அமெரிக்காவின் “பொருளாதாரச் சீற்றம்” (Operation Economic Fury) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரானின் கச்சா எண்ணெயை அதிகளவில் கொள்வனவு செய்யும் சீனாவின் இரண்டாவது பெரிய “டீபாட்” (Teapot) சுத்திகரிப்பு நிலையமான ஹெங்லி பெட்ரோகெமிக்கல் (Hengli Petrochemical – Dalian) நிறுவனத்தின் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரானிய இராணுவத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரும் இந்தச் சட்டவிரோத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த சுமார் 40 நிறுவனங்கள் மற்றும் 19 எண்ணெய் டேங்கர் கப்பல்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானிய ஆட்சியின் நிதி உயிர்நாடிகளைத் துண்டிப்பதன் மூலம் மத்திய கிழக்கில் அவர்களின் ஆதிக்கத்தையும் அணுஆயுதக் கனவையும் முடக்க அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும்” எனத் தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாக, ஈரானுடன் தொடர்புடைய 344 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கிரிப்டோகரன்சிகளையும் (முக்கியமாக USDT) அமெரிக்கா முடக்கியுள்ளது. டெதர் (Tether) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த கிரிப்டோ வாலட்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

