9 வயதில் தொடங்கிய இசைப் பயணம்.. யார் இந்த ஆஷா போஸ்லே.? கடந்துவந்த பாதை!
இசை உலகில் கொடிக்கட்டிப்பறந்த பாடகி ஆஷா போஸ்லே தன்னுடைய 92 வயதில் வயதுமூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
ஆஷா போஸ்லே.. இந்திய இசையின் மயக்கும் குரல். இசை உலகில் பல சாதனைகள் புரிந்த குரலை இன்று மரணம் மௌனமாக்கி இருக்கிறது. ஏகப்பட்ட பாடல்கள் மூலம் அனைத்து மொழி ரசிகர்களின் மனங்களிலும் இடம்பெற்றவர், வாழ்க்கை பயணமும், இசைபயணமும் கவனிக்க தக்கது.

9 வயதில் தொடங்கிய இசைப்பயணம்..
இப்போதைய மகாராஷ்டிரா, அப்போதைய சாங்லியில் உள்ள கோர் எனும் குக்கிராமத்தில் 1933ஆம் ஆண்டு பிறந்தவர் ஆஷா போஸ்லே. தந்தை மராத்திய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர்.
ஆஷாவுக்கு ஒன்பது வயது இருக்கும் போதே, அவரது தந்தை காலமானதும், குடும்பமே மும்பைக்கு குடி பெயர்ந்தது.
அவரது மூத்த சகோதரியான லதா மங்கேஷ்கர் உடன் குடும்பத்தைப் பேணுவதற்காக திரைப்படங்களில் நடிக்கவும் பாடவும் துவங்கினார்
ஆஷா. 1943ஆம் ஆண்டு தன்னுடைய இசைப்பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லே, கர்நாடக இசை, கஜல், பஜனைப் பாடல்கள், பாப் இசை என பல்வேறு வகை பாடல்களை பாடியுள்ளார்.
1943-ல் தட்டா தவ்ஜேக்கர் இசையில் உருவான Majha Bal என்ற மராத்தி படத்தில் Chala Chala Nav Bala என்ற பாடல் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்
ஆஷா. இந்தியில் அவரது அறிமுகம் 1948-ல் ஹன்ஸ்ராஜ் பெல் இசையமைத்த Chunariya படத்தில் Saawan Aaya பாடல் மூலம் அமைந்தது.
அதன் பின்னர் No Looking Back என்றே சொல்லலாம். வரிசையாக பாடல்கள், அவரது குரலுக்கு சொக்கி போன ரசிகர்கள் என இசை ராஜ்ஜியத்தை கட்டமைத்தார்.
Dum Maro Dum – Hare Rama Hare Krishna
Jhumka Gira Re – Mera Saaya
Eena Meena Deeka – Asha
Yeh Mera Dil Yaar Ka Diwana – Don
Rangeela Re – Rangeela
40-களில் ஆஷா போஸ்லேவின் ஆதிக்கம்..
40-களின் துவக்கத்திலிருந்து 50கள் வரை முன்னணி பாடகர்களாக இருந்தவர்களுடன் போட்டி போட்டு பாடும் அளவுக்கு வளர்ந்தார்.
50களில் மிக அதிக பாடல்களை பாடும் அளவுக்கு முன்னேறினார். 1940களில் இருந்து 2020 வரையில் எக்கசெக்கமான பாடல்களை பாடியுள்ளார்.
என அவர் பணியாற்றிய எந்த காலகட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த வருடத்தின் முக்கிய பாடலாக இருப்பது அவரது குரலில் உருவான பாடலாக தான் இருக்கும்.
அது எந்த அளவுக்கு என்றால் Pop Culture Reference ஆக அவர் மாறி போனதை குறிக்கும் படி நம்முடைய தமிழ் படம் ஒன்றில் வடிவேலு ‘பெரிய ஆஷா போஸ்லே’ என்று குறிப்பிடும் காட்சி இருக்கும்.
.
தமிழில் மறக்க முடியாத பாடல்கள்..
இந்த அழகான குரலை தமிழுக்கு அழைத்து வந்த பெருமை இளையராஜாவையே சாரும். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் செண்பகமே செண்பகமே பாடல் தான் ஆஷாவின் முதல் தமிழ் பாடல்.
பின்னர் சேதுபதி IPS படத்தில் நட சாத்து, மீரா படத்தில் ஓ பட்டர்ஃபிளை,
நேருக்கு நேர் படத்தில் எங்கேங்கே,
இருவர் படத்தில் வெண்ணிலா வெண்ணிலா,
ஹேராம் படத்தில் நீ பார்த்த,
அலைபாயுதே படத்தில் செப்டம்பர் மாதம்,
சந்திரமுகி படத்தில் கொஞ்ச நேரம் என மறக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் பொறுத்தவரை அவர் பாடிய பாடல்களின் அளவு குறைவே என்றாலும், அப்பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாத தன்மையுடன் இருக்கும்.

