யாழ்ப்பாணத்து மக்களுக்கும் மலையகத் தமிழ் மக்களுக்குமான ஆன்மீகப் பிணைப்பைப் பறைசாற்றும் வகையில், சிவனொளிபாதமலைக்கான புனித யாத்திரை இன்று அதிகாலை ஆரம்பமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து, சிவபெருமானின் திருவுருவச் சிலையினைத் தாங்கிய வாகன ஊர்தியுடன் யாத்திரிகர்கள் தமது பயணத்தைத் தொடங்கினர். தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் இந்த ஆன்மீகப் பயணத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பக்தர்கள் சிவபுராணம் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடியவாறு யாழ்ப்பாண நகரை வலம் வந்து, பின்னர் மலையகம் நோக்கித் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த யாத்திரைக்கு மலையக இந்து குருமார்கள் ஒன்றியம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளது. வடபுலத்திலிருந்து நீண்ட தூரம் பயணித்துச் சிவபெருமானை தரிசிக்கும் இந்தப் பாதயாத்திரை மரபு, இந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

