யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாள் நடவடிக்கைகள் நேற்று (28.04.2026) நடைபெற்றன. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நீதி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் இந்த அகழ்வு தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் அவர்களின் நேரடி மேற்பார்வையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிய எலும்புக்கூடுகள் அல்லது மனித எச்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை மொத்தம் 56 நாட்களுக்கு முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவை இரண்டு வார கால அடிப்படையில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளன. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வின் முடிவில் மொத்தம் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version