உதய கம்மன்பில எழுதிய ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி’ குறித்த நூல் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அந்த நூல் வெளியீட்டு விழா சம்புத்தத்வ ஜயந்தி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்குக் கிடைத்த ஆதரவு குறித்து கம்மன்பில மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். மகா சங்கத்தினர் உட்பட மண்டபம் நிறைந்த அளவில் மக்கள் வருகை தந்திருந்தனர்.
இதில் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய மூன்று முன்னாள் ஜனாதிபதிகளும் கலந்துகொண்டனர்.

2002 ஆம் ஆண்டு ரணிலின் தலைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட சமாதான வேலைத்திட்டத்தை அவர் விமர்சித்ததே இதற்குக் காரணமாகும்.
இந்த விமர்சனம் குறித்து அங்கு பலத்த சர்ச்சை உருவானது. சமூக வலைதளங்களிலும் இந்தக் கருத்துக்கள் தொடர்பாக முரண்பாடான வாதங்கள் முன்வைக்கப்படத் தொடங்கின.
‘2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்த விவகாரம் என்பது நம் அனைவரினதும் உடன்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயமாகும்.
இதனை தற்போது விமர்சிப்பது முறையல்ல என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும்.
இது குறித்து தவிசாளர் வஜிர மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ஆகியோருக்குத் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன, அவர்கள் உண்மைத் தன்மையை விளக்கினர்.
இந்த நிலையில் தவிசாளர் வஜிர, முன்னாள் தகவல் தினைக்கள பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக மற்றும் ரணிலின் முன்னாள் ஊடகப் பணிப்பாளர் ஷானுக கருணாரத்ன ஆகியோர் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்துக் கலந்துரையாடினர். சமூக வலைதளங்களில் நிலவும் கருத்துக்கள் குறித்தும் அங்கு ஆராயப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமாக ஆரம்பித்த ஒரு பாரிய திட்டமே இது என வஜிர கருத்துத் தெரிவித்தார்.
குறிப்பாக, அன்றைய தேர்தலுக்கு முன்னதாகவே தான் ஒரு சமாதான நடைமுறைக்குச் செல்லப்போவதாக ரணில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அடிப்படையிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தவர்களும் அனைத்துக் கூட்டணிக் அமைப்புகளும் துணை நின்றதாக வஜிர கூறினார்.
இந்தச் சமாதான நடைமுறை என்பது அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து அமைச்சர்கள் உள்ளிட்ட தரப்பினரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல்முறை என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
சம்பந்தப்பட்ட முன்னாள் பாதுகாப்பு பிரதானியின் உரையில், சமாதான ஒப்பந்தத்தினால் கிடைத்த நன்மைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதேபோல், கிழக்கு மாகாணம் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலை புலிகள் அமைப்பின் பிரதித் தலைவராக இருந்த கருணா அம்மானை தந்திரோபாய ரீதியாகப் பிரிப்பதற்கு இந்தச் சமாதான வேலைத்திட்டமே வழியமைத்தது.
அன்று சில தரப்பினர் சமாதான நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், தேசியப் பிரச்சினைக்குச் சமாதானப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்தாக இருந்தது.
2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனத்திலும் சமாதான நடைமுறை குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டதுடன், தேர்தலில் அதற்கு மக்கள் அங்கீகாரமும் கிடைத்தது.
எனவே, இந்த முன்னாள் பாதுகாப்பு பிரதானியின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், வார இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்பதாகவும் வஜிர தெரிவித்தார். சமூக வலைதளங்கள் ஊடாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் இது தொடர்பான கருத்தை வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது
ரணில் வருவாரா?
ரணில் அறுவை சிகிச்சையின் பின்னர் தற்போது முழுமையாகக் குணமடைந்து வருகின்றார். அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கு வைத்தியர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இருப்பினும், வைத்தியசாலையில் தங்கியிருந்து மேலும் சில நாட்களுக்கு வைத்தியக் கண்காணிப்பின் கீழ் அவர் ஓய்வெடுத்து வருகின்றார்.
தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு இலங்கை வருமாறு பலர் ரணிலுக்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து ஓய்வெடுத்துச் சிறிது காலத்தைக் கழிக்க வேண்டும் என்பதே அவரது நெருங்கிய சகாக்களின் கருத்தாக இருந்தது.
ஆனால், ரணிலின் உறுதியான நிலைப்பாடு என்னவெனில், அவர் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இலங்கை திரும்ப வேண்டும் என்பதாகும்.
வீட்டில் இருந்தவாறாவது உரிய அரசியல் பணிகளை முன்னெடுப்பதே ரணிலின் எண்ணமாக உள்ளது.
