சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுக்கு எதிராக இன்று (28.04.2026) கொழும்பில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தலைமையிலான குழுவினர், பெலவத்தை அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள நிதி அமைச்சின் செயலாளரின் இல்லத்திற்குச் சென்று இந்த எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் செயலாளரின் வீட்டின் அருகே கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த இனந்தெரியாத நபர்களால் அவர்கள் மீது திடீரென முட்டை மற்றும் சாணம் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த எதிர்பாராத செயலால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு முறுகல் நிலை உருவானது. இதனால் அக்குரேகொட பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியதுடன், அரச நிதி கையாடல் தொடர்பாகச் செயலாளரின் பதவி விலகலை வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர்.

