ilakkiyainfo

ஜெனிவா தீர்மான வாசகங்களை நீர்த்துப்போகச் செய்ததா இந்தியா? -சஞ்சயன்

இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் சில பகுதிகளை நீர்த்துப்போகச் செய்வதில், இந்தியா பங்காற்றியுள்ளதா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.

இத்தகைய சந்தேகம் எழுந்ததற்குக் காரணம், தீர்மானத்தின் இறுதி வரைவில், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு தெளிவான காலஎல்லை ஒன்று வகுக்கப்பட்டிருந்ததேயாகும்.

அதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்ட காலப்பகுதியான, 2002 பெப்ரவரி தொடக்கம், 2009 மே 19 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் வகையில், மூன்றாவதும் இறுதியுமான தீர்மான வரைவு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தீர்மானத்தின் முக்கியமான பகுதியான 8ஆவது பந்தியில் இடம்பெற்றுள்ளது.

எதற்காக, இந்தக் காலவரையறை வகுக்கப்பட்டது என்று ஆராய்வது இந்த வேளையில் பொருத்தமாக இருக்கும்.

முதலாவது தீர்மான வரைவு வெளியானதுமே, அது தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றும், அமெரிக்கா தம்மை ஏமாற்றி விட்டதாகவும்  ஒரு தரப்பினர் குறைபட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், கடந்த 14ஆம் திகதி தீர்மான வரைவில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதன் பின்னர் கடைசியாக கடந்த திங்கட்கிழமை மூன்றாவதும் இறுதியுமான தீர்மான வரைவு, உறுப்பு நாடுகளிடம் கையளிக்கப்பட்டது. அதுவே மறுநாள், செவ்வாய்க்கிழமை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும் சமர்ப்பிக்கப்பட்டது.

முதலாவது தீர்மான வரைவு பல தெளிவற்ற சொற்பிரயோகங்களைக் கொண்டதாக இருந்ததால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூலம் நடத்தப்படும் விசாரணை, சர்வதேச விசாரணை தானா என்ற மயக்கம் பலரிடம் காணப்பட்டது.

மூன்றாவது வரைவு, சர்வதேச விசாரணை என்ற எந்த சொற்பதத்தினையும் கொண்டிராது போனாலும், முன்னரை விட வலுவாக்கப்பட்டுள்ளது என்றே பொதுவான கருத்து உள்ளது. விரிவான சுதந்திரமான விசாரணை என்ற சொற்பதத்தின் ஊடாக, இந்த இறுதி வரைவு இன்னும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், மூன்றாவது வரைவு, தீர்மான வாசகங்களைப் பலவீனப்படுத்தி விட்டதாகவும் சிலர் குறைபட்டுக் கொள்வதைக் காண முடிகிறது.

இறுதி வரைவில், விசாரணை தொடர்பான பகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும், வடக்கு மாகாணசபை தொடர்பாக காணப்பட்ட பகுதியில் செய்யப்பட்ட மாற்றங்களும், வடக்கில் படைவிலக்கம் தொடர்பான விவகாரத்தில் செய்யப்பட்ட மாற்றங்களும், மிகவும் முக்கியமானவை.

இவை அனைத்தும், தமிழர் தரப்பினால் கூர்ந்து அவதானிக்கப்பட்ட விடயங்கள்.

இவற்றில் முக்கியமானது, மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான, பொறிமுறை பற்றிச் சுட்டிக்காட்டும் 8ஆவது பந்தியாகும்.

இந்த பந்தியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவுக்கு சாதகமான முறையில் செய்யப்பட்டுள்ளதைக் கவனிக்கலாம்.

இந்தமுறை அமெரிக்கா மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரப்போகிறது என்று அறிவிக்க முன்னரே, சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் அவசியம் பற்றிய கருத்துகள் மேலெழுந்திருந்தன. கொமன்வெல்த் மாநாடு அதற்கான ஒரு முக்கிய களத்தை அமைத்துக் கொடுத்திருந்தது.

கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், கொமன்வெல்த் மாநாட்டுக்கான இலங்கைப் பயணத்தைப் புறக்கணித்து விட்டு, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, கொமன்வெல்த் மாநாட்டுக்கு வந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும், இன்னும் நான்கு மாதங்களுக்குள் நம்பகமான- சுதந்திரமான உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பிக்காது போனால், சர்வதேச விசாரணையை வலியுறுத்தப் போவதாக அறிவித்தார்.

இதனுடன் தான், சூடு பிடித்திருந்தது சர்வதேச விசாரணை பற்றிய கோரிக்கை.

இந்தச் சூழலில், அமெரிக்கா சர்வதேச விசாரணை பற்றிய எந்த தெளிவான கருத்தையும் முன்வைத்து நம்பிக்கையூட்டாத போதிலும், மாற்று வழிகள் குறித்து யோசிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்ததை மறுக்க முடியாது.

கிட்டத்தட்ட, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுமே, சர்வதேச போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படுவது உறுதி என்பது போன்ற தோற்றப்பாடு பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டது.

இது ஊடகங்களால் மட்டும் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை என்று கூற முடியாது. மேற்குலகமும் அவ்வாறு தான் தமது இராஜீய மொழிகளில் கருத்துகளைக் கூறியது.

இலங்கை அரசாங்கமும், உள்நாட்டில் தனக்கான அரசியல் ஆதரவை உறுதிப்படுத்த, சர்வதேச விசாரணை என்று பயம் காட்டியது.

சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட இலங்கை, முதலில், அதற்கு இந்தியாவினது ஆதரவு கிடைக்காமல் செய்வதற்கு முயற்சித்தது.

இந்தியாவினது ஆதரவை கிடைக்காமல் செய்து விட்டால், ஜெனீவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை மிகவும் சுலபமாகச் சமாளித்து விடலாம் என்பதே இலங்கையினது கருத்தாக இருந்தது. இதனால் தான், கடந்த காலங்களிலும், இந்தியாவை தன் கைக்குள் போட்டுக்கொள்ள கொழும்பு படாத பாடுபட்டது.

புதுடெல்லியும் அதுபோன்றே, இலங்கையைக் காப்பாற்றவே முதன்மையான சிரத்தை எடுத்துக் கொண்டது.

ஆனால், அரசியல் சூழலும் இராஜதந்திர நெருக்குவாரங்களும், இதற்கு முந்திய இரண்டு தீர்மானங்களின் போதும், புதுடெல்லியின் விருப்புக்கேற்பவோ, கொழும்பைக் காப்பாற்றும் வகையிலோ வாக்களிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருந்தது.

2012, 2013ஆம் ஆண்டுகளில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க வைப்பதற்கு, தமிழகம் தமது உச்சக்கட்ட அரசியல், பலத்தைப் பிரயோகிக்க வேண்டியிருந்தது.

ஆனால், இந்தமுறை அப்படியான நிலை இருக்கவில்லை.

அதாவது, புதுடெல்லியிடம் கெஞ்சவோ, தமது அரசியல் பலத்தைக் காட்டி மிரட்டவோ வேண்டிய நிலை தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

ஏனென்றால், அடுத்தமாதம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலை இந்திய மத்திய அரசுக்கு இருந்தது.

ஏற்கனவே இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகமிழைத்து விட்டதான கருத்து, தமிழகத்தில் ஊறிப் போய்விட்ட நிலையில், அங்கு தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சி தமது கட்டுப்பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவேனும், ஜெனீவா தீர்மானத்தை எதிர்க்க முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டது.

இதனால், அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று யாரும் குரல் எழுப்ப வேண்டிய தேவை ஏற்படவில்லை. இந்தியாவின் இந்த அரசியல் சூழலை இலங்கை நன்றாகவே புரிந்து கொண்டிருந்தது.

