யாழ்ப்பாணத்தி;ல் நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) 34 ஆவது மாநாட்டுப் பொதுக்கூட்டம், தமிழ் மக்களின் இன்றைய அரசியல் போக்கு, அதன் எதிர்காலம் என்பன குறித்து பல்வேறு வினாக்களையும் எழுப்பியிருக்கின்றது. அத்துடன் பரந்து
பட்ட சிந்தனையையும் தூண்டியிருக்கின்றது. அந்த மாநாட்டின் மகுட வாசகமே தமிழ் மக்களுடைய அரசியல் தேவையின் அடிப்படையை வலியுறுத்தியிருப்பதைக் காண முடிகின்றது.
‘வலுவான ஐக்கியத்தை நோக்கி’ என்ற மகுட வாசகத்தைக் கொண்ட இந்த மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளும், ஜனநாயக மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நவசமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி போன்ற கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.
இதற்காக, அவர் மிக நீண்டதொரு உரையை ஆற்றியிருந்தார். கட்சியின் தலைவர் உரையாற்றியதன் பின்பே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் உரை முக்கியப்படுத்தப்பட்ட நிலையில் இடம்பெற்றிருந்தது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் அரசியல் பலமுள்ளதாக – இறுக்கமாக்க வேண்டும். முக்கியமாக அதனைப் பதிவு செய்ய வேண்டும் என்பது, ஈ.பிஆர்.எல்.எவ். கட்சியின் மாநாட்டுத் தீர்மானங்களில் மிகவும் முக்கிய தீர்மானமாகும்.
மாநாட்டின் முதலாம் நாள் நடைபெற்ற பேராளர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் இரண்டாம் நாள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டபோது,
இந்தத் தீர்மானத்திற்கு மண்டபம் நிறைந்த மக்கள், அந்த அரங்கு அதிரும் வகையில் கைதட்டி, ஆரவாரித்து வரவேற்றிருந்தனர்.
கட்சியின் தலைவர் என்ற ரீதியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது உரையில் பல்வேறு விடயங்களைத் தொட்டு, கட்சியின் நிலைப்பாட்டையும், கருத்தையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.
குறிப்பாக இந்தியா இலங்கைத் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையில் என்ன வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாவிட்டால் எழக்கூடிய நிலைமைகள் பற்றியும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலைமையை இந்தியா சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவரால் வெளியிடப்பட்டிருந்தது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவ செய்யும் விடயத்தில் இதுவரையில் இடம்பெற்றிருந்த நடவடிக்கைகள் பற்றி, ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அந்தப் பதிவு நடவடிக்கை இனியும் தாமதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியிருந்தார்.
இந்த மாநாடு ஈ.பி.ஆர்.எல்.எப். மாநாடு என்பதிலும்பார்க்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாநாடாக அமைந்திருக்க வேண்டும் என்ற ஆவலும் இங்கு வெளிப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் அரசியல் சக்தியானது வலுவான ஐக்கியமுள்ளதாக அமைந்திருக்க வேண்டும் என்ற காலத்தின் தேவையை மிகவும் ஆழமாக இந்த மாநாடு பதிவு செய்திருக்கின்றது.
உடனடியாகவும், பயனுள்ளதாகவும் செயற்படும் வகையில் இந்தத் தேவையை தமிழ் அரசியல் தலைவர்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை.
சம்பந்தனின் கருத்து
இந்த கூட்டத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். அதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்ததை அவர் நினைவுபடுத்தினார். அதேநேரத்தில் அவர் மற்றுமொரு விடயத்தயும் சுட்டிக்காட்டியிருந்தார்.
‘தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெவ்வேறு கட்சிகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பாக இருந்த போதிலும், எங்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கவில்லை என்று நான் கூற மாட்டேன். கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். அந்தவிதமான கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலமாக, எங்களுக்குள்ளேயே தீர்த்து, ஒற்றுமையாக நாங்கள் செயற்பட்டு வந்திருக்கின்றோம்.
