பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முரண்பட்ட கருத்துக்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இது ஒன்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல; இது மக்களின் உயிர் மற்றும் அமைதி சம்பந்தப்பட்ட விஷயம்” என அவர் விமர்சித்துள்ளார்.

தென்கொரியாவிற்கானஉத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இம்மானுவேல் மக்ரோன் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது போரைத் தீர்ப்பதற்கான தீவிரமான அணுகுமுறை அல்ல. சில நேரங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது” என மக்ரோன் குறிப்பிட்டார்.

2025-ஆம் ஆண்டு ஈரான் மீதான தாக்குதலில் அணுசக்தி நிலயங்கள் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறியதைச் சுட்டிக்காட்டிய மக்ரோன், தற்போது மீண்டும் அதே அணுசக்தி நிலையங்களைத் தாக்க இதுவே “கடைசி வாய்ப்பு” என ட்ரம்ப் கூறுவது முன்னைய கூற்றின் பொய்மையை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான போர் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து எடுத்த தீர்மானம் என மக்ரோன் தெரிவித்துள்ளார். “தாங்களாகவே முடிவெடுத்துவிட்டு, தற்போது ஏனைய நாடுகள் தங்களுக்கு உதவவில்லை என புலம்புவதில் நியாயமில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளை “காகிதப் புலிகள்” என ட்ரம்ப் விமர்சித்ததற்கு பதிலளித்த மக்ரோன், ஒரு கூட்டணியின் பலம் அதன் பரஸ்பர நம்பிக்கையில் உள்ளதே தவிர, நாளாந்தம் அது தொடர்பில் விமர்சனம் செய்வதில் இல்லை என்றார்.

ஹோர்முஸ் நீரிணையை இராணுவ ரீதியாக மீட்பது என்பது யதார்த்தமற்றது. இது ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இது மிகவும் ஆபத்தானது என மக்ரோன் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் மக்ரோனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது மனைவி பிரிகிட்டே தொடர்பில் கேளியாக பேசியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்ரோன், “ட்ரம்ப்பின் கருத்துக்கள் கண்ணியமானவை அல்ல; அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என புறக்கணித்துள்ளார்.

எனினும், பிரான்ஸில் உள்ள மக்ரோனின் அரசியல் எதிரிகள் கூட ட்ரம்ப்பின் இந்த தனிப்பட்ட தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version