மக்கள் கஷ்டப்படும் இக்காலகட்டத்தில் தான் அங்கிருக்க வேண்டும் என்பதே ரணிலின் நிலைப்பாடாகும்.
அதன்படி, எதிர்வரும் பத்து நாட்களுக்குள் ரணில் மீண்டும் இலங்கை திரும்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரணில் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் தமது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
கொஸ்கமவில் கருத்தரங்கு
அவற்றில் பிரதானமான ஒரு பணியாகக் கொஸ்கமவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நிலக்கரி ஊழல்’ குறித்த பகிரங்க கருத்தரங்கு அமைந்திருந்தது.
அது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் ஏற்பாட்டாளராக பேராசிரியர் பீரிஸ் செயற்பட்டிருந்தார்.
அங்கு அந்த ஊழல் தொடர்பான பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. நிலக்கரி மோசடியே மின்சாரக் கட்டணத்தை முன்கூட்டியே அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தது என அங்கு கூறப்பட்டது.
அதேபோல், நிலக்கரி மோசடியின் காரணமாகவே மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தரமற்ற நிலக்கரியின் காரணமாக மின் உற்பத்திக்காக அதிகளவு டீசலைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் அங்கு விசேடமாகக் குறிப்பிடப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் முடிவதற்குள் அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டியதாயிற்று.
இது குறித்த மீளாய்வு ஒன்று நாரஹேன்பிட்டியில் உள்ள ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நடைபெற்றது. கொஸ்கம கருத்தரங்கு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டது.
ஐ,தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வஜிர, தலதா மற்றும் சாகல ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். ஏனைய கட்சிப் பிரதிநிதிகளும் அங்கு வருகை தந்திருந்தனர்.
கொஸ்கம கருத்தரங்கின் வெற்றியைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி வழங்கிய நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது மிகவும் பொருத்தமானது என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இங்கு அறிவித்தார்.
தான் ரணிலுடன் கலந்துரையாடுவதற்குச் சில விடயங்கள் இருப்பதாகவும், நேரம் வரும்போது அவற்றை விவாதித்துத் தெரிவிப்பதாகவும் ஜி.எல். அங்கு குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசரின் பதவிக்காலம்
இதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து கலந்துரையாடப்பட்டது. இது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல குழுக்கள் ஜி.எல். பீரிஸைத் தொடர்பு கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தன.
‘சார், தயவுசெய்து இது குறித்து விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுங்கள். அதன் பிறகு எங்களாலும் இதில் களமிறங்க முடியும்’ என அவர்கள் குறிப்பிட்டனர்.
சட்டத்தரணிகள் சங்கம் ஒரு நடுநிலையான இடத்திலிருந்து தமது கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. அதற்கமைய, ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவைத் தொடர்புகொண்டார்.
இதன்படி, விஜயதாச ராஜபக்ஷ வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இது குறித்துப் பேசுவதற்கு மிகவும் விருப்பத்துடன் முன்வந்தார்.
என்.எம். பெரேரா மண்டபத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த விடயம் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்காக அழைக்கப்பட்ட முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இதுவாகும். என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்ற அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜி.எல். பீரிஸ், ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து பின்வருமாறு விளக்கினார்:
‘உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய பிரதம நீதியரசருக்கு மேலும் இரண்டு வருடப் பதவிக்காலத்தை வழங்குவதே இந்த முயற்சியின் அடிப்படை நோக்கமாகும்.
இது மிகவும் ஆபத்தான நிலைமை. அவர்களுக்கு ஒரு வேலைத்திட்டம் இருக்கிறது. அதாவது அரசாங்கத்திற்கும் பிரதம நீதியரசருக்கும் இடையில் ஒரு உடன்பாடு உள்ளது.
65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பது அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மேலும் இரண்டு வருடங்களுக்குப் பதவிக்காலத்தை நீடிக்கப் பார்க்கிறார்கள். அந்தக் காலப்பகுதியில், எதிர்க்கட்சியின் பல தலைவர்களைச் சிறையில் அடைக்கும் ஒரு அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு இதன்மூ10லம் அடித்தளம் இடப்படுகிறது.
நெருக்கடியில் சர்வதேச உறவுகள்
வரலாற்றில் இருந்தே இலங்கையைப் பாதிக்கும் சர்வதேசப் பிரச்சினைகளின் போது, நாட்டையும் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்காமல் பாதுகாத்தது அன்றைய ஆட்சியாளர்கள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படையிலாகும்.
குறிப்பாக 1970-77 சமகி பெரமுன ஆட்சி காலத்தில் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பின்பற்றிய அணிசேரா வெளியுறவுக் கொள்கை சர்வதேச ரீதியில் பெரும் புகழ்பெற்றது.
