அன்பார்ந்த வாசகர்களே!

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்களின் நூலின் தமிழாக்கத்தை படிக்கும் உங்களின்
கவனத்திற்குச் சில வார்த்தைகள்.

அவரது நூலில் பல அரசுத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் தவிர்த்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. இக் கட்டுரையை முதன் முதலாக ஒருவர் படிக்கும்போது அந்த முக்கியமான தலைவர்கள் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே தெரியாத ஒருவர் இதனைப் படிக்கும்போது இப் பிரச்சனை பெரும் சிக்கலைக் கொடுக்கலாம்.

எனவே அவ்வாறான பிரச்சனையைத் தவிர்க்கும் விதத்தில் முடிந்த வரையில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்பதை தர முயற்சிக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

இனி கடந்த பகுதியில் ஏ 9 பாதையில் மிகவும் கடுமையான போர் இடம்பெற்றிருந்த நிலையில் 1998 ம் ஆண்டு நடுப்பகுதியில் கனகராயன் குளம் கைப்பற்றப்பட்ட செய்தியைப் பார்த்தோம்.

இந்த இடம் கைப்பற்றபட்ட நிலையில் மேலும் மாங்குளத்தை நோக்கி உந்தித் தள்ளும்; நோக்கில் ஏ 9 பாதையில் புறப்பட்ட வேளையில் ராணுவம் வேறுபல இடங்களில் பல பிரச்சனைகளை எதிர் நோக்கியது.

விடுதலைப்புலிகள் கிளிநொச்சியின் வடக்குப் பகுதியில் தாக்குதலை நடத்தி 500 பேர் கொண்ட ராணுவத்தினரைத் தனிமைப்படுத்தி சுற்றி வழைத்தனர். பல மணி நேரங்கள் தாக்குதல்கள் நீடித்த போதிலும் அந்த தனிமைப்படுத்தப்பட்ட ராணுவத்தினருடன் ராணுவத்தினரை இணைக்க முடியவில்லை.

ராணுவம் பரந்தனை நோக்கிப் பின்னோக்கிச் சென்றது. இப் பிரதேசம் கிளிநொச்சியிருந்து வடக்கு நோக்கி 7 கிலோமீற்றரில் உள்ளது.

இவ்வாறு பின்னோக்கிச் சென்றதால் அந்த 500 ராணுவத்தினரில் 300 பேர்; காணாமல் போயினர். இது போரின் போது ஏற்பட்ட பாரிய இழப்புகளில் ஒன்றாகும்.

வடக்கில் விடுதலைப்புலிகள் பலமாக இருந்த நிலையில் 1998ம் ஆண்டு டிசெம்பர் மாதம் மாங்குளம் பலத்த போரின் பின்னர் சரத் பொன்சேகா தலைமையிலான படைப்பிரிவால் கைப்பற்றப்பட்டது.

இவ் வெற்றி பல எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்தது. பலர் வெற்றிக்கான கதவு திறக்கப்பட்டுள்ளதாக கருதினர்.

இருப்பினும் யதார்த்தம் வேறுவிதமாக அமைந்தது. ஏ 9 பாதை நெடுகிலும் ராணுவத்தை நிறுத்த
வேண்டியேற்றபட்டதால் தொகை அளவில் மிகச் சிறிய தொகையினரே பாதுகாப்பில் இருந்தனர்.

இதனால் அவர்களின் பாதுகாப்பு பெரும் ஆபத்துள்ளதாகவே அமைந்தது. இந்த
ஆபத்தை சரத் பொன்சேகா அப்போது நாட்டின் தலைவராகச் செயற்பட்ட சந்திரிகாவுக்கு எடுத்துரைத்தார்.

மாங்குள வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கட்டளை அதிகாரிகளின் பொறுப்புகளில் மாற்றம்
செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் அங்கு காணப்பட்ட அரசியல் தலையீடுகளாகவே அமைந்தன.

சரத் பொன்சேகா அங்கிருந்து திருகோணமலை காரியாலயத்திற்கு கட்டளைத் தளபதியாக மாற்றம் பெற்றார். ஓப்பீட்டு அடிப்படையில் அப் பகுதியை சற்று அமைதியான பகுதி எனலாம்.

இந்த பதவிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால் ஏ 9 பாதையில் காணப்பட்ட முன்னேற்றங்கள் தடைப்பட்டன.

அங்கிருந்து வெளியான செய்திகளை அவதானிக்கையில் பல தளபதிகள் ஆர்வமற்றவர்களாகவும், அங்கு சிறு அளவிலான விளையாட்டுத் திடல்கள் தோற்றம் பெற்றிருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன.

இதனால் செயற்பாட்டு நிலமைகள் மோசமான நிலைக்குச் சென்றன. ராணுவ செயற்பாடுகளில் காணப்பட்ட தளர்வுகள் விடுதலைப்புலிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்ததால் கடுமையான தாக்குதலைத் தொடுக்க அவர்கள் தயாராகினர்.

இந்த ஆபத்தினைப் புரிந்து ஏற்கெனவே கிடைத்த வெற்றிகளை பலப்படுத்தி அதிகாரிகளை
எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் வகையில் காட்டுப் பகுதியை நோக்கி நகராமல்
யாவற்றையும் அலட்சியப்படுத்தியதால் மிகவும் பலவீன நிலையிலேயே ராணுவத்தினர் இருந்தனர்.

1999ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்த அலட்சியத்தின் விளைவு தெரிந்தது. விடுதலைப் புலிகள் நடத்திய இரண்டு சிறிய அளவிலான தாக்குதல்களில் மாங்குளத்தின் வட-கிழக்குப் பகுதி பலவீனமாகி ஈற்றில் மாங்குளம் வீழ்ச்சியடைந்தது.

