அணு ஆயுதம் இல்லாத மத்திய கிழக்கு மண்டலத்தை, எகிப்து தலைமையிலான அரபு லீக் நாடுகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.

அந்தப் பிராந்தியத்தில் அணு ஆயுதம் பெற்ற முதல் நாடு இஸ்ரேல்தான் என்று நம்பப்படுகிறது. ஆகவே, ஆயுதக் குறைப்புக்கான மிகப்பெரிய பொறுப்பு இஸ்ரேலுக்கு உண்டு என அந்த நாடுகள் வாதிடுகின்றன.

‘அணு ஆயுதம் இல்லா மத்திய கிழக்கு‘ என்ற கட்டமைப்பில், ஈரான் மீதான கட்டுப்பாடுகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகள் வலியுறுத்துகின்றன.

அணு ஆயுதம் இல்லாத மண்டலத்தில் இஸ்ரேல் முதலில் இணையாவிட்டால், தாமும் அதில் இணையப்போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

வரலாற்று ரீதியாக இஸ்ரேல், அமெரிக்காவின் ‘விலக்கு’ கொள்கையுடன் இணைந்திருந்தாலும், பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த அந்நாடு தனது திட்டத்தை மேலும் வெளிப்படையாக்க வேண்டும் என்று சில ஐரோப்பிய அரசுகள் வலியுறுத்துகின்றன.

கொள்கை அளவில் அணு ஆயுதம் இல்லாத மண்டலத்தை நிறுவுவதை ரஷ்யா ஆதரிக்கிறது. பரவலை பொதுவாக சீனா எதிர்க்கிறது.

ஆனால், குறிப்பிட்ட பிராந்திய நாடுகளைக் குறிவைப்பதைவிட, உலகின் மிகப்பெரிய அணுசக்திகளான அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை ஆயுதக் குறைப்பைத் தொடங்கப்பட வேண்டும் என்று சீனா வாதிடுகிறது.

‘இஸ்ரேலிய குண்டை’ பாதுகாக்கும் மேற்கத்தியக் கொள்கை காலத்திற்குப் பொருந்தாதது என்றும், நேர்மையான பிராந்திய பாதுகாப்பு உரையாடலை இது தடுக்கிறது என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

மேலும், உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாட்டிலிருந்து இஸ்ரேல் விலகியிருக்க மேற்கத்தியக் கொள்கை அனுமதிக்கிறது என்றும் விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தப் போக்குக்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. யூதர்களுக்கு நேர்ந்த ‘ஹோலோகாஸ்ட்’ (இன அழிவு) குற்ற உணர்வும், வலுவான உத்திசார் கூட்டணிகளும், பகிரப்பட்ட பாதுகாப்புக் கவலைகளும், 1979 வரை துருக்கி, ஈரான் தவிர மற்ற அண்டை நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரி நாடுகளாக இருந்ததும் காரணங்கள் எனினும், இஸ்ரேலை ஒரு நிலையான, ஜனநாயகக் கூட்டாளியாகவும், மத்திய கிழக்கில் ஒரு முக்கியப் பங்காளியாகவும் பார்ப்பதிலிருந்தும் மேற்குலகின் ஆதரவு உருவாகிறது.

1967-ம் ஆண்டுக்கு முன்பு, அணு ஆயுதங்களைச் சோதித்ததாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் அங்கீகரிக்கப்பட்டன.

1970-ல் அமலுக்கு வந்த அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் (Nuclear Non-Proliferation Treaty) கீழ், மற்ற நாடுகளுக்கு அணு ஆயுதங்களையும், தொழில்நுட்பத்தையும் தருவதில்லை என்று அவை ஒப்புக்கொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் அணு ஆயுதங்களைப் பெறுவதோ, உற்பத்தி செய்வதோ இல்லை என்று அணு சக்தி ஆகா நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.

இவை, ஆக்க சக்திக்கு அணுவைப் பயன்படுத்தத் தடை இல்லை.

ஈரான் அணு பரவாமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 1967-ல் ஈரானுக்கு ஆக்க சக்திக்கு வேண்டிய அணு உலையை அமெரிக்கா அமைத்துக்கொடுத்தது.

