– 1993-க்குப் பிறகு லெபனான்- இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை
அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் ஒரு ‘பெரிய ஒப்பந்தம்’ செய்ய விரும்புவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், செவ்வாயன்று (ஏப்ரல் 14) அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.
சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, ஜார்ஜியாவின் ஏதென்ஸில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ஜே.டி. வான்ஸ், கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகளில் ‘குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
“டிரம்ப் இரானுடன் ஒரு சிறிய ஒப்பந்தத்தை அல்ல, ஒரு பெரிய ஒப்பந்தத்தை செய்ய விரும்புவதாக”, அவர் கூறினார்.
அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையே ஒருவித நம்பிக்கையின்மை நிலவுவதையும் வான்ஸ் ஒப்புக்கொண்டார்.
1993-க்குப் பிறகு லெபனான்- இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இதை ஒரு ‘வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வாய்ப்பு’ என்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இந்த முயற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, இதன் நோக்கம் இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவிற்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.
பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இதை ஒரு “வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வாய்ப்பு” என்று விவரித்தார். இது ஹெஸ்பொலாவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு படியாக அமையும் என்று கூறினார்.
அமெரிக்கா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இரு தரப்பினரும் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது,
இருப்பினும் அதற்கான நேரமும் இடமும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஹெஸ்பொலாவைக் குறிப்பிட்டு, அரசு சாரா ஆயுதக் குழுக்கள் அனைத்தும் ஆயுதங்களை கைவிடுவதை தாங்கள் விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இதற்கிடையில், லெபனான் ஒரு போர்நிறுத்தத்தையும், நாட்டில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைச் சரிசெய்ய உறுதியான நடவடிக்கைகளையும் கோரியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே முறையான ராஜதந்திர உறவுகள் இல்லை. இந்த அளவிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் 1993இல் நடைபெற்றன.
மார்ச் 2 அன்று லெபனானில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின், இரான் மீதான தாக்குதல்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை தொடங்கியது.
செவ்வாயன்று (ஏப்ரல் 14), இரு தரப்பினரும் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, இஸ்ரேல் மற்றும் லெபனானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய துருப்புகள் மீது நடத்தப்பட்ட குறைந்தது 24 தாக்குதல்களுக்கு ஹெஸ்பொலா பொறுப்பேற்றது.
2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் காஸா போரின் போது இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் மோதிக்கொண்டன. இந்நிலையில், ஹெஸ்பொலாவை பலவீனப்படுத்துவதையும் அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தனது தாக்குதல் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.