உலகளாவிய வர்த்தகத்தின் மையத்தில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகள், ஒரு தளவாடப் பாலமாகவும் மூலோபாய முதலீடுகளுக்கான வளர்ந்து வரும் தளமாகவும் விளங்குகின்றன.

2005 ஆம் ஆண்டு முதல் சீனா ஈரானில் முதலீடு செய்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி ஷp ஜின்பிங் தெஹ்ரானுக்குச் சென்று ஒரு பாதை – ஒரு மண்டலம் முன்முயற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

முதல், ஈரானைத் தனது மத்திய கிழக்கு மூலோபாயத்தின் ஒரு மூலக்கல்லாக மாற்ற பெய்ஜிங் பணியாற்றி வருகிறது. அமெரிக்காவின் செல்வாக்கை முறியடிக்க பிராந்தியத்தில் தனக்கென ஒரு தளத்தை நிறுவுவதும், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு வர்த்தக வழித்தடங்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.

2021 ஆம் ஆண்டில், பெய்ஜிங் தெஹ்ரானுடன் ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன் மூலம் ஈரானின் நீண்டகால உள்கட்டமைப்பிற்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யவும், ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்யவும் உறுதியளித்தது.

தற்போது போர் வெடித்துள்ள நிலையில், சீனாவின் அந்த பிரம்மாண்டமான மூலோபாயம் சிதைந்து போயுள்ளது.

சீனாவின் முதலீடுகள் பெரும் ஆபத்தில் உள்ளன. சலுகை விலையில் ஈரானிடமிருந்து சீனா பெற்று வந்த எண்ணெய் விநியோகம் இப்போது நிச்சயமற்றதாகியுள்ளது.

வாஷிங்டனால் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முயற்சிகள் உள்ள சூழலில், ஈரான் வழியாக சீனா திட்டமிட்டிருந்த வர்த்தக வழித்தடங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. ஈரானிலிருந்து தனது இருப்பை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற ஈரானின் எதிரி நாடுகளுக்கும் சீனா விரிவாக்கியுள்ளது.

மேலும் ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் பங்காளியாக இருக்கும் இஸ்ரேல் வரை சீனா தனது முதலீடுகளைக் கொண்டுள்ளது.

இப்போது ஈரான் இந்த நாடுகளைத் தனது ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காக மாற்றுவதால், அங்குள்ள சீன முதலீடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள தனது முதலீடுகளையும் எண்ணெய் விநியோகத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெய்ஜிங், அமெரிக்க இராணுவ வசதிகளைக் கொண்டுள்ள பிற மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போரை விரிவுபடுத்த வேண்டாம் என்று ஈரானைக் கேட்கும் நிலையில் இல்லை.

ஈரானின் புகையிரத துறையில் சீனா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் இருந்த நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது 25,000 கி.மீ வரை புகையிரத வலையமைப்பை 25 பில்லியன் டொலர் செலவில் விரிவாக்க தெஹ்ரான் திட்டமிட்டுள்ளது.

சீனாவின் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இந்தத் திட்டங்களுக்கும், 2011 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட 5,000 கி.மீ நீளமுள்ள எட்டு புகையிரத பாதைகளுக்கான 13 பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கும் நிதி உதவி வழங்குகின்றன.

இந்த புகையிரத விரிவாக்கத் திட்டம், தனது ஒரு பாதை ஒரு மண்டலம் பாதையில் உள்ள அண்டைய நாடுகளுடன் சீனாவை இணைக்கவும், இறுதியில் ஐரோப்பா, மத்திய ஆசியா ஆகிய நாடுகளின் புகையிரத வலையமைப்புகளுடன் இணைக்கவும் உதவும். புகையிரத வலையமைப்பை தவிர, சீனாவின் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் 4,000 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனைகள், வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், சுரங்கம் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் முதலீடு செய்து வருகின்றன.

ஈரானில் 2,000 மெகாவோட் இரண்டு அணுமின் நிலையங்கள் உட்பட தொடர்ச்சியான அணுசக்தி தொடர்பான திட்டங்களில் பெய்ஜிங் தெஹ்ரானுடன் ஒத்துழைத்து வந்தது.

இருப்பினும், 2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விதித்த தடைகளின் அழுத்தத்தால், சீனா இந்த அணுசக்தி திட்டங்களில் சிலவற்றைத் தற்காலிகமாக மெதுவாக்க வேண்டியிருந்தது.

தனது ஒரு பாதை ஒரு மண்டலம் திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனா ஈரானில் ‘டிஜிட்டல் சில்க் ரோட்’ (Digital Silk Road) மற்றும் ‘கிரீன் சில்க் ரோட்’ (Green Silk Road) முன்முயற்சிகளையும் விரிவுபடுத்தி முயற்சித்தது.