அதன் அணு வசதிகளை ஆய்வு செய்ய அனுமதிப்பதற்கும், அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்கும், ஈரான் சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அணுசக்தி அமைப்பு ஈரானின் யுரேனிய செறிவு அளவுகள், மைய விலக்கி நிறுவல்கள் (centrifugal installations) மற்றும் யுரேனிய கையிருப்புகளைக் கண்காணிக்கிறது.

1979 காலகட்டத்தில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சியைக் கண்டு அரபு அரசுகள் மிரண்டன. மேலும், புரட்சிக்குப் பின்னர், கடுமையான அமெரிக்க – இஸ்ரேல் எதிர்ப்பு நிலையை ஈரான் மேற்கொள்ள சீனா, வடகொரியா, ரஷ்யா தவிரப் பெரிய அளவில் ஈரானுக்கு நண்பர்கள் இல்லாமல் போனது.

அந்த நிலைப்பாடு, ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹௌதி போன்ற பதிலிகளுக்கு (proxies) உதவவும், ரகசிய அணு சக்தி முயற்சியில் இறங்கவும் ஈரானைத் தூண்டியது.

ஏற்கெனவே, 1998-ல் அணு சோதனை நடத்தி அணு சக்தியாய் உயர்ந்த இந்தியாவும், பாகிஸ்தானும், ஒரு முன்னுதாரணமாக இருந்தன.

எண்ணெய் வளமும் ஈரானுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஆனால், தொழில்நுட்பம்? அது பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் கதீர் கான் வலையமைப்பின் மூலம் கிட்டியதாகப் பரவலாக நம்பப்படுகிறது.

ஈரானின் அணு வேட்கை இஸ்ரேலுக்கும், சவுதி அரேபியாவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பரவல் வலையமைப்பை இயக்கிய பாகிஸ்தான், அமெரிக்க ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ளவில்லை. மாறாக, அது நட்பு நாடாகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானிய விஞ்ஞானி மூலம் ஈரான் செயல்பட்டதால், ஈரானின் அணு சக்தி வேட்கையை இந்தியா ஆதரிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஒரு எதிர்ப்பு நிலை எடுத்தார்.

சர்வதேச கடமைகளை அமல்படுத்தும் அதிகாரம் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு இருந்தாலும், ஈரானின் அணு திட்டத்திற்கு எதிரான முறையான ‘நடவடிக்கையில்’ பெரும் பகுதி ஐ.நா. துணை அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency) மூலம் நிகழ்கிறது,

பின்னர் அது ஐ.நா.-வுக்கு அறிக்கை தருகிறது.

2005-ல், அணு பரவாமை ஒப்பந்தத்திற்கு ஈரான் இணங்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை அடையாளம் கண்டது.

அதை, ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் தெரிவிக்க, அது இறுதியில் ஈரான் மீது சர்வதேசப் பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுத்தது.

ஈரானின் அணு திட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் முதன்முதலில் டிசம்பர் 23, 2006 அன்று விதிக்கப்பட்டன.

யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த ஈரான் மறுத்ததைத் தொடர்ந்து, அதன் அணு தொடர்பான பொருட்கள், தொழில்நுட்ப வர்த்தகத்தை, தடைகள் குறிவைத்தன.

மேலும், ஈரானின் முக்கிய நபர்கள்/நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கின. ஜூன் 12, 2025 அன்று, ஆயுதப் பயன்பாட்டிற்காக அணு சக்தியை ஈரான் திருப்பிவிடவில்லை என்பதைச் சரிபார்க்க முடியவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியது.

அதற்குக் காத்திருந்தது போல, அடுத்த நாளே ஈரானின் அணு உலைத் தளங்களை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியது.

அந்த உலைகள் பூமிக்கு 800 மீட்டர் கீழே இருந்ததால், ஜூன் 22-ம் தேதியன்று இஸ்ரேலுடன் அமெரிக்கா சேர்ந்துகொண்டது.

அவ்வளவு தொலைவு பூமியைத் துளைக்கக்கூடிய 15,000 கிலோ குண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே இருந்தன.

அதன் பின் ஈரானின் மூன்று அணு உலைத்தளங்களை முற்றிலும் அழித்துவிட்டதாக ட்ரம்ப் மார்தட்டிக்கொண்டார்.

