இலங்கைக்குச் சுற்றுலா வந்த இந்தியப் பெண் ஒருவர், அந்நாட்டின் கடற்கரைகளின் தூய்மையைக் கண்டு தான் அடைந்த வியப்பையும், அதேநேரம் இந்தியாவின் நிலைமையைக் கண்டு தான் அடைந்த மனவேதனையையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிரான்சில் வசிக்கும் இந்தியப் பெண்ணான மெஹைக் (Mehaik), தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இலங்கைப் பயண அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், இந்தியக் கடற்கரைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக் கடற்கரைகள் எவ்வளவு தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இலங்கை என்னை வெட்கப்பட வைத்துவிட்டது” என்று தனது உரையைத் தொடங்கிய அவர், “பொருளாதார ரீதியாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்து, வப்பால் திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஒரு சிறிய நாடு இது. இருப்பினும், இங்குள்ள கடற்கரைகள் மிகவும் தூய்மையாக உள்ளன. ஒரு பிளாஸ்டிக் போத்தலோ அல்லது சிறு கழிவுகளோ கூட கண்ணில் தென்படவில்லை” என வியந்துள்ளார்.
“இந்தியா பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக வளங்களைக் கொண்ட நாடாக இருந்தும், எம்மால் ஏன் நமது கடற்கரைகளை இவ்வளவு தூய்மையாக வைத்திருக்க முடியவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் இந்தியாவை ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடவில்லை என்றும், இந்தியாவைப் போன்றே வளர்ந்து வரும் நாடான இலங்கையுடனேயே ஒப்பிடுவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
“பணம் மட்டுமே தூய்மைக்குக் காரணம் அல்ல என்பது இப்போது தெளிவாகிறது. அப்படியென்றால் நமது சாக்குப்போக்கு என்ன?
ஒருவேளை நாம் கேட்க விரும்பாத கசப்பான உண்மை நமது ‘சமூகப் பொறுப்புணர்வின்மை’ தானா? உண்மையான பிரச்சினை எங்கே இருக்கிறது?” என அவர் தனது வீடியோவில் உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் இயற்கை அழகும், கடற்கரை பராமரிப்பும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், மெஹைக்கின் இந்த வீடியோ இந்தியத் தரப்பில் சுயபரிசோதனைக்கான ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது.

