (தமிழக தேர்தல் வரலாறு-16)

Share.
Leave A Reply

Exit mobile version