O. P. Nayyar, Khayyam, Ravi, S D Burman, R D Burman, Bappi Lahiri, Ilaiyaraaja, A R Rahman, Jaidev, Shankar–Jaikishan, Anu Malik ஆகிய இசையாமைப்பாளர்களுடன் அதிக பாடல்களில் பணியாற்றியுள்ளார்.
விருதுகளுக்கே பெருமை சேர்த்த போஸ்லே..
இரண்டு தேசிய விருது, தாதா பால்கேசாப் விருது, பத்ம விபூஷன், கிராமி விருதுகளுக்கு மூன்று முறை நாமினேட் ஆனவர், இந்தியாவிலிருந்து கிராமிக்கு நாமினேட் ஆன முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கே.

பத்ம விபூஷன் ஆஷா போஸ்லே
இதெற்கெல்லாம் மணி மகுடம் போல இதுவரை யாரும் செய்யாத, இனியும் செய்ய வாய்ப்பில்லாத ஒன்றையும் செய்துள்ளார்
ஆஷா. 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதற்காக கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றுள்ளார். அதாவது உலகத்திலேயே அதிக பாடல்களை பாடியவர் என்ற சாதனைக்காக.
தனிப்பட்ட வாழ்க்கை..
16 வயதில் காதல்:
ஆஷா போஸ்லேவின் 80 ஆண்டு கால வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. போஸ்லே தனது 16 வயதில் தனது தனிப்பட்ட செயலாளரான கணபத்ராவ் போஸ்லேவை திருமணம் செய்தார்.
அவருக்கு அவருடன் மூன்று குழந்தைகள் இருந்தனர், ஆனால் கணவர் மற்றும் மாமியார் பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியதால் போஸ்லே 1960 இல் கணபத்ராவிடம் இருந்து பிரிந்தார்.
கர்ப்பமாக இருந்தபோது தன் கணவர் வீட்டை விட்டு வெளியில் வந்தார். இது குறித்து ஒரு முறை ஆஷா போஸ்லே கூறுகையில்,”எங்களது திருமணம் காதல் திருமணம். இதற்காக லதா அக்கா என்னிடம் நீண்ட நாட்களாக பேசவில்லை.
அவர் எங்களை ஏற்கவில்லை. ஆனால் கணவன் வீட்டில் துன்புறுத்தல், கொடுமை காரணமாக என் இளைய மகன் ஆனந்த் வயிற்றில் இருந்தபோது என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர்.
நான் என் அம்மா, சகோதரிகள் மற்றும் சகோதரனிடம் திரும்பிச் சென்றேன். நான் யாரையும் குறை சொல்லவில்லை” என்று கூறினார்.
தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, ஆஷா போஸ்லே பின்னர் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனை 1980 இல் திருமணம் செய்துகொண்டார்.
ஆரம்ப காலகட்டத்தில் சிரமம், முதல் திருமணத்தில் பிரச்னை, சகோதரி லதா உடன் மனஸ்தாபம் என அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சிரமங்கள் இருந்த போதும் இசை என வந்துவிட்டால் அவரின் குரலால் மகிழ்விப்பதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை.
ஆனாலும் 2010க்கு பிறகு நான் நிறைய பாடிவிட்டேன் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததால் பாட்டு பாடுவதை நிறுத்திக் கொள்ளும் யோசனையில் இருந்தார்.

ஆஷா போஸ்லே
2012க்கு பிறகு பாலிவுட் பாடல்களில் ஆபாச வார்த்தைகள் அதிகமாகிவிட்டது என்ற எண்ணம் இன்னும் அதற்கு வலு சேர்க்க மெல்ல மெல்ல பாடுவதை குறைத்தார்.
2022க்கு பின் பாடுவதே இல்லை என்ற முடிவில் இருந்தவர் அதை 2024ல் தளர்த்தி ஒரே ஒரு பாடல் பாடினார். அப்படி அவர் தனது 91வது வயதில் பாடிய Saiyaan Bina அவரின் இசை குடும்ப பாரம்பரியத்தை விளக்கும் பாடலாக அமைந்தது.
இந்த உலகில் திறமையாளர்கள் மறைந்தாலும், அவர்களின் கலை என்றும் நிலைத்து நிற்கும் என்பது ஆஷாவின் வாழ்க்கையிலும் நிகழும் என்ற நிஜத்தை ஏற்றுக் கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.