அவர் எந்தவொரு நாட்டுக்கும் சார்பற்ற வகையில் சமநிலையான வெளியுறவுக் கொள்கையைக் கையாண்டதால் சர்வதேச ரீதியில் பெரும் அங்கீகாரத்தையும் ஈர்ப்பையும் பெற்றார்.
அதன் பின்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, சீனாவுடனும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் பாரிய இராஜதந்திர உறவுகளைக் கட்டியெழுப்பி பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அணிசேரா கொள்கையைப் பின்பற்றும் அதேவேளை இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார்.
பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ சீனாவுடன் பெருமளவில் தொடர்புகளைப் பேணி பாரிய அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டுவந்தார்.
இவ்வாறாக ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் சர்வதேசத்திடமிருந்து முதலீடுகளையும் நன்மைகளையும் பெற முடியும் என்பதுடன், பலவீனமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவது நாட்டின் அபிவிருத்திக்கும் எதிர்காலத்திற்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது.
மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய இராஜதந்திர நெருக்கடிக்கு இந்த பலவீனமான வெளியுறவுக் கொள்கையே காரணமாகும் என அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சர்வதேசத்தின் இரண்டு பலம் வாய்ந்த நாடுகள் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், ஏனைய நாடுகள் அதற்கு வழங்கும் எதிர்வினைகளைக் கொண்டு அந்தந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கை வெளிப்படுவது தவிர்க்க முடியாதது.
அந்த வகையில் மத்திய கிழக்கின் பல நாடுகள் இப்போரில் பகிரங்கமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தங்கள் வெளியுறவுக் கொள்கையை கையாளுவதைக் காண முடிகிறது.
ஆனால் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் இதில் ஒரு சுயாதீனமான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதேநேரம் ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் இப்போரில் ஈரானுக்கு ஆதரவான முறையில் செயற்படுவதைக் காண முடிகிறது.
அந்த வகையில் மத்திய கிழக்கு யுத்தம் தொடர்பாக அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கடைப்பிடிக்கும் வெளியுறவுக் கொள்கை எத்தகையது என்பதை பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.
அமெரிக்க சார்பா?
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடதுசாரி சார்புடைய ஒன்றாகவே கருதப்படுகிறது.
இதனால் உள்நாட்டில் இடதுசாரி கொள்கைகளே நடைமுறைப்படுத்தப்படும் என்று பலரும் எதிர்பார்த்த போதிலும், தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஊடாக திசைகாட்டி அரசாங்கம் இடதுசாரியா, வலதுசாரியா அல்லது தீவிர வலதுசாரியா என்பதைக்கூட அடையாளம் காண முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
குறிப்பாக போர் தொடங்கிய நாள் முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் போது, தாம் எந்தவொரு நாட்டுக்கும் சார்பற்ற நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதாகவே அரசாங்கம் கூறி வந்தது.
எவ்வாறாயினும், சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்குச் சொந்தமான பிரத்தியேகப் பொருளாதாரக் கடல் வலயத்தில் ஈரானியக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களைப் பார்க்கும்போது,
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை நடுநிலையாகச் செயற்பட்டதா என்பது குறித்துப் பல பாரிய கேள்விகள் எழுந்துள்ளன.
அத்தாக்குதல் இடம்பெற்றவுடன் கடற்படையினர் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி, அக் கப்பல் தாக்குதலினால் மூழ்கவில்லை எனக் கூறினர்.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணித்தியாலங்கள் முடிவதற்குள், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டு, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட டோர்பிடோ தாக்குதலின் மூலமே அந்த ஈரானியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்கா நடத்திய கடும் தாக்குதல்கள் காரணமாக, ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி ஒட்டுமொத்த உலகையும் ஒரு பாரிய நெருக்கடிக்குள் தள்ளியது.
இதன் விளைவாக இலங்கையிலும் எரிபொருள் வரிசைகள் தோன்றி, எண்ணெயைக் கட்டுப்படுத்தவும் விலையை உயர்த்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததைக் காண முடிந்தது.
ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், போரின் போது இலங்கை பின்பற்றிய வெளியுறவுக் கொள்கையினால் அவசரத்திற்கு ஒரு எண்ணெய் கப்பலைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு அரசாங்கம் தற்போது தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பல சம்பவங்களைப் பார்க்கும் போது, இப்போரில் இலங்கை அமெரிக்காவிற்குச் சார்பான ஒரு நிலையில் இருந்தே வெளியுறவுக் கொள்கையை முன்னெடுப்பதாகப் பலருக்கும் தோன்றியது.
ஆனால் அதையாவது சரியான முறையில் செய்தார்களா என்ற கேள்வி இப்போது பலருக்கு எழுந்துள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து மத்திய கிழக்கு போர் தொடர்பாக ஆற்றிய விசேட உரை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது.
