தனது கர்ப்பிணி மனைவி மற்றும் பிஞ்சு குழந்தைகள் இருவரை நீச்சல் தடாகத்தில் மூழ்கடித்துக் கொன்ற கொடூரத் தந்தை அசாருதீன் என்பவரை தெலுங்கானா மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம், ஹனும்கொண்டா மாவட்டம், பொன்னேலு கிராமத்தைச் சேர்ந்த அசாருதீன் என்பவருக்கு வரங்கல் – கம்மம் தேசிய நெடுஞ்சாலை அருகே சொந்தமாக நீச்சல் குளம் ஒன்று உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்த நீச்சல் குளத்தில் அசாருதீனின் மனைவி பர்ஹத் மற்றும் அவரது இரண்டு மகள்கள் சடலங்களாக மிதந்தனர்.

நீச்சல் தெரிந்த அவர்கள் மூவரும் தங்களுக்குச் சொந்தமான குளத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தற்செயலாக நடந்த விபத்து என நம்ப வைக்க அசாருதீன் முயன்றார்.

எனினும், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பர்ஹத்தின் தந்தை பொலிஸில் புகார் அளித்தார்.

தனது மகள் மூன்றாவது முறையாகக் கர்ப்பமாக இருந்ததாகவும், அது தொடர்பாகக் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

சந்தேகத்தின் பேரில் அசாருதீனைப் பிடித்து பொலிஸார்தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு அளித்த வாக்குமூலம் பொலிஸாரையே அதிர வைத்தது:

“ஏற்கனவே எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு என் மனைவி இருமுறை கருத்தரித்த போதும், பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் நான் அவரைக் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினேன். தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் கருத்தரித்தார்.

இப்போதும் பெண் குழந்தைதான் பிறக்கும் என எண்ணி கருக்கலைப்பு செய்யச் சொன்னேன். ஆனால், என் மனைவி அதற்குச் சம்மதிக்கவில்லை.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர்களைக் கொல்லத் திட்டமிட்டேன். கடந்த புதன்கிழமை அவர்கள் மூவரையும் நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று, முதலில் மனைவியை நீரில் மூழ்கடித்துக் கொன்றேன். அவர் இறந்த பிறகு குழந்தைகளைப் பராமரிக்க ஆள் இருக்காது என்பதால், எனது இரண்டு மகள்களையும் நானே நீரில் மூழ்கடித்துக் கொன்றேன்.”

விபத்து என நாடகமாடி தப்பிக்க முயன்ற அசாருதீனின் கொடூரம், பொலிஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version