ilakkiyainfo

ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த்: தயாராகும் தமிழக நாடாளுமன்றத் தேர்தல் களம் (சிறப்பு கட்டுரை)

நாடாளுமன்றத் தேர்தல் களம் தமிழகத்தில் அனல் பறக்கிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனைவருக்கும் முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டார். இவர் காஞ்சிபுரத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கினா். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அடுத்துப் பிரசாரத்தைத் தொடங்கினார்.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தன் பிரசாரத்தை ஆரம்பித்தார். பாரதீய ஜனதாக் கூட்டணியில் அங்கம் பெற்றிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சென்னையிலிருந்து வழக்கமாக தன் பிரசாரத்தை மேற்கொண்டார்.

ஆனால்  தி.மு.க.வின் பிரசார ஹீரோவும், மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்னும்  பிரசாரத்தைத் தொடங்கவில்லை. உடல்நிலை காரணமாக அவர் ஏதாவது ஒரு வழியில் பிரசாரத்தைத் தொடங்குவேன் என்று கூறியிருந்தாலும், தி.மு.க.வின் தேர்தல் பிரசாரம் அவர் களத்திற்கு வரும் போது மேலும் களை கட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதைவைப் பொறுத்தவரை “இராணுவத்தை பலப்படுத்துவேன்”, “2-ஜி அலைக்கற்றை ஊழலில் தண்டனை பெற்றுக் கொடுப்பேன்“, “தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த காங்கிரஸ்  மற்றும் தி.மு.க.வை தூக்கியெறியுங்கள்” என்பதுதான் ஹைலைட்டாக இருக்கிறது.

News-Paper_85900080205அந்தந்தத் தொகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சியில் செய்த விஷயங்களை  மட்டும் பட்டியலிட்டு  விட்டு, பொதுவாக  காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை அட்டாக் பண்ணுவதுதான் அவரது தேர்தல் பிரசார பாணியாக இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்தே தி.மு.க. விலகி விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.

இரு கட்சிகள் மீதும் தமிழக மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள் என்று எண்ணும் அவர், தன் பிரசாரத்தை அதன் திசையிலேயே கொண்டு செல்கிறார். இப்போது புதிதாக ஒரேயொரு விஷயத்தைச் சேர்த்துள்ளார். அது “உங்கள் வாக்குகள் மிக முக்கியமானது. அது வேறு யாருக்கும் போட்டால் வீணாகத்தான் போகும். எனவே அ.தி.மு.க.வுக்கே வாக்களியுங்கள். அது பலனாகவும் இருக்கும்” என்ற ரீதியில் பேசி வருகிறார். இது நரேந்திரமோடியை முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் கூட்டணி  மீது அவருக்குள்ள  அச்சத்தை வெளிக்காட்டுகிறது.

பா.ஜ.க.வின் தலைமையிலான அணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே  “தி.மு.க. எதிர்ப்பு” வாக்குகளைப் பெறும் கட்சிகள். அந்த வாக்குகள் அ.தி.மு.க.விற்கு கிடைக்காமல் போய் விட்டால், தேர்தல் முடிவுகள் பிரச்சினையாகி விடக் கூடாது என்பதற்காக அப்படியொரு புதிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.

குறிப்பாக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இப்படி பிரசாரத்தை மாற்றினார். அதை மற்ற தொகுதிகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர் என்ற போர்வையில் தனக்கு வாக்களிப்பவர்கள் யாரும் பா.ஜ.க. தலைமையிலான அணிக்கு வாக்களித்து விடக்கூடாது என்பதே இதன் சூட்சமம்.

தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினைப் பொறுத்தமட்டில், தி.மு.க. அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செய்த சாதனையை விளக்குகிறார். தி.மு.க. அமல்படுத்திய திட்டங்களை நிறுத்தி வைத்த அ.தி.மு.க. அரசை சாடுகிறார். ஜெயலலிதாவிற்கு வாக்களிப்பது மத்தியில் நிலையான ஆட்சிக்கு வித்திடாது என்று தன் பிரசாரத்தில் பேசி வருகிறார்.

அதையெல்லாம்  விட முக்கியமாக சிறுபான்மையின வாக்குகள், தலித் வாக்குகள் போன்றவற்றை தி.மு.க. அணிப் பக்கமாக இழுக்க முழு வீச்சில் பிரசாரம் செய்கிறார். சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. என்று அவர் பிரசாரத்தைத் தொடக்க, “இல்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசுதான்.