அந்த ஒற்றுமை இன்னும் பலமடைய வேண்டும். முன்னேற்றமடைய வேண்டும். அது இன்னும் வலுப்பெற வேண்டும் என்பதில் சந்தேகமிருப்பதற்கு இடமில்லை.’ என்பது சம்பந்தனின் கூற்று.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் கருத்து வேற்றுமை இருக்கின்றது என்பதை அவர் இதன் மூலம் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கின்றார். அந்த வேற்றுமை நீக்கப்பட வேண்டும். கூட்டமைப்பு இன்னும் பலமடைய வேண்டும் என்பதை அவரும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
கூட்டமைப்பு இன்னும் சரியான ஒற்றுமையுடன் செயற்படவில்லை என்ற யதார்த்தம் இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் செயற்பாட்டு நிலைமைகளும் இதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கின்றன.
இருந்தபோதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதே தமிழ் மக்கள் அசையாத நம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாகத்தான் அவர்கள் தேர்தல்களில் கூட்டமைப்புக்கே பெரும்பான்மையாக வாக்களித்திருக்கின்றார்கள்.
இந்த ஜனநாயகப் பலம்தான், யுத்தத்திற்குப் பின்னரான தமிழர் அரசியல் நிலைமைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அத்தகைய பேச்சுவார்த்தைகளின் மூலமாக, பிரச்சினைகளுககு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற
அமைப்பின் மீதே தாங்கள் விசுவாசம் வைத்திருப்பதாக மக்கள் தமது ஜனநாயக ரீதியான தேர்தல் தீர்ப்புக்களில் வெளிப்படுத்தியிருப்பதன்காரணமாகத்தான் கூட்டமைப்புக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கின்றது.
இதனைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன் அதனை உணர்ந்து அந்தப் பலத்தை வளர்க்க வேண்டியதும், பலப்படுத்த வேண்டியதும் கூட்டமைப்பில் உள்ள எல்லோருடைய கடமையாகும். இதில் இருந்து தாங்கள் தவற முடியாது என்று யாழ். வீரசிங்கம் மண்டப மேடையில் முழங்கியிருக்கின்றார்.
இது ஒன்றும் புதிய விடயமல்ல. கூட்டமைப்புக்கு வாக்களித்து வருகின்ற மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது ஒரு கூட்டு அமைப்பாகத் தொடர்ந்தும் இருக்கலாகாது. அது ஒரேயொரு அமைப்பாக – கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கின்றார்கள்.
தேர்தல் காலங்களில் சென்ற இடங்களில் எல்லாம் தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இதனை வலியுறுத்தி கூறியிருக்கின்றார்கள். தேர்தல் சீசன் முடிந்தபின்னர், அவசியம் கருதி செல்கின்ற இடங்களில் எல்லாம், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டமைப்பைத்தான் எதிர்பார்க்கின்றோம்.
அதன் மீதுதான் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றோம் என்பதை தமிழ் மக்கள் தமிழ் தலைவர்களிடம் அழுத்தி உரைத்திருக்கின்றார்கள். ஆகவே, கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் சம்பந்தன் அங்கு முயன்றிருக்கின்றார்.
‘அதை நாங்கள் செய்கின்ற போது, எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து, எல்லோரும் ஒரே பாதையில் செல்லக்கூடிய ஒரு நிலைமையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே நான் கூறிய பிரகாரம், எங்கள் மத்தியில் பல்வேறுகட்சிகள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் தங்களுடைய தனித்துவத்தைப்பேணி பாதுகாக்க விரும்புகின்றார்கள்.
ஆகையால் நாங்கள் எல்லோரையும் சேர்த்தே, இந்தப் பாதையில் செல்ல வேண்டிய தேவை,கடமைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. அதே சமயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப்பலப் படுத்துவதற்காக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்னும் கூடிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, நாங்கள் எதையாவது செய்ய வேண்டியதாக இருந்தால், அதைச் செய்யாமலும் நாங்கள் இருக்க முடியாது.