டிஜிட்டல் சில்க் ரோட் என்பது டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, நெனோ தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற எல்லைப்புறப் பகுதிகளில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்துவதையும், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் இலவச இணைய வசதிகளை கொண்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் நகரங்களை ஈரானில் அமைக்கவும் சீனா உதவி வருகிறது. கிரீன் சில்க் ரோட் திட்டத்தின் கீழ், சூரிய சக்தி மற்றும் நீர் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளையும் விட ஈரானில் உள்ள திட்டங்களே சீனாவிற்கு அதிக இலாபத்தைத் தரக்கூடியவை.

அவற்றின் இழப்பு பெய்ஜிங்கிற்கு ஒரு பெரிய பேரிடியாக உள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்திய கிழக்கின் பிற நாடுகளிலும் சீனா ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சித்திட்டத்தின் கீழ் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சீனாவின் முதலீடு சுமார் 9 பில்லியன் டொலர்களாகவும், சவுதி அரேபியாவில் 3 பில்லியன் டொலர்களாகவும் இருந்தது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வருகின்றன.

2023 ஆம் ஆண்டில் ஈராக்கில் சீனாவின் முதலீடு 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் சீனா பல மத்திய கிழக்கு நாடுகளுடன் விண்வெளி செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்பு, பிக் டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் உறவுகளை ஆழப்படுத்தியதோடு, காற்றாலை மற்றும் அணுசக்தி திட்டங்களிலும் பங்காளியாக உள்ளது.

இஸ்ரேலிலும், சீனா சமீபகாலமாக இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஒரு நீரேற்று மின் சேமிப்பு திட்ட கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது.

சீனாவின் அரச நிறுவனங்கள் இஸ்ரேலின் உள்கட்டமைப்பிலும், தனியார் நிறுவனங்கள் உயர் தொழில்நுட்பத் துறைகளிலும் முதலீடு செய்துள்ளன. 2002 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கு இடையில், இஸ்ரேலில் உள்கட்டமைப்பு துறையில் சுமார் 6 பில்லியன் டொலர் மதிப்பிலான எட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2021-இல் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய துறைமுக முனையம் ஹைபா நகரில் திறக்கப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், கவலை தெரிவிக்கும் சில அறிக்கைகளையும், தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைக் கேட்டுக்கொள்வதையும் தவிர, போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா எந்த ஒரு வலுவான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

போர் நீடித்தால் அது சீனாவின் நலனுக்கு உகந்தது என்றும் கூட பெய்ஜிங் நினைத்திருக்கலாம். போர் நீண்ட காலம் நடந்தால் வாஷிங்டனின் கவனம் தென் சீனக் கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியிலிருந்து திசைதிருப்பப்படும்;. இதனால் தாய்வானை எளிதாகக் கைப்பற்றலாம் என்பது சீனாவின் கணக்காக கூட இருந்திருக்கலாம்.

ஆனால் பெய்ஜிங்கின் இந்த பார்வை குறுகிய கால நலனை மட்டுமே கொண்டதாக இருக்கலாம். வெனிசுலாவிலும், இப்போது ஈரானிலும், அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளானபோது தனது நண்பர்களுக்கு உதவ சீனா தவறிவிட்டது.

இந்தச் செயல்பாட்டின் மூலம், மோதல்களில் இருந்து விலகி நிற்கும் மற்றும் தனது நண்பர்களுக்கு உதவாத ஒரு ‘நம்பகத்தன்மையற்ற நண்பன்’ என்ற அவப்பெயரை பெய்ஜிங் பெற வாய்ப்புள்ளது. மறுபுறம் அமெரிக்காவை எதிர்கொள்ளும் அளவுக்கு சீனா இராணுவ ரீதியாக வலிமையானது அல்ல என்ற எண்ணமும் பரவும்.

அமெரிக்காவிற்கு எதிரான ஒரு சக்தியாகப் பயன்படுத்தக்கூடிய அணுசக்தி இலட்சியம் கொண்ட ஒரு ஈரானையே பெய்ஜிங் விரும்பியது.

ஆனால், கடந்த ஜூன் மாதத்தின் ‘மிட்நைட் ஹேமர்’ (Midnight Hammer) மற்றும் தற்போது நடந்து வரும் ‘எபிக் பியூரி’ (Epic Fury) தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு, நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் திறன்களை அழித்துள்ளன.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானிய துறைமுகங்கள் மற்றும் புகையிரத வழித்தடங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு பாதை ஒரு மண்டலம் திட்டங்கள் இப்போது அதிகப்படியான பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்கின்றன.

அமெரிக்கக் கடற்படை வலிமையிலிருந்து பாதுகாக்கப்பட்ட, ஈரான் முதல் சீனா வரையிலான நிலவழி எரிசக்தி வழித்தடம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே ஈரான் போர் ஒரே இரவில் மூலோபாய சமன்பாடுகள் சீனாவிற்கு பாதகமாக மாறியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version