இந்தியா இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக, 4 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டைத் தாண்டி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் பாதையில் பயணிக்கும் வேளையில், அதன் முதுகெலும்பாகத் திகழ்வது தொழில்நுட்பமும், ஸ்டார்ட்அப் (Startup) கலாசாரமுமாகும்.
இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாகவும், இந்தியாவின் ‘சிலிக்கன் வெலி’ கனவின் நனவாகவும் ஹைதராபாத்தில் அமைந்துள்ள T-Hub விளங்குகிறது.
தெலுங்கானா அரசின் தொலைநோக்குப் பார்வையில் உருவான இந்த நிறுவனம், வெறும் ஒரு கட்டிடம் மட்டுமல்ல; அது இந்தியாவின் வருங்காலத் தொழில்முனைவோருக்கான ஒரு உலகளாவிய ஏவுதளம் ஆகும்.
சமீபத்தில் இந்த நிறுவனத்துக்கு நேரில் சென்று பார்வையிட கிடைத்த சந்தர்ப்பத்தின்போது இதன் பிரம்மாண்டமும் செயல்பாடுகளும் உலகத்தரம் வாய்ந்தவை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
T-Hub என்றால் என்ன?
T-Hub என்பது ஒரு புத்தாக்க இடைநிலை அமைப்பு (Innovation Intermediary) மற்றும் வர்த்தக தளமாகும். . இதன் பொருள் என்னவென்றால், அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகிய மூன்றும் இணைந்து செயல்படும் ஒரு தனித்துவமான தளம் என்பதாகும்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் 5-ம் திகதி, தெலுங்கானா ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், ரத்தன் டாடா மற்றும் தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோரால் இதன் முதல் கட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இது தெலுங்கானா அரசு மற்றும் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIIT-H, ISB மற்றும் NALSAR ஆகியவற்றின் கூட்டாண்மையில் இயங்குகிறது.

பிரம்மாண்டமான கட்டமைப்பு
ஹைதராபாத்தின் ராய்துர்க் பகுதியில் அமைந்துள்ள T-Hub 2.0, சுமார் 5,85,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. இது ஒரே நேரத்தில் 1,000 ஸ்டார்ட்அப்களைத் தாங்கும் திறன் கொண்டது. இது வெறும் அலுவலக இடம் மட்டுமல்ல, ஒரு முழுமையான சுற்றுச்சூழல்
இங்கு 9 சிறப்பம்ச மையங்கள் உள்ளன. குறிப்பாக, 6-வது தளத்தில் அமைந்துள்ள ‘Google for Startups’ போன்ற வசதிகள் சர்வதேசத் தரத்திற்கு இணையானவை. வன்பொருள் (Hardware) சார்ந்த புதுமைகளுக்காக ஆசியாவிலேயே மிகப்பெரிய முன்மாதிரி ஆய்வகமான T-Works இதன் ஒரு அங்கமாகச் செயல்படுகிறது. பெண்களுக்காகப் பிரத்யேகமாக WE Hub எனும் அமைப்பு செயல்பட்டு, பெண் ஆளுமைகளை ஊக்குவிக்கிறது.
ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் விதை முதல் விருட்சம் வரையிலான அனைத்து நிலைகளிலும் T-Hub துணை நிற்கிறது. இதற்காகப் பல்வேறு பிரத்யேகத் திட்டங்களை அது செயல்படுத்துகிறது. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திடம் ஒரு அடிப்படைத் தயாரிப்பு இருக்கும்போது, அதை எப்படி வணிக ரீதியாக வெற்றிகரமாக மாற்றுவது, வாடிக்கையாளர்களை எப்படிக் கண்டறிவது போன்ற ஆலோசனைகளை இது வழங்குகிறது.
முக்கிய திட்டங்கள்
T-Hub – பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள Startups க்காக தனிப்பட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது:
Bridge – ஒரு யோசனை மட்டுமே கொண்ட தொழில்முனைவோருக்கான திட்டம்.