ஆனபடியால், இந்த இரண்டு பாதைகளுக்கும் இடையில், நாங்கள் மிகவும் நுணுக்கமாக, மிகவும் நிதானமாக, மிகவும் பக்குவமாக எங்களுடைய பயணத்தை முன்னெடுக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
அந்தக் கடமையில் நாங்கள் தவறமாட்டோம். அந்தக் கடமையில் நாங்கள் பாரிய விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம். எங்கள் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்கலாம் என்று, நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்வது எங்களுடைய கடமை என்று நாங்கள் கருதுகின்றோம்’ என்று தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதியளித்திருக்கின்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை புதிய கோரிக்கையல்ல. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், விடுதலைப்புலிகளின் பொறுப்பில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தோள்களில் தமிழ் அரசியலைக் கொண்டு நடத்த வேண்டிய பொறுப்பு வந்து இறங்கிய சிறிது காலத்திலேயே இந்த கோரிக்கை முளைவிட்டிருந்தது.
அன்று முதல் இதுபற்றி கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் பேசப்பட்டுள்ளது. பல கூட்டங்களில் இது குறி;த்து காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கின்றது. வேற்றுமைகள் வெளிப்படும் வகையில் உச்சஸ்தாயியில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால், கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கூட்டமைப்பைப் பதிவு செய்யும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஐந்துபேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் அந்தக் குழுவின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லையென்று இந்த மாநாட்டு உரையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தனித்துவத்தைப் பேணிக்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கட்சிகள் இணைந்திருப்பதென்பது தேர்தல்களை இலக்காகக் கொண்டகூட்டாகக் கருத வேண்டியிருக்கின்றதே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் ஒன்றிணைந்த இணைப்பாகக் கருத முடியாது.
தனித்துவம் பேணப்படுவதென்பது தமது கட்சி உறுப்பினர்களை தேர்தல்களில் வெற்றிபெற வைக்கின்ற நோக்கத்தை இலக்காகக் கொண்டதாகவே இருக்கும்.
மக்களின் நலன்களை முதன்மைப்படுத்துவதாக இருந்தால் கூட்டு அமைப்பு ஒன்றிற்குள் இருந்து கொண்டு கட்சிகளின் தனித்துவத்தைப் பேண முடியாது.
கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு கட்சிகளையும், அவற்றின் நலன்களையும் பேண முயன்றால் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. அந்த முயற்சி வெறும் கண்துடைப்பான முயற்சியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே அவர்களுடைய அரசியல் தலைமையாகும். ஆனால், தேர்தல்களில் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்கு வீட்டுச் சின்னத்தைக்கொண்ட தமிழரசுக் கட்சியின் தயவும் கருணையும் வேண்டும். ஏனெனில் தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னத்தையும் கட்டமைப்பையும் கொண்ட கட்சியாக அது திகழ்கின்றது.
எனவே, தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவ கட்சிகள் தமது வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்கின்ற நடைமுறையே இருந்து வருகின்றது.
இந்த நடைமுறை காரணமாக யுத்தத்தின் பின்னரான கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் சந்தித்த தேர்தல்களில் வேட்பாளர்களைப் பங்கிடுவதில் கூட்டமைப்புக்குள் பல்வேறு பிரச்சினைகள் எழுந்திருந்தன.
கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டிருந்தன. அவைகள் களையப்பட்டு ஒற்றுமையாகத் தாங்கள் செயற்படுவதாகக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் கூறியுள்ள போதிலும், அந்த முரண்பாடுகளும், அதிருப்தியும் தொடரவே செய்கின்றன. இந்த நிலையில் மக்கள் எதிர்பார்க்கின்ற ஒரே அரசியல் தலைமையாகிய கூட்டமைப்பின் உறுதியான தலைமைத்துவத்தைப் பலமுள்ள தலைமையாகக் கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே.
அதேநேரம் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ள – தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீது வெளிப்படுத்தியுள்ள அரசியல் தலைமைத்துவத்திற்கான விசுவாசத்தை வளர்க்க வேண்டும், அதன் ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் எவ்வளவு காலத்திற்குள் சாத்தியமாகும் என்பதைச் சொல்ல முடியாது.