நான் சட்டபூர்வமாக மேற்கொண்ட பணிகளின் விளைவாகத்தான் தி.மு.க.வால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிந்தது” என்று பதில் பிரசாரம் செய்கிறார். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க.வா, அ.தி.மு.க.வா என்ற பிரசாரம் தேர்தலில் சூடுபிடித்திருக்கிறது.

இதற்கிடையில் “கரசேவைக்கு ஆள் அனுப்பியவர் (அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நடைபெற்ற பூஜை) ஜெயலலிதா என்று இன்னொரு குற்றச்சாட்டை அ.தி.மு.க. மீது தி.மு.க. சுமத்த, அதற்கு இப்போது கவுண்டர் கொடுக்கும் முதல்வர் ஜெயலலிதா, “நான் கரசேவைக்கு ஆள் அனுப்பினேன் என்று நிரூபிக்கத் தயாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு, கரசேவைக்கு ஆள் அனுப்பியது எல்லாம் தேர்தல் களத்தில் மீண்டும் தலை தூக்கியிருப்பதற்கு காரணம் எதிரணியில் நிற்கும் பா.ஜ.க. அணிதான். சிறுபான்மையினர் வாக்குகளை பறி கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க. பி.ஜே.பி.யுடன் நெருங்கிச் செல்லாமல் இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவும் நரேந்திரமோடி பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார். குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும்  தமிழக்ததிற்கு பிரசாரம் வரும் நேரங்களில் கூட முதல்வர் ஜெயலலிதாவை தாக்காமல் பேசி விட்டுச் செல்கிறார்.

இதை தி.மு.க. டார்கெட் பண்ணுகிறது. “நீங்கள் கரசேவைக்கு ஆள் அனுப்பினீர்கள்”, “பா.ஜ.க.வை அட்டாக் பண்ணி பேசுவதில்லை”, “ஆகவே உங்களுக்கும், பா.ஜ.க.விற்கும் ரகசிய கூட்டணி” என்று தி.மு.க. அ.தி.மு.க. மீதான தாக்குதலை எடுத்து வைக்கிறது.

இரு திராவிடக் கட்சிகளுக்குள்ளும் போட்டி இப்படியிருக்கையில், பா.ஜ.க. தலைமையிலான அணியின் சார்பில் முதலில் தேர்தல் பிரசாரக் களத்திற்கு சென்றிருப்பவர் விஜயகாந்த். தே.மு.தி.க.வின் தலைவரான இவர் தொகுதி பங்கீடு முழுமையாக வருவதற்கு முன்பே ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து விட்டு வேட்பாளர்களை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி வாக்கு கேட்க புறப்பட்டு விட்டார்.

அவரைப் பொறுத்தமட்டில் தன் பிரசாரத்தில் அ.தி.மு.க.வைத்தான் கடுமையாக அட்டாக் பண்ணுகிறார். “இருண்ட ஆட்சியை அகற்றுவோம்” என்று கூறி விட்டு வந்த அ.தி.மு.க. “வெளிச்சமான ஆட்சியைக் கொடுத்து” இருக்கிறதா என்ற ரீதியில் பேசி வருகிறார்.

இவரது அ.தி.மு.க. அட்டாக் போகப் போக பா.ஜ.க.விற்கே கூட தலைவலியாக மாறலாம். ஏனென்றால் பா.ஜ.க.வின் தலைவர்களே அ.தி.மு.க. பற்றி பேசாமல் இருக்கும் போது, விஜயகாந்த் மட்டும் தன் தாக்குதலை தொடுப்பது அந்த அணிக்கு தலைவலியாக மாறி விடும் சூழ்நிலை இருக்கிறது.

இதே அணியில் உள்ள வைகோ இனிமேல்தான் பிரசாரத்தைத் தொடக்க இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சிக்கும், பா.ஜ.க.விற்கும் தொகுதிப் பங்கீட்டில் திடீர் சிக்கல் முளைத்திருக்கிறது. அதனால், பா.ம.க. இதற்கு மேலும் இக்கூட்டணியில் பங்கேற்று விஜயகாந்த் போன்றவர்களுடன் இணங்கி தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.

“விஜயகாந்த், வைகோ, ராமதாஸ்” ஆகிய மூவருமே இந்தக் கூட்டணியைப் பொறுத்தமட்டில் “பொருந்தாத பொருத்தங்கள்” என்ற ரீதியில்தான் இருக்கிறது. இவர்களை பா.ஜ.க. அரவணைத்துக் கொண்டு சென்று தேர்தல் களத்தை சந்திப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் என்றே தோன்றுகிறது.

