கடந்த வாரம் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பிலிருந்து ( North Atlantic Treaty Organization) — NATO) அமெரிக்கா வெளியேறுவது என்பதில் இனிமேல் “மறுபரிசீலனைக்கே இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான அமெரிக்காவின் பழமையான கூட்டணிகளில் ஒன்று முறிவின் விளிம்பில் இருப்பதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

நேட்டோவை ஒரு “காகிதப் புலி” என்று ட்ரம்ப் வர்ணித்திருப்பது கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் கசப்புணர்வையும், தற்போது ஈரானுடன் நடந்து வரும் போரினால் அதிகரித்துள்ள முரண்நிலையையும் பிரதிபலிக்கிறது.

இருப்பினும், 32 நாடுகளைக் கொண்ட 76 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா அவ்வளவு எளிதாக வெளியேறிவிட முடியாது.

ட்ரம்ப் நேட்டோ மீது கோபமாக இருப்பது ஏன்?

‘தி டெலிகிராப்’ இதழுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கோபத்தை வெளிப்படுத்தியதற்கு உடனடி காரணம், ஈரான் போரில் அமெரிக்காவுக்கு இராணுவ மற்றும் வான்வழி ஆதரவு வழங்க பெரும்பாலான நேட்டோ நாடுகள் மறுத்ததேயாகும். அண்மைய வாரங்களில் ஈரானில் அமெரிக்கா பெரும் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையில், இந்த உதவி கோரப்பட்டது.

ஸ்பெயினும் இத்தாலியும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை நேரடியாக விமர்சித்திருக்கின்றன. பிரான்ஸ், அமெரிக்க போர் விமானங்கள் இஸ்ரேலுக்குச் செல்வதற்கான வான்வழி அனுமதியை மறுத்துள்ளது.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி மற்றும் கனடா கூட இந்த இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு மறுத்து விட்டன.

நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5-இன் பிரகாரம் , “ஒரு நேட்டோ உறுப்பு நாடு மீது நடத்தப்படும் தாக்குதல் அனைத்து உறுப்பு நாடுகள் மீதும் நடத்தப்படுகின்ற தாக்குதலாகவே கருதப்படும்”. நட்பு நாடுகளின் தற்போதைய நிலைப்பாடு இந்த விதியை மீறுவதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ இது பற்றி கூறுகையில், “தாக்கப்பட்டால் ஐரோப்பாவைப் பாதுகாப்பது மட்டுமே நேட்டோவின் வேலை என்றும் எங்களுக்குத் தேவைப்படும்போது அவர்கள் தளம் வழங்க மறுப்பதும் சரியான ஒப்பந்தம் அல்ல” என்று குறிப்பிட்டார்.

இதனால் நேட்டோவின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் உறுப்பு நாட்டுத் தகுதிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியவையாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

நேட்டோவின் நோக்கம் என்ன?

சோவியத் யூனியனின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள 1949 ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா மற்றும் 10 மேற்கு ஐரோப்பிய நாடுகளால் நேட்டோ உருவாக்கப்பட்டது. “கூட்டுப் பாதுகாப்பு” (Collective Security) என்பதே இதன் முக்கிய நோக்கம்.

காலப்போக்கில் கிரேக்கம், துருக்கி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைந்து கொண்டன . சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அதில் இணைந்தன.

2022 ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு, பின்லாந்தும் ஸ்வீடனும் இணைந்து கொண்டதன் மூலம் நேட்டோவின் மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.

நேட்டோவிற்கு என்று தனியான இராணுவம் கிடையாது. தேவை ஏற்படும்போது உறுப்பு நாடுகளின் படைகள் ஒன்றிணைக்கப்படும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தில் உள்ளது.

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் தானாக முன்வந்து உதவியிருக்க வேண்டும் என்பது ஜனாதிபதி ட்ரம்பின் வாதம். “உக்ரைன் போர் எங்களுக்கு ஒரு பிரச்சினையாக. இருக்கவில்லை என்றாலும், நாங்கள் அவர்களுக்கு உதவினோம். ஆனால் எங்களுக்குத் தேவைப்படும்போது அவர்கள் எங்களுடன் இல்லை” என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

நேட்டோவிற்கு அமெரிக்கா எவ்வளவு பங்களிக்கிறது?

நேட்டோவின் செயற்பாடுகளில் அமெரிக்காவின் பங்களிப்பு மிக அதிகம் நேட்டோவின் மொத்த பாதுகாப்புச் செலவில் 62. சதவீதத்தை அமெரிக்கா வழங்குகிறது.

