அமெரிக்கர்கள் ஆண்டாண்டு காலம் பெருமை பேசிக் கொள்வார்கள். தம்முடையதே உலகின் தலைசிறந்த ஜனநாயகம் என்று மார் தட்டிக் கொள்வதும் வழக்கம்.

அரச அறிவியல் துறை சார் நிபுணர்களும் லிபரல் ஜனநாயகத்தின் சிறப்பிற்காக அமெரிக்காவை உதாரணம் காட்டுவது உண்டு.

லிபரல் ஜனநாயக ஆட்சி நிர்வாக முறை மிகவும் எளிதான ஆனால், சமரசத்துக்கு உட்படுத்த முடியாத அடிப்படைத் தத்துவத்தின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டது.

ஒரு ஜனாதிபதி மக்களை வழிநடத்துவதற்காக மக்களால் தெரிவு செய்யப்படுபவர். ஆனால், அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லவென்பது அந்தத் தத்துவமாகும்.

இந்தத் தத்துவம் என்றுமில்லாத வகையில் இன்று ஆகவும் தீவிரமான சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

உலகெங்கிலும் ஜனநாயகம் பற்றி சுயாதீன ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பொன்று உள்ளது. அதன் பெயர் வீ-டெம் (V-Dem) நிறுவனம் என்பதாகும்.

இந்த நிறுவனத்தின் பிந்திய அறிக்கை, தமது ஜனநாயகம் பற்றி அமெரிக்கர்கள் கொண்டிருந்த ஜம்பத்தின் மீது சம்மட்டியால் அடித்திருக்கிறது.

இனிமேலும் அமெரிக்காவை லிபரல் ஜனநாயக தேசம் என்று வரையறுக்க முடியாது. அதனை தேர்தல் ஜனநாயக தேசம் என்று கூறலாம் என்பது அறிக்கையின் சாராம்சம்.

இது வெறும் சொற்பொருள் சார்ந்த மாற்றம் அல்ல. அமெரிக்க தேசம் எதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்வதைக் குறிக்கும் முன்னெச்சரிக்கையாகவும் அமைகிறது.

உலகின் பல நாடுகள் ஜனநாயகத்தை எளிதாக வரையறை செய்ய முனைகின்றன. முறையாக தேர்தல் நடக்கிறதா? அப்படியானால், அங்கு ஜனநாயகம் உண்டு என்ற அளவிற்கு சமரசம் செய்து கொள்கின்றன.

ஆனால், லிபரல் ஜனநாயகம் என்பது அதனையும் தாண்டியது. ஒரு லிபரல் ஜனநாயக கட்டமைப்பில் சுயாதீன நீதிமன்றங்களும், சுதந்திரமாக இயங்கக்கூடிய ஊடகங்களும் அவசியம். முக்கியமாக, நிறைவேற்று அதிகாரபீடம் எல்லை மீறிச் செல்கையில், அதனை ஒழுங்குறுத்திக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டவாக்க சபை இருக்க வேண்டும்.

சமகால அமெரிக்க தேசத்தில் தமது வாக்குகளைப் பயன்படுத்தி மக்கள் ஆட்சியாளரைத் தெரிவு செய்ய முடியும். ஆனால், ஆட்சியாளர் தன்னிச்சையாக செயற்படுவதைத் தடுக்கக்கூடிய பொறிமுறைகள் நலிவடைந்திருக்கின்றன.

காங்கிரஸ் என்றழைக்கப்படும் மக்களவையை ஆட்சியாளர் மதிப்பது கிடையாது. அதனைத் தாண்டிச் சென்ற பல சந்தர்ப்பங்கள் உண்டு

மறுபுறத்தில், மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில் இயங்கும் நிறுவனங்கள் பெருமளவில் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளன. அவற்றின் உயர் பதவிகளுக்கு ஆட்சியாளரின் விசுவாசிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

இதன்மூலம், ஆட்சி நிர்வாகத்தின் அதிகாரங்கள் ஜனாதிபதியின் கரங்களில் குவிகையில், அந்த அதிகாரத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஜனநாயக ஏற்பாடுகள் வலுவிழந்து செல்கின்றன.

ஒரு ஜனநாயக கட்டமைப்பில் மக்களின் நாட்டங்கள் சரியாக பிரதிபலிக்கப்பட வேண்டும். அவை அரசுகளால் மதிக்கப்பட்டு முறையாக நிறைவேற்றப்படும்.

இந்தப் பொறுப்பை அரசுகள் எவ்வாறு கையாள்கின்றன என்பதை சமகால யுத்தம் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியுள்ளது.

ஈரானிய இஸ்லாமிய மக்கள் குடியரசின் ஆட்சி நிர்வாக கட்டமைப்பை மேலைத்தேய சமூகம் கடுமையாக விமர்சிப்பது உண்டு. அந்தக் கட்டமைப்பானது நவீன ஜனநாயக விழுமியங்களுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய இறுக்கமான, கடும்போக்கான சமய-சார்பு ஆட்சி (Radical Theocracy) என்ற விமர்சனம் முக்கியமானது.

ஆனால், தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலில் ஈரானிய ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை அவதானிக்கலாம். இந்தக் கட்டமைப்பானது நாட்டு மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதனை மிகச் சரியாக பிரதிபலிக்கக்கூடிய ஆற்றலை வெளிப்படுத்தி நிற்பது ஆச்சர்யத்திற்குரிய விடயம்.

மறுபுறத்தில், அமெரிக்க மக்களின் அபிலாஷைகளுக்கும், அங்கேயுள்ள ஆட்சி நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கும் இடையில் நீடிக்கும் முரண்பாடு அப்பட்டமாக வெளித்தெரிவதைக் காணலாம்.

