அமெரிக்காவின் முடிவில்லாத போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்தே டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார்.
அந்த வாக்குறுதி இப்போது மேற்கு ஆசியாவில் சாம்பலாகக் கிடக்கின்றது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து, பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக முழு அளவிலான போரைத் தொடங்கி, அதன் உச்சநிலைத் தலைவர் அயதுல்லா அலி காமேனியைப் (Ayatollah Ali Khamenei) படுகொலை செய்த அந்த அதிதீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் (ட்ரம்ப்),
ஓவல் அலுவலகத்தை (Oval Office) அலங்கரித்த மிக மோசமான போர்க்குணமிக்கவர்களில் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளார்.
இந்த இருவரின் கைகளிலும் இரத்தம் படிந்துள்ளது: ஒருவர், அமெரிக்காவை ஒரு தறுதலை வல்லரசாக (rogue superpower) மாற்றிக்கொண்டிருக்கும் நிலையற்ற தீவிர தேசியவாதி.
மற்றவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க்குற்றங்களுக்காகத் தேடப்படும் ஒரு விஸ்தரிப்புவாத இனத்தேசியவாதி (expansionist ethnonationalist).
ட்ரம்ப் பதவியேற்ற 13 மாதங்களில் குறைந்தது ஏழு நாடுகளின் மீது குண்டுவீச்சு நடத்தியுள்ளார். நெதன்யாகுவின் கீழ், இஸ்ரேல் சர்வதேச சட்டத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டே செயல்பட்டு வருகின்றது.
பாரசீக வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.
இது போரை விஸ்தரிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. உலகளாவிய பொருளாதார பாதிப்பை, குறிப்பாக இந்தியா போன்ற முக்கிய எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதாகவும் தெஹ்ரான் அறிவித்துள்ளது.
தெளிவாகச் சொல்வதானால், இஸ்ரேல் சொல்வது போல இது ஒரு ‘தற்காப்புக்கான முன்னெச்சரிக்கை’ (pre-emptive) போர் அல்ல.
ஈரான் தாக்குதலை நடத்தத் தயாராக இருந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்தில் வாஷிங்டனுடன் தெஹ்ரான் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது.
பெப்ரவரி 27 அன்று, ஓமானின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதி (Badr al-Busaidi), ஈரான் அணுகுண்டைத் தயாரிக்காது அல்லது அணுசக்தித் தேவையான பொருட்களை சேமிக்காது என்ற உறுதிமொழியின் அடிப்படையில் ஓர் உடன்பாடு எட்டக்கூடியதாக இருந்தது என்று கூறினார்.
ஆனால் சில மணிநேரங்களிலேயே, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானைத் தாக்கி, அந்நாட்டின் தலைவரையும் உயர்மட்டத் தலைவர்களையும் கொன்றன.
இராஜதந்திரத்தை மீறி படைபலம் பயன்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. 2015 ஆம் ஆண்டு ஈரானுடான செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, 2018 இல் ட்ரம்ப் ஒற்றை ஆளாகச் சீர்குலைத்தார்.
ஜூன் 2025 இல், ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே, இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாகத் தாக்குதலைத் தொடுத்தது, இது 12 நாள் போருக்கு வழிவகுத்தது. இருப்பினும், இந்த முறை தாக்குதல் மிகவும் ஆபத்தானது.
ட்ரம்ப் கூறுவது போல, இந்தப் போர் ஈரானியர்களுக்கு ‘சுதந்திரம்’ வழங்குவதற்காக அல்ல. சுதந்திரம் என்பதே பேச்சில் இல்லாத பல அடக்குமுறை முடியாட்சிகள் மற்றும் சர்வாதிகார அமைப்புகளுடன் அமெரிக்கா நெருங்கிய உறவைப் பேணி வருகின்றது.
தற்காப்பற்ற, நாடற்ற பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைக்கும் குற்றங்கள் குறித்தும் வாஷிங்டன் எந்தத் அக்கறையையும் காட்டவில்லை.
இது ஒரு விருப்பத்தின் பேரில் தொடுக்கப்பட்ட போர் (war of choice). எதிரியை ஒழிப்பதற்கும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு ஏற்ப பிராந்தியத்தை மாற்றியமைப்பதற்காகவும் இது தொடங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்பில் இத்தகைய ஈனச்செயலை (thuggery) ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஏகாதிபத்திய ஜோடியின் போர் இயந்திரங்கள் ஏற்கனவே இப்பிராந்தியத்தைச் சிதைத்துவிட்டன.
நெருப்பு மேலும் பரவுவதற்கு முன், இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும். அமெரிக்கா பின்வாங்க வேண்டும் மற்றும் இஸ்ரேல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கின் கடைசி எச்சமும் முழுமையாக சிதைந்துவிடும்.
-‘தி இந்து’ ஆசிரிய தலையங்கம்

