தனது அபிமான நடிகரின் காலில் முள்ளுக் குத்தியதற்கும் தீக்குளிக்கும் உணா்ச்சி மிக்க தமிழக தமிழா்கள் இருக்கும் வரைக்கும்
தனது சினிமாக் கனவுக் கன்னியைக் கடவுளாக நினைத்துக் கோவில் கட்டும் தமிழா்கள் இருக்கும் வரைக்கும்
அயல் மாநிலத்தில் இருந்து தண்ணீா் கொண்டு வர முடியாமல் அயல் நாட்டைப் பற்றிக் கவலை கொண்டு நீலிக் கண்ணீா் வடிக்கும் தமிழக அரசியல்வாதிகள் இருக்கும் வரைக்கும்
பிரபாகரன் உயிருடன் இருக்கிறான் எனத் தெரிவித்து இலங்கையில் இருந்து புலம்பெயா்ந்து சென்றவா்களின் பணத்தில் அரசியல் செய்வதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக அப்பாவிகள் இருக்கும் வரைக்கும்
சினிமாவில் கூத்தாடி பலருடன் படுத்தெழுந்த நடிகைகள், நடிகா்களை அரசியல் தலைவர்களாக ஆக்கும் தமிழக ரசிகா்கள் இருக்கும் வரைக்கும்
முள்ளிவாய்க்கால் யுத்தத்தை முடிக்கச் சொல்லி மூன்று மணிநேரம் உண்ணா நோன்பிருந்து சாதனை படைத்த தமிழகத் தலைவா் இருக்கும் வரைக்கும்
பிரபாகரனுடன் எடுத்த ஒரே ஒரு போட்டோவை வைத்தே அரசியல் செய்து கொணடிருப்பவா்களை ஆதரிப்பவா்கள் இருக்கும் வரைக்கும்
தனது பிள்ளைக்குப் பால் இல்லாவிட்டாலும் சினிமாக் கதாநாயகனி்ன கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் தமிழக ரசிகன் இருக்கும் வரைக்கும்
ஐந்நுாறு போ் பார்க்காத இலங்கை அரசின் இணையத்தளத்தில் வந்த செய்தியை வைத்து ஆா்ப்பரித்து அந்த இணையத்தளத்தை லட்சக்கணக்கானவா்கள் பார்வையிட வைத்த தமிழக உணா்வாளா்கள் இருக்கும் வரைக்கும்
அந்த இணையத்தளச் செய்தியால் அம்மாவுக்கு அவமானம் என்று கருதி நித்திரைக் குளிசை போட்டதாக கடிதம் எழுதிவைத்து தற்கொலைக்கு முயன்ற நீ இருக்கும் வரைக்கும்
இந்தத் தற்கொலை முயற்சியை செய்தியாக்கி தலையங்கமாகப் போட்ட ஊடகங்கள் இருக்கும் வரைக்கும்
இலங்கைத் தமிழா்களுக்கோ அல்லது தமிழகத் தமிழா்களுக்கோ அல்லது உலகத் தமிழா்களுக்கோ ஒருபோதும் விடிவு வரமாட்டாது……