கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு, அவர் கணவர் இருக்கும்போதே மொட்டை அடித்து கைம்பெண் சடங்கி செய்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை அடுத்த போத்தசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக். இவருக்கும் இவர் கிராமத்திற்கு அருகில் இருக்கும் குந்துமாரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 20 வயதான தேஜஸ்ரீ என்பவரும் கெலமங்கலத்தில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த சூழலில், இவர்களின் காதலை தேஜஸ்ரீ அவர்களது வீட்டில் சொல்ல, இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜாதி மறுப்பு திருமணம்
இதனால் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேஜஶ்ரீ, வீட்டை விட்டு வெளியேறி தீபக்கை திருமணம் செய்து கொண்டு கணவரின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த தேஜஶ்ரீயின் பெற்றோர்கள், அவரது உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு தீபக் வீட்டிற்கு சென்று அங்கிருந்த தேஜஸ்ரீயை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து சூளகிரி அருகே உள்ள தென்பெண்ணையாற்றில், கணவர் தீபக் இறந்து விட்டார் என நினைத்துக் கொள் எனக்கூறி தேஜஸ்ரீக்கு மொட்டை அடித்து, வளையல்களை உடைத்து, கணவர் இருந்தால் மனைவிக்கு எப்படி சடங்கு செய்வார்களோ அப்படியே தேஜஶ்ரீக்கும் செய்துள்ளனர்.
வீட்டுச்சிறை மற்றும் சித்திரவதை
பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேஜஸ்ரீக்கு கருத்தடை மாத்திரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல்,தேஜஸ்ரீயை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து தினமும் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பெற்றோரின் பிடியிலிருந்த தேஜஸ்ரீ அதே ஆகஸ்ட் மாதம் வெளியேறி மீண்டும் காதலன் தீபக்கின் வீட்டிற்கே சென்றுள்ளார்.
இதை அறிந்த தேஜஸ்ரீயின் பெற்றோர்கள் ஓசூர் டவுன் காவல் நிலையம், எஸ்பி அலுவலகம், ஐஜி, டிஐஜி, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு என பல்வேறு இடங்களில் புகார் மனு அனுப்பி தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் வரவழைத்து விசாரித்து வந்துள்ளனர்.
பொய் புகார்
இதற்கிடையில் தேஜாஸ்ரீயை, மிரட்டியதாக ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் தேஜஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் தந்தை வெங்கடேஷ், தாய் சத்யபிரியா மற்றும் உறவினர்கள் மூன்று பேர் என ஐந்து பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அதில் இரண்டு பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் தேஜஸ்ரீ, தனது கணவர் தீபக் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் சொந்த ஊரான போத்தசந்திரத்தில் வசித்து வரும் நிலையில், கடந்த 23ஆம் தேதி தேர்தலில் வாக்கு செலுத்த போத்தசந்திரம் கிராமத்திற்கு சென்ற தேஜஶ்ரீயின் பெற்றோர் அங்கிருந்த தேஜஸ்ரீ மற்றும் தீபக் ஆகிய இருவரையும் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தேஜஸ்ரீயின் பெற்றோர் அடுத்த நாள் பத்திரிக்கையாளர்களை அழைத்து அவர்களிடம் தனது மகள் தேஜஸ்ரீயை சிலர் கடத்திச் சென்றதாகவும், அவர்களை தங்களிடம் ஒப்படைக்க பணம் கேட்டு மிரட்டதாகவும் தெரிவித்தனர்.
எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்
இது குறித்து தகவல் அறிந்த தேஜஸ்ரீ மற்றும் கணவர் தீபக் ஆகியோர் ஏப்ரல் 27 அன்று செவ்வாய்கிழமை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், கணவர் தீபக் குடும்பத்துடன் அவர்களது சொந்த ஊரிலேயே நிம்மதியாக இருந்து வருவதாகவும், தொடர்ந்து தன்னை நிம்மதி இல்லாமல் மன உளைச்சலில் இருக்கவே பெற்றோர்கள் இவ்வாறு செயல்படுவதாகவும், மேலும் தன்னை யாரும் கடத்தவில்லை, பொய்யாக வீடியோக்களை வெளியிட்டு மேலும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி என்னை வாழ விடாமல் தடுப்பதாகவும் தேஜஸ்ரீ அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

