பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை அவரது பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜார்ஜ் “41வது ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறார்” என்று கூறியுள்ளார்.
ராணுவத் தலைமைத் தளபதி பொதுவாக நான்கு ஆண்டு காலத்திற்குப் பதவி வகிப்பார். வெஸ்ட் பாயிண்ட் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற, தொழில்முறை ராணுவ அதிகாரியான ஜார்ஜ், 2023-ல் முன்னாள் அதிபர் ஜோ பைடனால் இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் “மிக விரைவில்” முடிவுக்கு வரும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த சமீபத்திய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஜார்ஜ் முதல் வளைகுடாப் போரிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த சமீபத்திய மோதல்களிலும் காலாட்படை அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் ஏன் பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
“அவரது சேவைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் ராணுவத்தில் ஒரு தலைமை மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது,” என்று பெயர் குறிப்பிடப்படாத ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி சிபிஎஸ்ஸிடம் கூறினார்.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் பார்னெல் கூறியதாவது: “ஜெனரல் ஜார்ஜ் நமது தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவைக்கு போர் துறை நன்றியுடையதாக உள்ளது. அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.”
அமெரிக்க ஊடகங்களின்படி, அவருக்குப் பதிலாக ராணுவத் துணைத் தலைமைத் தளபதி ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் தற்காலிக ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பார்.