இன்று சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்பட்டாலும், அந்த நெருக்கடிகளை அதனால் சமாளித்து முன்னேறிச் செல்ல முடியாது என்று திருப்தியடையக் கூடிய சூழல் சர்வதேச அரங்கில் உண்மையாகவே இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அத்தகைய விசாரணைக்கு அரசு ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டாது என்பது தெளிவாகியிருக்கின்றது. இலங்கையைச் சூழவுள்ள நாடுகளில் சென்று அந்தக் குழு விசாரணை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகியிருக்கின்றது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்ற அமெரிக்காவின் பிரேரணைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்ட இந்தியா இன்று அதற்கான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து நிற்கின்றது. இதேபோன்று ஏனைய சார்க் நாடுகளும்கூட ஒத்துழைக்கத் தயாரில்லை என தெரிவித்திருக்கின்றன.
மறுபக்கத்தில் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தி ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. எனினும், தட்டிக்கழிக்க முடியாத நிலையில் அந்தப் பேச்சுவார்த்தைகளை அரசு முன்னெடுக்கக் கூடிய நிர்ப்பந்தத்தைத் தரும் அளவுக்கு அந்த அழுத்தங்கள் வலுவானதாக இல்லை.
அதே நேரம் உள்ளூரில் இருக்கின்ற நிலைமைகள் நாளுக்குநாள் மோசமடைந்து செல்கின்றனவே தவிர, பிரச்சினைகள் குறைவடைவதற்கோ அல்லது நிலைமைகள் சீரடைவதற்கோ உரிய அறிகுறிகளைக் காண முடியவில்லை.
யுத்தச் சூழல் காரணமாகப் பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணிகளை அபகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகள் இந்த நாட்டின் சாதாரண சட்டதிட்டங்களை அப்பட்டமாக மீறிய வகையில் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன.
காணி அபகரிப்புக்கு எதிராக மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் ஒவ்வொரு நாளும்பல இடங்களில் வீதியில் இறங்கி போராடவேண்டியதாக இருக்கின்றது.
பெண்கள், சிறுமிகளுக்கு இன்று பாதுகாப்பு இல்லை. புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டிருப்பவர்களும், இராணுவத்தின் பொறுப்பில் பண்ணைத்தொழிலில் தொழில்வாய்ப்பு பெற்றிருப்பவர்களும், அரசுக்கு விரோதமாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.
அன்றாட வாழ்க்கையையே கொண்டு நடத்த முடியாமல் குடிநீர்ப்பற்றாக்குறை, வரட்சி காரணமாக விவசாயத்தின் ஊடான வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த முடியாமை, தொழிலின்மை என்று அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் இன்று முகம் கொடுத்திருக்கின்றார்கள். அரசும், அரச ஆதரவு அரச அதிகாரிகள், இராணுவத்தினர் என பலதரப்பினரிடமிருந்தும் மக்கள் இன்று பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் அவர்களைச் சரியான அரசியல் வழியில் நடத்திச் செல்வதற்கு, அவர்களின் நம்பிக்கைக்குரிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இறுக்கமான முறையில் ஒரு நேர்வழியில் உறுதியாகச் செயற்பட வேண்டியிருக்கின்றது.
ரயில் பாதையின் தண்டவாளங்களாகத் தெரிகின்ற கட்சிகளின் தனித்துவம் பேணுதலும், கூட்டமைப்பைப் பலப்படுத்துதலும் சமாந்தரமாக இருக்கும் வரையிலேயே நடுவில் பயணம் செய்யக் கூடியதாக இருக்கும்.
அவ்வாறு அவைகள் நீண்டகாலத்திற்கு சமாந்தரமாகவே இருக்குமா என்பது சந்தேகமே. எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு தண்டவாளம் சமாந்தரத்தைப் பிய்த்துக் கொண்டு பக்கவாட்டில் செல்லலாம். அப்போது நிலைமை என்னவாகும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வலுவான ஐக்கியத்தைப் பேணுவதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உரிய சரியான பாதையில் பயணத்தைத் திருப்ப வேண்டிய காலச் சூழல் இப்போது ஏற்பட்டிருப்பதா.கவே தெரிகின்றது. எனவே பொறுப்புணர்ந்து சரியான வழிமுறையைத் தேர்வு செய்து அந்த வழியில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களை வழிநடத்த முன்வர வேண்டும்.
கூட்டமைப்பு இதனைச் செய்யுமா?