ஆனால், 60 சதவிகிதம் செறிவூட்டப்பட்ட 440 கிலோ யுரேனியும் இஸ்பஹானிலும், நடான்ஸிலும் புதையுண்டு இருப்பதாகச் சர்வதேச அணுசக்தி முகமை சொன்னது.

இதை ஈரானியர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா எண்ணியது.

அணு சக்தியின் வாசலை நெருங்கிய ஈரான் தாக்கப்படுகிறது. ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வாசலை வடகொரியா கடந்துவிட்டது.

தன் மீதான தாக்குதலையும் தவிர்த்துவிட்டது. அணு பரவாமை ஒப்பந்தத்திலிருந்து 2003-ல் வெளியேறிய வட கொரியா, 2006-ல் அதன் முதல் அணுகுண்டை வெடிக்கச் செய்தது.

பின்னர், ஆறு சோதனைகளை நடத்தியுள்ளது.மேலும், 40 முதல் 50 வரையிலான போர்க்கருவிகளைக் கொண்ட களஞ்சியத்தை வட கொரியா உருவாக்கியுள்ளது.

ஈரான் மீது குண்டு மழை பொழியும் ட்ரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்று முறை சந்தித்திருக்கிறார். இதுதான் வென்றவர்களை உலகம் நடத்துகிற விதம்.

இந்த இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் ஈரான் துடித்தது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் அணு பரவாமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் – புத்திசாலிகள்? இஸ்ரேலோ, ஒப்பந்தத்தில் சேராததால் அதன் அணு வசதிகள் சர்வதேச அணுசக்தி முகமையின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை அல்ல.

அது வேண்டுமென்றே இப்படி ஒரு தெளிவற்ற கொள்கையைப் பேணுகிறது—அணு ஆயுதங்களை வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதோ, மறுப்பதோ இல்லை—அதே நேரத்தில், வாஷிங்டனின் மூலோபாய பாதுகாப்பிலிருந்து பயனடைகிறது.

ஐ.நா. செயல்பாட்டில் ‘இரட்டைத் தரம்’ குறித்து விமர்சனங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘அணு பரவாமை ஒப்பந்த நாடான ஈரானை ஐ.நா. பாதுகாப்புச் சபை தீவிரமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்தியுள்ள நிலையில்,

இஸ்ரேலின் சந்தேகத்திற்கிடமான களஞ்சியத்திற்காக பொறுப்புக்கூறல் (accountability) அல்லது ஆய்வுகளைக் கோரும் பிணைப்புத்தன்மை வாய்ந்த தீர்மானங்கள் (resolutions mandating inspections) எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அணு ஆயுதப் பரவலில் பாகிஸ்தானின் பங்கிற்காக அது தடைகளை விதிக்கவில்லை’ என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில ஆய்வாளர்கள், அணு பரவாமை ஒப்பந்தம், தங்கள் மூலோபாய நலன்களுடன் ஒத்துப்போகாத நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ஐ.நா. நிரந்தர உறுப்பினர்களால் (குறிப்பாய் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ்) \”தேர்ந்தெடுக்கப்பட்ட கருவியாக\” பயன்படுத்தப்படுகிறது என்றும் வாதிடுகின்றனர்.

ஈரான் அணு சக்தியாக மாறினால், தானும் அணு சக்தியாக மாற வேண்டியிருக்கும் என்ற சவுதி அரேபியாவின் அச்சுறுத்தல், உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு முயற்சிகளுக்கு ஒரு பெரிய கவலையாக இருக்கிறது என்று சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தன் வசமிருக்கும் இந்த பூமியை நாம் தொடர்ந்து வாழவாவது உலக நாடுகள் இந்த அணு ஆயுத வேட்கையைக் கைவிட வேண்டும்.

அணு சக்திகள் தங்கள் அணு ஆயுதங்களை அழித்துவிட வேண்டும். மனிதன் ஒரு மிக உன்னத மனநிலையையும், பாதுகாப்பான ஓர் உலகையும் உருவாக்கினால் ஒழிய இதெல்லாம் சாத்தியப்படப் போவதில்லை.

 

Share.
Leave A Reply

Exit mobile version