இன்று ‘NO Kings’ என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் வலுவான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த சொற்றொடரை ‘மன்னர்கள் வேண்டாம்’ என்று எளிதாக மொழிபெயர்த்து விட முடிந்தாலும், இதன் அர்த்தம் ஆழமானது. அமெரிக்காவின் ஜனநாயக விழுமியங்களை விழுங்கி ஏப்பம் விடும் எதேச்சாதிகார போக்குகளை கடுமையாக விமர்சிப்பது.

NO Kings என்ற எதிர்ப்பு இயக்கம் சமாதானத்தின் மீது மக்கள் கொண்டுள்ள தீவிர நாட்டத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களின் நாட்டங்களை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் போரை நோக்கி நகர்கையில், அமெரிக்காவின் ஜனநாயக நிறுவனங்களால் அவரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

இது அமெரிக்க மக்கள் சிறப்பானதென மார் தட்டிக் கொள்ளும் ஜனநாயகம் பற்றிய முக்கியமானதொரு கேள்வியை எழுப்பி நிற்கிறது.

அமெரிக்கர்கள் ‘கடும்போக்கான சமய ஆட்சி’ என்று விமர்சிக்கும் ஒரு ஆட்சி நிர்வாக முறையை விடவும் மக்கள் குரலை பொருட்படுத்தாத ஆட்சி நிர்வாக கட்டமைப்பு தான் அமெரிக்காவில் இருக்கிறதென்றால், அமெரிக்க ஜனநாயகத்திற்குள்ள பெறுமதி தான் என்ன?

அமெரிக்க ஜனநாயகத்தை சோதிக்கக்கூடிய பலப்பரீட்சைக் களமாக ஈரானுக்கு எதிரான யுத்தம் அமைந்திருக்கிறது.

இந்தப் போர் ஜனநாயக ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் தவிர்க்க முடியாத அம்சமாகத் திகழும் சட்டவாக்க சபையின் முறையான அனுமதியும் ஒப்புதலும் இன்றி ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன் காரணமாகவே, அமெரிக்க ஜனாதிபதி போர் வெறியராக விமர்சிக்கப்படுகிறார்.

இன்று NO Kings ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்கள் வெறுமனே யுத்தத்தை மாத்திரம் ஆட்சேபிக்கவில்லை. அமெரிக்காவின் ஆட்சி நிர்வாக முறை சீர்குலைந்து வருவதையும், ஜனாதிபதி எதேச்சாதிகாரியாக மாறி வருவதையும் ஆட்சேபிக்கிறார்கள்.

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமலும், மக்களவையின் ஒப்புதல் இன்றியும் ஜனாதிபதி யுத்தமொன்றை நடத்த முடிந்தால், அமெரிக்காவின் ஆட்சி நிர்வாக முறையை ‘மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகம்’ என்று விபரிக்க முடியுமா என்பது முதன்மையான கேள்வி.

இந்த நிலைமாற்றம் எத்தனை வேகமாக நிகழ்ந்திருக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். கடந்த ஒரு வருடகாலத்தில் அமெரிக்க ஜனநாயகத்தின் ஆரோக்கியம் 24 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது என வீ-டெம் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால், ஹங்கேரி போன்ற நாடுகளில் ஜனநாயக ஆட்சி நிர்வாக முறை சீர்குலைய பல ஆண்டுகள் எடுத்தன. அமெரிக்காவில் தனியொரு குறுகிய காலப்பகுதியில் இந்த மாற்றம் நிகழ்ந்தது.

இன்று அமெரிக்காவின் ஜனநாயகம் கறைபடிந்ததாக மாத்திரம் இருக்கவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள், அதனை தமக்கு ஏற்றவிதத்தில் மீளமைத்து வரக்கூடிய வகையில் தரம் தாழ்ந்து விட்டதையும் நாம் காண முடியும்.

இப்போது அமெரிக்கா ஜனநாயகத்தின் அந்திமக் காலத்தில் (Gray Zone) இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். இது முழுமையான மக்கள் ஆட்சியும் அல்ல. முழுமையான சர்வாதிகாரமும் அல்ல. இதுவொரு நிச்சயமற்ற ஊசலாட்டமான நிலை.

இவ்வருடம் அமெரிக்காவின் நடுத்தவணை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல் ஜனநாயக பரிசோதனையாக அமையக்கூடும். ஆட்சியாளர்கள் தேர்தலை மதித்து நடக்கும் பட்சத்தில், தற்போதைய நிலையில் இருந்து அமெரிக்கா மீண்டெழக்கூடும்.

ஆனால், வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டாலோ, ஜனநாயக நிறுவனங்களை சவாலுக்கு உட்படுத்தினாலோ, அமெரிக்க தேசம் ‘தேர்தல் எதேச்சாதிகாரம் (Electoral Autocracy)’ என்ற வகைப்படுத்தலுக்குள் தள்ளப்பட்டு விடக்கூடிய அபாயம் உள்ளது.

ஜனநாயகம் என்பது சூடிக் கொண்டு அழகு பார்க்கும் ‘லேபிள்’ அல்ல. மக்கள் எதை நாடுகிறார்களோ, அது எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை உறுதி செய்யக்கூடிய ஆழமான தத்துவமாகும்.

ஒரு நெருக்கடி நிலையில் சமய-சார்பு ஆட்சி நிர்வாகம் மக்களுக்கு செவிமடுத்து நடக்கையில், அதனையே ஜனநாயக ஆட்சி நிர்வாகம் புறக்கணிக்கும் பட்சத்தில், உண்மையான அரசியல் தோல்வி எது என்பதை நாம் மீள வரையறை செய்ய வேண்டியதாக இருக்கிறது.

சதீஸ் கிருஸ்ணபிள்ள

Share.
Leave A Reply

Exit mobile version