Lab32 – குறைந்தபட்ச செயல்படும் மாதிரி (MVP) கொண்ட நிறுவனங்களை வணிகமயமாக்க உதவும் திட்டம்.
T-Angel – Pre-Seed அல்லது Series A நிதி திரட்டும் நிறுவனங்களுக்கு முதலீட்டு தயாரிப்பு ஆதரவு.
T-Bridge – இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கிடையே நிறுவனங்களை விரிவுபடுத்தும் சர்வதேச பிரிவு.
India-Dehko – மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஒரு வார புதுமை அனுபவ திட்டம் போன்வற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகரும் பயணத்தில், T-Hub ஒரு முக்கியமான எஞ்சினாகச் செயல்படுகிறது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களை ஆதரித்துள்ள T-Hub, அந்த நிறுவனங்கள் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹16,000 கோடிக்கும் மேல்) நிதியைத் திரட்ட உதவியுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய தொழில்நுட்பங்களில் ஆதிக்கம்
வழக்கமான தகவல் தொழில்நுட்ப சேவைகளைத் தாண்டி, இந்தியா உயர் தொழில்நுட்பங்களில் கால்தடம் பதிக்க T-Hub காரணமாகிறது: இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி ராக்கெட் நிறுவனமான Skyroot Aerospace, T-Hub-ல் வளர்ந்த ஒரு பெருமைக்குரிய நிறுவனம்.செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், விவசாயம், பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளில் புதுமைகளைப் புகுத்தி வருகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மின்னணுவியல் அமைச்சகம் போன்ற அரசு அமைப்புகளுடன் இணைந்து இது ஸ்டார்ட்அப் திட்டங்களை நடத்துகிறது. மேலும், 600-க்கும் மேற்பட்ட உலகளாவிய பெரு நிறுவனங்களுடன் இணைந்து புதுமையான தீர்வுகளை உருவாக்குகிறது.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் விரிவாக்கம்
T-Hub இன்று ஒரு சர்வதேச ஆலோசகராக மாறியுள்ளது. நேபாளத்தின் 1காத்மாண்டுவில் ஒரு புதிய புத்தாக்க மையத்தை உருவாக்க நேபாள அரசுக்கு T-Hub மூன்று வருடத் திட்டத்தின் கீழ் உதவி வருகிறது. பிஜி ஜகார்த்தா போன்ற இடங்களிலும் தனது சேவைகளை விரிவுபடுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இஸ்ரேல், ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளின் ஸ்டார்ட்அப்களுக்கு இந்தியச் சந்தைக்கான நுழைவுப் பாதையாக இது அமைகிறது.
எதிர்காலத் திட்டங்கள்
எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, IMAGE Tower என்ற பிரம்மாண்டமான கட்டமைப்பை T-Hub உருவாக்கி வருகிறது. இது அனிமேஷன், விசுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (AVGC-XR) ஆகிய துறைகளுக்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் படைப்புத் திறன் சார்ந்த பொருளாதாரத்தை (Creative Economy) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
இது குறித்து கருத்து வெளியிட்ட டீ ஹப் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாக சேது சர்மா ‘’காத்மாண்டுவில் ஒரு புத்தாக்க மையத்தை (Hub) உருவாக்குவதற்காக நேபாள அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதுடன், இந்தோனேசியாவுடனும் (ஜகார்த்தா) இதேபோன்ற திட்டங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா போன்ற பிற இந்திய மாநிலங்கள் இதேபோன்ற கண்டுபிடிப்பு நிலப்பரப்புகளை உருவாக்குவதற்கும் உதவி வருகிறது.
இந்த மாநிலத்தை நாட்டின் மிகவும் புதுமையான (Innovative) மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தது… அரசாங்கமும் அதன் தலைமையும்தான் அமர்ந்து சிந்தித்து, இதனை மிகவும் புதுமையான மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தனர்.” என்று குறிப்பிட்டார்.