விடுதலைப்புலிகளின் பாரிய தாக்குதல்கள் இல்லாமலேயே ராணுவம் அந்த முகாமை கைவிட்டுச் சென்றது.

இதன் விளைவாக ராணுவத்தின் உற்சாகம் தளர்ந்தது. ராணுவத்தினர் தமது முகாம்களைவிட்டு பின்வாங்கிய செயல்களில் மிகவும் மோசமான சம்பவம் எதுவெனில் வவுனியாவின் எல்லைப் பகுதியிலுள்ள 40 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பிரதேசத்திலிருந்து சுமார் 12000 ராணுவத்தினர் 48 மணி நேரங்களுக்குள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவம் ராணுவத்திற்குள் உள்ள பிரச்சனைகளை வெளிப்படுத்தியது.

மேலிருந்து யாரும் உத்தரவு உத்தரவு பிறப்பிப்பதில்லை. இதனால் ராணுவத்திற்குள் கட்டுப்பாடு சீர்குலைந்தது. ராணுவத்தினர் தமது முகாம்களை விட்டு விலகி அதிகாரிகளின் கட்டளைகளை மதிக்காமல் சுற்றித் திரிந்தனர்.

இந்த அவல நிலையை உணர்ந்த அரசாங்கமும், உயர் அதிகாரிகளும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். இறுதி முயற்சியாக 1998 இல் மூத்த அதிகாரிகளாகச் செயற்பட்ட( சரத் பொன்சேகா உட்பட ) பலர் முயற்சித்தனர்.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. பல மூத்த அதிகாரிகள் பதவிகளை இழந்தனர். சில இரண்டு நட்சத்திர ஜெனரல்களும் இதில் உள்ளடக்கம். தாக்குதலை மேற்கொள்ளும் உணர்வு ராணுவத்திற்குள் மிகவும் குறைந்திருந்தது.

இதன் காரணமாக போரை தொடர்ந்து முன்னெடுப்பதில் அரசாங்க மட்டத்திலும் தயக்கம் ஏற்பட்டது. ராணுவத்தில் காணப்பட்ட இந்தப் பலவீனங்களை விடுதலைப்புலிகள் நன்கு பயன்படுத்தி தாக்குதலை அதிகரித்தனர்.

பொது மக்கள் வாழும் பகுதிகள், சிங்கள முஸ்லீம் பிரதேசங்களிலுள்ள எல்லைப்புற கிராமங்கள் அவர்களின் இலகுவான தாக்குதலுக்கு இரையாகின.

விடுதலைப்புலிகள் இக் கிராமங்களுக்குள் ஊடுருவி குறிப்பாக இரவு நேரங்களில் சென்று ஆண், பெண், கர்ப்பிணிப்; பெண்கள், முதியோர், குழந்தைகள் எனப் பலதரப்பட்ட பிரிவினரையும் அவர்களின் வீடுகளுக்குள் சென்று படுகொலை செய்தார்கள்.

பல சந்தர்ப்பங்களில் ஆயுதமற்ற பொதுமக்களை ஒரே இடத்தில் படுகொலை
செய்தனர். இவ்விதமான ஈவிரக்கமற்ற கொலைகள் மக்கள் மனதில் பெரும் பயத்தைத் தோற்றுவித்தன.

இதன் காரணமாக ராணுவத்தின் செயற்பாடுகள் மேலும் பல பகுதிகளுக்கு விஸ்தரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சர்வதேச அளவில் குறிப்பாக மேற்கு நாடுகள் பேச்சுவார்;த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிக்குமாறு அரசாங்கத்தின் மேல்; ராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகித்தனர்.

ஆனாலும் இந்த விரிவடைந்து செல்லும் நிலமைகளுக்கு விடுதலைப்புலிகள் பொறுப்புக் கூறவேண்டும் என வற்புறுத்துவதைத் தவிர்த்தனர். புலம்பெயர்ந்து அதிகளவில் வாழும் தமிழர்களைக் கொண்டுள்ள நாடுகளே இவ்வாறான நிலைப்பட்டை கொண்டிருந்தனர்.

இம் மாதிரியான இயங்கியல் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் ராணுவத்தினருக்கு பெரும் கவலையைத் தந்தது.

நிரந்தர தீர்வை நோக்கி வெளிநாடுகள் வழங்கும் அழுத்தங்கள் விடுதலைப்புலிகளுக்கு மேலும்
உற்சாகத்தை அளிப்பதாக அமைந்தது. இக் காலகட்டத்தில் இந்த பயங்கரவாத அமைப்பு உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதே தந்திரங்களைப் பயன்படுத்தியது.

இதன் விளைவாக இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட உள்நாட்டின் தற்போதைய அரசுத் தலைவர் அவரின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பல தலைவர்கள் இரையானார்கள்.

இந்த வன்முறைக்கு யாரும் விதிவிலக்கல்ல. சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல, விடுதலைப்புலிகளின் பிரிவினை அரசியலை எதிர்க்கும் தமிழ் அரசியல்வாதிகளும் இலக்கானார்கள்.

அதாவது விடுதலைப்புலிகளின் பாதைக்கு தடையாக இருக்கும் எவரும்
அவர் எந்த மொழி, மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் இதுவே முடிவாகும்.
வாசகர்களே!

1999 ம் ஆண்டு நாடு பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. விடுதலைப்புலிகள் ஆனையிறவு முகாமைத் தாக்க தயாராகினர். அவ் விபரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடரும்…….

முல்லைத்தீவு முகாமைத் தாக்கி 1200படையினரை அழித்த விடுதலைப்புலிகள்!! (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன். :இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்)-பகுதி -6

 

Share.
Leave A Reply

Exit mobile version