இக்கூற்றுக்கள் காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பிலிருந்தும் இலங்கைக்கு தற்போது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தனது உரையின் போது, அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவோ என்னவோ, ஒரு கட்டத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் இரண்டு மத்தள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரிய போதிலும் அதற்குத் தாம் இடமளிக்கவில்லை எனக் கூறினார்.
மறுபுறம், ஈரானியக் கப்பல்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வருவது பற்றி அரசாங்கத்திற்குத் தெரியாது என்றும் அவர் ஒரு கருத்தை வெளியிட்டார். இக்கூற்றுக்கள் இரண்டுமே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் மூலம் தெளிவாகக் காண முடிகிறது.
முதலாவதாக, அமெரிக்க விமானங்கள் இரண்டு இலங்கை வான்பரப்பிற்குள் நுழையவும் மத்தள விமான நிலையத்திற்கு வரவும் அனுமதி வழங்கவில்லை என ஜனாதிபதி கூறிய விடயத்தை அமெரிக்கத் தரப்பு மிகத் தீவிரமாக எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த அறிக்கையைத் தமக்கு இழைக்கப்பட்ட ஒரு அவமதிப்பாகவும், குறைத்து மதிப்பிடும் செயலாகவும் அவர்கள் கருதுவதாக அறிய முடிகிறது.
ஜனாதிபதியின் இக்கூற்றுக்கு அமெரிக்கா இதுவரை நேரடியான பதில் எதனையும் வழங்கவில்லை என்றாலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இவ்விடயம் குறித்துத் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது வரை உத்தியோகபூர்வ பதில் எதுவும் வராத போதிலும், விரைவில் இது தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக உத்தியோகபூர்வமான ஒரு சம்பவம் நிகழக்கூடும் எனத் தெரிகிறது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
டொனால்ட் ட்ரம்பின் இரு விசேட பிரதிநிதிகள் ஒரே நாளில் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் மத்திய மற்றும் ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிச் செயலாளரும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் ஆவார்.
இவர் டொனால்ட் ட்ரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர் எனப் பெயர் பெற்றவர். இவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த அதேவேளை, வொஷிங்டனில் இருந்து மற்றுமொரு விசேட பிரதிநிதியான மைக்கேல் ஜெரமியா என்பவரும் மிகவும் இரகசியமாக இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இங்கு செர்ஜியோ கோர் ஜனாதிபதியைச் சந்தித்து நடத்திய கலந்துரையாடலில், கொழும்புத் துறைமுகம் உள்ளிட்ட இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பைப் பேணுவதில் அமெரிக்கா எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்துக் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது.
இலங்கையின் துறைமுகங்கள் தொடர்பில் அமெரிக்கா உணர்திறனுடன் செயற்படுவது இன்று நேற்றல்ல. அத்துறைமுகங்களில் உள்ள முக்கிய இடங்களைக் கைப்பற்றுவது குறித்து நீண்ட காலமாகவே அமெரிக்கா இலங்கைக்கு முன்மொழிவுகளை முன்வைத்து வந்தது.
அது தொடர்பாகவும் செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான இச்சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு, திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்குமாறு கோர் முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்தத் திட்டம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கோரின் இந்தக் கோரிக்கைக்கு ஜனாதிபதி எவ்விதப் பதிலும் கூறாமல் மௌனம் காத்ததாகத் தெரியவருகிறது.
அதற்கு மேலதிகமாக, ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு போயிங் ரக நவீன விமானங்களை வழங்கி, அந்தச் சேவையை முழுமையாக ஒரு பாரிய மறுசீரமைப்பிற்கு உட்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் திறன் ஜனாதிபதிக்கு இருக்கிறதா? இதற்காக அமெரிக்காவிடமும் சில பலமான துருப்புச் சீட்டுகள் இல்லாமலில்லை.
ட்ரம்ப் இலங்கையை இலக்கு வைத்து விதித்த வரி விதிப்பு இதற்குச் சிறந்த உதாரணமாகும். ஆரம்பத்தில் ட்ரம்ப் விதித்த 40 வீத சுங்க வரியை 20 வீதமாகக் குறைத்துக்கொள்ள அரசாங்கத்திற்கு இரண்டு மாத காலத்திற்குள் முடிந்தது.
அமெரிக்கா விதித்த பல நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியே அதற்குக் காரணமாகும். எனவே, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு ஒரு பதிலடியாக அமெரிக்கா இவ்வாறான துருப்புச் சீட்டுகளைப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் இந்த வரியை மீண்டும் 40வீதமாக உயர்த்தும் அதிகாரம் ட்ரம்ப் அரசாங்கத்திடம் உள்ளது.
(லியோ நிரோஷ தர்ஷன்)