வாழைச்சேனை பகுதியில் வீடு புகுந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை, விசாரணை என்ற பெயரில் திருடனிடம் இருந்து பெற்றுத் தன்வசம் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று புதன்கிழமை (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றில், கடந்த 21-ஆம் திகதி 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டன.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நாவலடி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட திருடனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி, தற்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், திருடனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

தான் இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகக் கூறி, திருடனிடம் இருந்த நகைகளையும் பணத்தையும் அவர் வாங்கிக் கொண்டுள்ளார்.

பின்னர், அந்தத் திருட்டுப் பொருட்களைத் தனது நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளார் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலிருந்து விசேட கடமை நிமித்தம் பாசிக்குடா சுற்றுலா மையத்தில் பணியாற்றி வந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை, உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் அவரது நண்பரிடம் இருந்த நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை வாழைச்சேனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version