சிவில் பட்ஜெட்டில் 15 சதவீதத்தை அமெரிக்கா பங்களிக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு “அணு ஆயுதக் பாதுகாப்பு குடையை” (Nuclear Umbrella) அமெரிக்கா வழங்குகிறது.

2025 ஹேக் உச்சிமாநாட்டில், அனைத்து நேட்டோ நாடுகளும் தங்கள் நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத் தொகையை 2035 ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புக்காகச் செலவிடுவதற்கு ஒப்புக் கொண்டன. என்றாலும், மற்றைய நாடுகள் தங்கள் சுமையைத் தாங்களே சுமக்க வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

“அணுசக்தி குடை” (nuclear umbrella) பாதுகாப்பை வழங்குகின்ற அதேேவேளை, பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்கா இராணுவ தளங்களையும் பராமரித்து வருகிறது.

நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது எவ்வளவு கடினம்?

நேட்டோ அல்லது கூட்டணி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது.

2026 ஜனவரியில் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கட்டமைப்பு ஒப்பந்தம் (UNFCCC) உள்ளிட்ட 60-க்கும் அதிகமான பல்வேறு பலதரப்பு அமைப்புகளில் இருந்தும் ஒப்பந்தங்களில் இருந்தும் வெளியேறியதை விடவும் இது பல மடங்கு கடினமானது.

மேலும், ஜனவரி 2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறியதை (Brexit) விட இது சட்டரீதியாகவும் மிகவும் சிக்கலானது.

நேட்டோ ஒப்பந்தத்தின் 13 வது பிரிவு எந்தவொரு உறுப்பு நாடும் விலகுவதற்கு வழிவகை செய்கிறது. ஆனால், அந்த உறுப்பு நாடு அமெரிக்க அரசாங்கத்திற்கு ஓருவருட கால விலகல் அறிவிப்பை (notice of denunciation) சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்கா அதை மற்ற நாடுகளுக்குத் தெரிவிக்கும்” என்று அந்தப் பிரிவு கூறுகிறது.

அமெரிக்காவே இந்த ஒப்பந்தத்தின் பாதுகாப்பு அதிகாரமாக (depository authority) இருப்பதால், அமெரிக்க அரசாங்கம் தனக்குத் தானே அந்த அறிவிப்பை வழங்கிக் கொண்டு, பின்னர் மற்ற நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கும்; இது ஒரு சங்கடமான நடைமுறையாக இருக்கும்.

மேலும், ட்ரம்ப் தனது முதலாவது பதவிக் காலத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக, 2023 ஆம் ஆண்டில் பைடன் நிருவாகம் அமெரிக்க காங்கிரஸில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.

அந்தச் சட்டம், “செனட்டின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் அல்லது காங்கிரஸின் சட்டம் இல்லாமல் நேட்டோ ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை இடைநிறுத்தவோ, நிறுத்தவோ, கைவிடவோ அல்லது விலக்கவோ” அமெரிக்க ஜனாதிபதிக்குத் தடை விதிக்கிறது.

மாற்று வழிகளாக, அமெரிக்கா தனது பணியாளர்களை நேட்டோ தலைமையகத்திலிருந்து திரும்பப் பெறலாம் அல்லது நேட்டோவின் கூட்டங்களைத் தவிர்க்கலாம் — பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் ( சார்க் ) உச்சிமாநாடுகளில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்ப்பதைப் போன்று இதை அமெரிக்கா செய்யலாம். அவ்வாறு செய்தால் நேட்டோ செயலற்றதாக்கிவிடும்.

உலக ஒழுங்கின் மீதான அதன் தாக்கத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக ஒரு போரின் நடுவில், நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்புகள் அனைத்தையும் மாற்றியமைக்க வழிவகுக்கும், மேற்கத்தைய கூட்டணியின் பிடியை கடுமையாக பலவீனப்படுத்தும். மேலும் ரஷ்யா மற்றும் சீனா போன்ற பிற உலக சக்திகளை வலுப்படுத்தும்.

எனவே, அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் இத்தகைய ஒரு கடுமையான நடவடிக்கையைத் தவிர்க்கவே முயற்சிப்பார்கள் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமாக, நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஏப்ரல் 8 ஆம் திகதி வாஷிங்டனுக்கு மேற்கொள்ளும் பயணம் அமையும்.

-சுஹாசினி ஹைதர்

 

Share.
Leave A Reply

Exit mobile version