இதற்கிடையில், எல்லா விதத்திலும் சம்மதித்த பா.ம.க., குறிப்பாக தே.மு.தி.க.விற்கு 14 தொகுதிகளைக் கொடுத்த நிலையில் கூட 8 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு பா.ஜ.க. அணியில் நீடிக்க விரும்பிய பாட்டாளி மக்கள் கட்சி திடீரென்று இப்போது போர்க்கொடி தூக்குவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கு பா.ஜ.க.விற்குள் உள்ள “சில சக்திகளே” காரணம் என்ற கருத்தும் வைகோ போன்ற தலைவர்களுக்கு கூட இருக்கிறது என்பதும் வெளியில் கசிந்து கொண்டிருக்கும் செய்தி. பா.ஜ.க அணி அதிக வாக்குகளை பிரித்து, அதனால் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாதகம்  ஏற்பட்டு விடக்கூடாது என்று   சில பா.ஜ.க. நல விரும்பிகளே    தமிழகத்தில் கருதுகிறார்கள் என்ற கோபத்தை கடந்த சில தினங்களாக வைகோவிற்கு நெருக்கமான வட்டாரங்களே கிசுகிசுக்கின்றன. இத்தனையையும் மீறி பா.ஜ.க. தலைமையிலான அணி தமிழகத்தில் “டேக் ஆஃப்” ஆக வேண்டும்!

பா.ஜ.க. அணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தங்கள் வேட்பாளர்கள் லிஸ்டை முழுமையாக வெளியிட முடியவில்லை. அதை விட தடுமாற்றத்தில் நிற்பது தமிழக காங்கிரஸ் கட்சி. “போருக்குப் போகும் முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்ட கட்சி” போல் காங்கிரஸ் கட்சி இன்றைய நிலையில் இருக்கிறது.

அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் எல்லாம் “நாங்கள் பிரசாரத்திற்கு போகப் போகிறோம்” என்கிறார்கள். வேட்பாளர்களாக போட்டியிட முன் வரவில்லை. காங்கிரஸிற்குள் தனக்கு தொண்டர் பலம் இருக்கிறது என்று நினைக்கும் ஜி.கே.வாசன் கூட “நான் போட்டியிடப் போவதில்லை” என்று அறிவித்து விட்டார்.

ஆனால் கட்சியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களோ, “கூட்டணி இருந்தால் தேர்தலில் போட்டி. இல்லையென்றால் பிரசாரம் என்று மூத்த தலைவர்கள் கூறுவது காங்கிரஸுக்கு நல்லதல்ல” என்று கஷ்டப்படுகிறார்கள். “ஜெயிக்கும் நேரத்தில் அவர்கள் வேட்பாளர்கள்.

தோற்கும் நேரத்தில் நாங்கள் போட்டியிட வேண்டுமா” என்றும் நொந்து கொள்கிறார்கள். இந்த முறை ஒரு தேசிய கட்சிக்கு மேஜர் திராவிடக் கட்சிகள் இல்லாத அணி கிடைத்திருக்கிறது. ஆனால் காங்கிரஸுக்கு எந்த அணியும் கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் விஜயகாந்திற்கு பிரதமரிடம் அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுத்துக் கூட அக்கட்சியை காங்கிரஸ் கூட்டணிக்குக் கொண்டு வர இயலவில்லை.

களம் தமிழகத்தில் காரசாரமாக அமைந்துள்ளது. தலைவர்கள் அனைவரும் களத்திற்குச் செல்லும் போது இன்னும் சூடுபிடிக்கும். தேர்தலில் குற்றச்சாட்டுகள் பரஸ்பரம் சொல்லிக்கொள்ளப்படும் “வழக்கமான” விஷயம் என்றாலும், தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டுகளையும் சொல்லிக் கொள்ளாமல் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியலாக இருக்கிறது.

திருவாளர் வாக்களார்கள் பொறுமையாக அனைத்து பேச்சுகளையும், பிரசாரங்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்- யாருக்கு அவர்கள் வாக்கு என்ற முடிவை எடுப்பதை நோக்கி வாக்காளர்களை தயார் பண்ணிக் கொண்டிருப்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் தற்போதையை ஹைலைட்.

-எம்-காசிநாதன்-

Exit mobile version