நகைக் கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளைக்கார கும்பல், ஒரு நிமிடத்திற்குள் சுமார் ரூ.16 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு அமெரிக்காவின் நகைக்கடை ஒன்றில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. காலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபிரீமாண்ட் பகுதியில் உள்ள குமார் ஜூவல்லர்ஸ் எனும் நகைக்கடையில்தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

ரூ.15.7 கோடி மதிப்பிலான நகை கொள்ளை

இந்திய – அமெரிக்க குடும்பம் நடத்தும் இந்த நகைக்கடையில், பல கொள்ளையர்கள் சேர்ந்து 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.15.7 கோடி) மதிப்பிலான தங்க நகைகளை வெறும் ஒரு நிமிடத்தில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி நடந்திருக்கிறது. ஆனால் அதன் வீடியோவை தற்போதுதான் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.
80 சதவீத நகையை அள்ளிய கொள்ளையர்கள்

நகைக்கடையை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 75 முதல் 80 சதவீத நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

தற்போது வரை போலீசாரிடம் நான்கு பேர் மட்டுமே சிக்கியிருக்கும் நிலையில், இன்னும் பல பேர் சிக்காமல் தலைமறைவாகி உள்ளனர்.

மேலும், 20க்கும் மேற்பட்டோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் அனைவரும் முகத்தை மறைத்து கருப்பு நிறத்தில் முகமூடி அணிந்திருந்ததையும் வீடியோவில் பார்க்க முடிந்தது.

திருட்டு காரில் தப்பிச் சென்றனர்

கொள்ளையர்கள் அவர்களின் கையில் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடனும், தோள் பையுடனும் வந்தனர்.

கொள்ளையர்கள் அங்கிருந்த கண்ணாடி பெட்டிகளை உடைத்து, விறுவிறுவென அங்கிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை எடுத்து தங்களின் பைக்களில் நிரப்பிக்கொண்டதையும் வீடியோவில் பார்க்க முடிந்தது.

சம்பவ இடத்தில் இருந்து கொள்ளையர்கள் தப்பிப்பதற்கு, தாங்கள் திருடிய கார்களையே பயன்படுத்தினர்.

இதனாலும் விசாரணை அதிகாரிகளால் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. திருடப்பட்ட கார்களின் லைசன்ஸ் பிளேட்டை வைத்து திருடர்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மொத்தம் 3-4 கார்களில் கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.

வைரலாகும் வீடியோ

சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும், எந்த காரை பின்தொடர்வது என போலீசார் குழம்பியுள்ளனர்.

அவர்கள் கருப்பு நிற கார் ஒன்றை துரத்தி உள்ளனர். குடியிருப்பு பகுதிகளை தாண்டி அவர்கள் அந்த காரை பின்தொடர்ந்துள்ளனர்.

பின்தொடர்தலின் போது, கருப்பு நிற கார் சாலையின் தவறான திசையில் மற்ற வாகனங்களை கடந்து சென்றது. பல ஜங்ஷன்களில் சிக்னல் மீறியும் அந்த கார் பறந்தது. அந்த கார் மணிக்கு சுமார் 80 மைல் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை போலீசார், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என கூறி 19 வயது மற்றும் 20 வயதுடைய நான்கு பேர் கைதான நிலையில், அதில் இரண்டு பேரை போலீசார் பின்னர் விடுவித்துள்ளது. இன்னும் பலரை கைது செய்யவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version