கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நேற்று (27.04.2026) காலை இடம்பெற்ற அசம்பாவிதத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 வயதுடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறை அறையை விட்டு வெளியேறி இரு கைதிகள் தப்பியோட முயன்றபோது, அதனைத் தடுக்க முயன்ற சிறைக்காவலர்களுக்கும் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இரு கைதிகளும் ஒரு அதிகாரியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, பொரளை பொலிஸாரும் இக்கொலைச் சம்பவம் குறித்துத் தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறைக்காவலில் இருந்த கைதி உயிரிழந்தது தொடர்பில் மனித உரிமைகள் தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version