மேற்காசியாவில் நிகழும் யுத்தமானது மீளமுடியாத பொருளாதார சுமையை உலகத்துக்கு தந்திருக்கின்றது.

அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போரில் உலகளாவிய விழுமிய நியதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

ஹார்மூஸ் நீரிணை மீதான ஈரான் -அமெரிக்கா முற்றுகையானது சமாதான முயற்சிக்கான வாய்ப்புகளை பலவீனப்படுத்தியதோடு, வத்திக்கானோடு அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் இராஜதந்திர ரீதியான மோதல் உலக நியதிக்கான அடிப்படைகள் அனைத்தையும் தகர்த்து வருவதாகத் தெரிகிறது.

ஈரான் மீதான போரில் அமெரிக்கா பெருமளவு தோல்வியை எதிர்நோக்கி உள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடனான இராணுவப் போரில் தோற்றாலும், இராஜதந்திர ரீதியான முயற்சிகளில் வெற்றிகரமான நகர்வை சாத்தியப்படுத்த முனைகின்றன.

‘போரை விட ஆபத்தானது சமாதானம்’ என்பது உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வரலாறு ஆகும். இதன் எல்லைக்குள்ளேயே ஈரான்- அமெரிக்கப் போர் நகர்கின்றது. ஆனால் ஈரானைப் பொறுத்தவரை இப்போரின் போக்கினை தீர்மானிக்கும் சக்தியாக அந்நாடு விளங்குகிறது.

சமாதானப் பேச்சுகளின் போது அமெரிக்காவின் நிபந்தனைகளை விடவும், ஈரானின் பத்து அம்ச நிபந்தனைகள் அதிகம் நியாயம் பொருந்தியதாக விளங்குகின்றன.

இதுவே இருதரப்புக்குமான சமநிலைத் தன்மையை அடையாளப்படுத்துகிறது. போரைப் போன்று சமாதானத்திலும் சமவலு உடைய சக்தியாக அமெரிக்காவுக்கு நிகரானதாக ஈரான் விளங்குகிறதா என்பதை அவதானித்தல் இங்கு அவசியமானது.

முதலாவது பாகிஸ்தானில் நிகழ்ந்த சமாதானப் பேச்சு வார்த்தையை (April 11-12, 2026) ஈரான் அணுகிய விதம் சர்வதேச மட்டத்தில் அதன் அடையாளத்தையும் நாகரிகத்தையும் (Minab-168) வெளிப்படுத்தியிருந்தது.

அமெரிக்க- இஸ்ரேலின் இந்நகர்வு இராஜதந்திர தோல்வி மிக்கது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமாதான உரையாடலின் மத்தியில் போரைத் தொடங்குவதும், அரசியல் தலைமைகளையும் இராணுவத் தலைமைகளையும் கொல்வதும் அந்தத் தரப்பின் நோக்கம் என்பது புரிகின்றது.

அதன் மூலம் மாற்றத்தை சாத்தியப்படுத்தலாம் என்ற உத்தியை முழுமையாகவே ஈரான் தகர்த்து விட்டது.

போரின் தொடக்க நாட்களில் கொல்லப்பட்ட சிறுவர்களின் நினைவாக சமாதான உரையாடலை முன்னெடுத்த ஈரான், இராஜதந்திர ரீதியில் முன்வைத்த நிபந்தனைகள் பத்தும் நியாயத்தன்மை பொருந்தியதாகவே இனங்காணப்படுகின்றன.

குறிப்பாக ஹார்மூஸ் நீரிணையில் ஈரானின் இறைமையை அங்கீகரித்தல், யுரேனியம் செறிவூட்டும் உரிமையை ஏற்றல், பொருளாதாரத் தடையை நீக்குதல், பிறநாடுகளுடனான வர்த்தகத் தடையை நீக்குதல், ஐ.நா பாதுகாப்புச்சபை தீர்மானங்களை இரத்துச் செய்தல், அணுசக்தி முகாமையின் தீர்மானங்களை இரத்து செய்தல், போர் இழப்பீடு வழங்குதல், அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து விலகல், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை ஏற்றல் என்பன நிபந்தனைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

போரின் களத்தை விட சமாதானத்தின் களம் அமெரிக்க தரப்புக்கு அதிக பாதிப்பு நிறைந்தது. ஆனாலும் அமெரிக்க- – இஸ்ரேலியக் கூட்டு ஓய்ந்து விட்டதாகக் கருத முடியாது. அத்தரப்பு இறுதிவரையும் போராடும் என்பது உறுதியானது.

இரண்டாவதாக… ஹார்மூஸ் நீரிணை முற்றுகை என்பது இருதரப்புகளாலும் அடையாளப்படுத்தப்பட்ட போரின் இன்னொரு வடிவம் ஆகும்.

இராணுவ கூட்டு தாக்குதலை கைவிட்டு, கடல் சார்ந்த போரை நகர்த்துவதன் மூலம் ஈரானின் இருப்பை முடிவுக்கு கொண்டு வரலாம் என அமெரிக்கா இப்போரில் திட்டமிட்டுள்ளது.

ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகை இடுவதன் ஊடாக ஈரானின் கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி இராணுவ வலிமையை தோற்கடித்து விட முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

ஆனாலும் ஹார்மூஸ் என்பது ஈரான்- ஓமான் என்பன தமது நாடுகளுக்கு பகிர்ந்துள்ள எல்லைகளாகும்.

அந்த எல்லைகள் சர்வதேச நிபந்தனைகளுக்குள் உட்பட்டவை என்ற அடிப்படையில் பொதுவானதாக அடையாளப்படுத்தப்பட்டாலும், ஈரான் அதனை முற்றுகையிட திட்டமிட்டது.

அங்குதான் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு அடையாளம் காணப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகின்றது.

இப்போரின் அடிப்படையானது பாகிஸ்தானில் நிகழ்ந்த பேச்சில் சமாதானம் உடைந்து போவதற்கான காரணமாகும்.

ஹார்மூஸ் பிராந்தியத்தில் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை கைப்பற்றுவதே அமெரிக்க- – இஸ்ரேலியக் கூட்டின் நோக்கமாக உணரப்படுகிறது.

இதனை இஸ்ரேல் அழித்து விடுவது அல்லது பாதுகாப்பாக கைப்பற்றுவது என்ற நகர்வின் அடிப்படையிலேயே அமெரிக்கா விமானங்கள் சகிதம் பாரிய கடல்படை நகர்வுகளைக் கொண்டு தாக்குதல் ஒன்றைத் திட்டமிட்டது.

அதில் பாரிய இழப்பை அமெரிக்கா எதிர்கொண்டது. இதனாலேயே மீண்டும் முற்றுகைப் போர் முக்கியத்துவம் பெறத் தொடங்கி இருக்கின்றது.

மூன்றாவதாக… சர்வதேச மட்டத்தில் மேற்குலக ஊடகங்கள் சர்வதேச விதிகளையும் கடல் சட்டங்களையும் அதிகம் பிரஸ்தாபிக்கத் தொடங்கியிருக்கின்றன.

போரின் ஆரம்ப நாட்களில் ஒரு நாட்டின் தலைவர்களை அழித்தொழிக்கின்ற போதும், சிறுவர்கள் கொல்லப்படுகின்ற போதும் மௌனமாய் நகர்ந்த மேற்குலக ஊடகங்கள் கடல் சட்டங்களையும் சர்வதேச நியதிகளையும் பிரஸ்தாபிக்க முனைவது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் தோல்வியை அடையாளப்படுத்துகிறது.

மேற்குலக ஊடகங்களே அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் அரசியல் இருப்பின் தோல்விக்கு பின்னால் இருக்கும் காரணிகள் என்பதை நிராகரித்து விட முடியாது.

மேற்காசியாவின் விடயத்தில் மேற்குலகம் வகுத்த அனைத்து கொள்கைகளுக்கும் மேற்குலக ஊடகங்கள் பங்காளிகளாக இருந்தன.

ஈரானின் நியாயமற்ற நடைமுறைகளை விவாதிக்க மேற்குலக ஊடகங்கள் தயாராக இருந்தன. ஆனால் அமெரிக்க- இஸ்ரேலின் கூட்டு இத்தாக்குதலின் நியாயமற்ற பக்கங்களை உரையாடுவதற்கு தயாராக இல்லை.

இதுவே உலக அராஜகத்தின் இருப்புக்கான வடிவமாக தெரிகின்றது. மேற்குலகத்தின் ஆதிக்கத்தை தமது நியாயமற்ற இருப்புக்குள் வைத்துக் கொள்ள அங்குள்ள ஊடகங்கள் முற்படுகின்றன.

நான்காவதாக… அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் வத்திக்கானுடன் நிகழ்த்தும் மோதல் என்பது அதன் நியாயமற்ற, நெறிமுறை இல்லாத சமூக இருப்பின் வடிவத்தை அடையாளப்படுத்தி இருக்கின்றது.

வத்திக்கான் மீதான அமெரிக்காவின் விமர்சனம் அதன் மேலாதிக்கத்தின் அடையாளமாகும். இங்கே அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தேவையானது உலக மேலாதிக்கத்துக்கான அதிகாரம் மட்டுமே.

எனவே ஈரான் மீதான் போர் சீனாவிலுள்ள பீஜிங் மூன்ஷிட் கல்லூரியின் பேராசிரியர் ஜியாங் குறிப்பிடுவது போல, ஈரான் போரில் அமெரிக்காவில் இழப்பீடு உலகளாவிய அரசியல்- பொருளாதார- இராணுவ ஒழுங்கில் பாரிய மாற்றமொன்றுக்கு வழிவகுக்கின்றது.

அடுத்து வரும் குறுகிய காலப்பகுதி அடுத்து வரும் தசாப்தங்களுக்கான உலக ஒழுங்கை வரையக் கூடியதாக மாறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ரி. கணோசலிங்கம்

Share.
Leave A Reply

Exit mobile version