அங்கீகாரமும் வெற்றியும்
T-Hub-ன் சிறப்பான செயல்பாட்டிற்காக, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) இதனை 2023-ன் சிறந்த தொழில்நுட்ப வணிக இன்குபேட்டர் என்று விருது வழங்கியுள்ளது. அதேபோல, 2022-ல் DPIIT அமைப்பால் இந்தியாவின் சிறந்த இன்குபேட்டராக இது அங்கீகரிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் பின்னணியில் தெலுங்கானா அரசின் உறுதியான தலைமை உள்ளது. அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களின் மிகப்பெரிய அலுவலகங்களைத் தன்பால் ஈர்த்த தெலுங்கானா மாநிலம், இன்று “இந்தியாவின் மிகவும் புதுமையான மாநிலம்” (Most Innovative State) என்ற நிலையை அடைய T-Hub ஒரு முக்கியமான காரணியாகும்.
இதேவேளை டீ ஹப் நிறுவனம் இலங்கையுடனும் இணைந்து பணியாற்றுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட சர்வதேசத் திட்டங்களின் மேலாளர் சேது சர்மா
“பிராந்திய புத்தாக்கச் சூழலில் இலங்கை ஒரு முக்கியப் பங்காளியாகத் தொடர்ந்து நீடிக்கிறது, இருப்பினும் சில முன்முயற்சிகள் வெளிப்புறக் கட்டுப்பாடுகளைச் சந்தித்துள்ளன,” என்று தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட எங்களது மையம், நிலைத்தன்மை சார்ந்த இலங்கை ஸ்டார்ட்அப்களை வரவேற்று, அவர்கள் பிராந்திய அளவில் விரிவடைவதற்கு உதவியது. இந்த ஆண்டு, இந்தியாவின் சிக்கலான வணிகச் சூழலைப் புரிந்துகொண்டு செயல்பட, மேலும் 10 இலங்கை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க T-Hub எதிர்பார்க்கிறது.” என்று சேது சர்மா குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகர் குறித்தும் டீ ஹப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற கடந்தகாலங்களில் முயற்சிக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கான சாத்தியம் கிடைக்கவில்லை.
கொழும்பு துறைமுக நகர் உட்பட இலங்கையிலிருந்து, T-Hub-ன் கிளையை அமைப்பதற்கான ஆர்வத்துடன் எங்களை அணுகினர். அவர்களின் நோக்கம் நேர்மறையானதாக இருந்தாலும், பல்வேறு வெளிப்புற உணர்திறன் காரணங்களால் (External Sensitivities) எங்களால் அதைத் தொடர முடியவில்லை. இத்தகைய முடிவுகள் வெறும் வணிக ரீதியானது மட்டுமல்ல, பரந்த மூலோபாயக் காரணிகளையும் உள்ளடக்கியது,” என்று சேது சர்மா விளக்கினார்.
“இருப்பினும், இந்தியாவிற்குள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் இலங்கை நிறுவனர்களுக்கு நாங்கள் தீவிரமாக ஆதரவளித்து வருகிறோம். அந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்று சேது சர்மா விளக்கமளித்தார்.
“தொழில்முனைவோரே பிரபஞ்சத்தின் மையம்” என்ற உன்னத நோக்கத்துடன் செயல்படும் T-Hub, இன்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியத் தூணாக உள்ளது. நாங்கள் நேரில் பார்த்த அந்தப் பிரம்மாண்டமான வளாகம், வெறும் சிமெண்ட் மற்றும் கண்ணாடியால் ஆன கட்டிடம் அல்ல; அது ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் ஒரு தொழிற்சாலை.
அரசு, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் கைகோர்த்தால் என்ன மாதிரியான புரட்சியைச் செய்ய முடியும் என்பதற்கு T-Hub ஒரு உலகளாவிய முன்னுதாரணம். இந்தியாவின் வருங்காலப் பொருளாதாரம் என்பது கச்சாப் பொருட்களைச் சார்ந்ததல்ல, அது ‘அறிவைச் சார்ந்தது’ என்பதை T-Hub நிரூபித்து வருகிறது.
-ரொபட் அன்டனி-