கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நபர் ஒருவர் திடீரென வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோபுரத்திற்குக் கீழே காற்றினால் நிரப்பப்பட்ட பாதுகாப்பு மெத்தை தயார் நிலையில் வைக்கப்பட்டது.
மீட்புப் பணியின் போது, அந்த நபர் பிடித்துக்கொண்டிருந்த துணி திடீரென அறுந்து விழுந்ததில் அவர் கோபுரத்திலிருந்து கீழே விழுந்தார். எனினும், சரியாகப் பாதுகாப்பு மெத்தையில் விழுந்ததால் அவர் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தன்னை மீட்ட அதிகாரிகளிடம் “தயவுசெய்து என்னை அடிக்காதீர்கள்” எனக் கெஞ்சிய அந்த நபரை, பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். குறித்த நபர் எதற்காக இந்த ஆபத்தான போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