இந்தியாவினது இக்கட்டான நிலையும், அமெரிக்காவினது முடிவும், இலங்கைக்குப் பாதகமாகவே அமையும் என்பதை உணர்ந்து கொண்ட அரசாங்கம், ஆரம்பத்திலேயே இந்தக் கூட்டுக்கு வேட்டு வைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.

lalith weerathunga_CIஅமெரிக்காவில் இலங்கைக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வொசிங்டனில் றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியில் தான், முதல்முறையாக இந்தியாவைச் சிக்கலில் மாட்டும் கருத்து இலங்கையின் தரப்பில் வெளியிடப்பட்டது.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று ஏற்படுத்தப்பட்டால், அது இந்தியாவையும் பாதிக்கும் என்றும், இந்தியப்படையினர் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலப்பகுதி குறித்தும் விசாரிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

இது இந்தியாவை ஒருவகையில் மறைமுகமாக அச்சுறுத்தும் கருத்து என்பதில் சந்தேகமேயில்லை.

சர்வதேச விசாரணை என்ற மைதானத்தில் இலங்கை இறக்கி விடப்பட்டால், இந்தியாவும் அதில் ஆடுவதற்கு இறங்கித் தான் ஆக வேண்டும் என்பதே அவரது கருத்தில் சாராம்சம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவைத் தவிர்த்தோ புறந்தள்ளியோ எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது போலவே, இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உள்ள தொடர்புகளையும் மறுக்க முடியாது.

தமிழரின் ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்தது தொடக்கம், இந்தியப் படைகளை அனுப்பி வைத்தது, பின்னர் புலிகளை முற்றாக அழிப்பதற்கு தன்னாலான எல்லா உதவிகளையும் மறைமுகமாக வழங்கியது வரை -இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு ஒரு பெரும்பங்கு இருந்து வந்தது.

இவை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விசாரிக்கப் போனால், பல சம்பவங்களுக்காக – பல காரியங்களுக்காக, இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும்.

குறைந்தபட்சம், இந்தியப் படையினர் காலத்தில், கொல்லப்பட்ட, காணாமற்போன தமிழர்கள், விவகாரத்துக்கேனும், இந்தியா கைகட்டி நின்று பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தப் படுகொலைகள் குறித்து, முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தண்டிக்க, இந்திய அரசாங்கமோ, இந்திய இராணுவத் தலைமையோ ஆர்வம் காட்டவில்லை என்று, இந்திய அமைதிப்படையின் புலனாய்வுத்துறைக்குப் பொறுப்பான அதிகாரியாக இருந்த கேணல் ஹரிகரன் முன்னர் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஒரு முன்னாள் இந்தியப் படை அதிகாரிக்கே, படுகொலைகளுக்காக இந்தியா பொறுப்புக்கூற வேண்டும் என்ற கருத்து இருக்கும் போது, இதனை இலங்கை அரசாங்கம் எந்தளவுக்கு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று கூற வேண்டியதில்லை.

சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டால், அது இந்தியாவினது பொறுப்பில் நடந்த சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டிப் பார்த்தது இலங்கை.

இது இந்தியாவினது நிலையை தள்ளாடச் செய்து விடக்கூடிய ஆபத்து இருப்பதைப் புரிந்து கொண்ட அமெரிக்காவும், இந்தமுறை இந்தியாவுக்கு ஒரு பூட்டுப் போட்டு அடைக்க முடிவு செய்தது.

அதாவது, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையில், தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தில், இழுபறியான அரசியலுறவு இருக்கும் நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டு பின்னால் திரிய முடியாது என்று அமெரிக்கா கருதியது.

எனவே, இந்தியாவே, தீர்மானத்தை எதிர்க்க முடியாத புறச்சூழலை அவதானித்து, இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தாத வகையில், தீர்மான வரைவை முன்வைக்க முனைந்தது.

13ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம், வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்களை பகிர்வது குறித்த பந்திகளுடன் வெளியான முதலாவது தீர்மான வரைவே, இந்தியாவை வீழ்த்தி விட்டது. இந்தியா 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் கேட்டுக் கேட்டுக் களைத்தே போய் விட்டது.

இனி என்ன வழி என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, தான் அமெரிக்கா வந்து கைதூக்கி விட்டது.

அதைப்பற்றிக் கொண்டு எழுந்திருப்பதை விட இந்தியாவுக்கு வேறுவழியில்லை.

ஆனாலும், வரைவின் 8ஆவது பந்தி மட்டும் இந்தியாவுக்கு உறுத்தலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச விசாரணை என்ற பதம் இடம்பெறுவதை விரும்பவில்லை. அதுபோலவே, விரிவான விசாரணை என்று வரும் போது, இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலம் பற்றி விசாரிக்கும் நிலையும் ஏற்படலாம் என்றும் அதற்கு ஓர் அச்சம் இருந்தது.

இந்த 8ஆவது பந்தியை நீர்த்துப் போகச்செய்வதற்கு, இந்தியா பேச்சுக்களை நடத்தி வருவதாக, சில நாட்களுக்கு முன்னரே ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தியா இதனை வெளிப்படையாகவோ, முறைசாரா கலந்துரையாடல்களின் போதே செய்யவில்லை. இரகசியமாகவே இந்த முயற்சிகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு கூட, இந்தியா கடைசி நேரத்தில் தீர்மானத்தை நீர்த்துப் போகச்செய்ததாக இன்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தப் பின்னணியில் தான், இறுதியாகச் சமர்ப்பிக்கப்பட்ட வரைவில், நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைக் காலப்பகுதியில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியா விசாரணைப் பொறியில் இருந்து காப்பாற்றப்பட்டு விட்டது.

ஏனென்றால், இந்த விசாரணை, 2002 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாகவே இடம்பெறப் போகிறது.

இதனால், அதற்கு முந்திய, அதாவது 1980களில் இந்தியாவின் தலையீட்டினால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.

இதன் மூலம், இந்த தீர்மானத்தை நிராகரிப்பதற்கோ, எதிர்த்து வாக்களிப்பதற்கோ இந்தியாவுக்கு இருந்த கடைசி வெளியையும், அமெரிக்கா தந்திரமான முறையில் அடைத்து விட்டது.

இதனால், வேறு வழியின்றி தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்குவது இந்தியாவுக்குத் தவிர்க்க முடியாததாகியது.

இந்தியாவினது அழுத்தங்களின் பேரிலோ, இந்தியாவைக் காப்பாற்றும் நோக்கிலோ, இந்தியாவின் எதிர்ப்பை சம்பாதிக்காத வகையிலோ, தீர்மான வரைவின் 8ஆவது பந்தி திருத்தியமைக்கப்பட்டது என்பது உறுதியாகி விட்டது.

இந்தியாவை மிரட்டி தனது பக்கம் இழுக்க முயன்ற இலங்கைக்கு, ஜெனிவா தீர்மானத்தின் மூலம் மட்டுமன்றி, அமெரிக்கா தனது இராஜதந்திர நகர்வின் மூலமும், பதிலடி கொடுத்திருக்கிறது.

அதேவேளை, இந்த விசாரணையில், இந்தியாவைத் தப்பிக்கும் இடைவெளியை அமெரிக்கா ஏற்படுத்திக் கொடுத்திருந்தாலும், தாம் விடப் போவதில்லை என்று காணாமற்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்காலத்தை விரிவுபடுத்திப் பதிலடி கொடுத்துள்ளது இலங்கை.

இதுபோன்ற பதிலடிகள் இனி எல்லாப் பக்கங்களில் இருந்தும் மாறி மாறி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன

-சஞ்சயன்-

Exit mobile version