இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் முறைப்படி ஆரம்பமாகி விட்டன.
ஆகஸ்ட் முதலாம் திகதியிட்டு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத் தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.நா. விசாரணைக் குழுவின், விசாரணை முறை மற்றும் அதற்கு சாட்சியங்களை அளிக்கும் முறை குறித்து விபரிக்கும் வகையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த எழுத்து மூலமான முறைப்பாடுகளை மின்னஞ்சலில் அல்லது, அஞ்சலில் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், பல சூட்சுமங்கள் மறைந்துள்ளன.
அதில் முக்கியமானது, இந்த விசாரணைகள் இறுதிப் போரை மட்டும் மையப்படுத்தியதாக அமையவில்லை, கிட்டத்தட்ட பத்தாண்டுகாலச் சம்பவங்கள் குறித்து ஆராயப் போகிறது என்பது முக்கியமான ஒரு விடயம்.
முன்னதாக, போரின் முழுக் காலகட்டத்திலும் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளே மேற்குலகினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த மார்ச் மாதக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில், முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவில், போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கவே வலியுறுத்தப்பட்டது.
அது, 1980களின் தொடக்கத்தில் இருந்து நடந்த மீறல்களை விசாரிக்க வலியுறுத்தியது.
இலங்கை அரசாங்கமும் கூட, போரின் இறுதிநாட்களில் நடந்த சம்பவங்களை மட்டும் எதற்கு விசாரிக்க வேண்டும், முழுப் போர் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றே கூறியது.
ஆனால், அத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது அரசாங்கம். அதுமட்டுமன்றி, போரின் முழுக்காலகட்டத்திலும் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, இந்தியாவின் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின.
ஏனென்றால், இலங்கையில் நடந்த மூன்று தசாப்தப் போரில் இந்தியாவும் சம்பந்தப்பட்டிருந்தது. 1980களின் தொடக்கத்தில் இந்தியாவின் மறைமுகமான தலையீடுகள் இருந்தன.
1980களின் இறுதியில் 1987 தொடக்கம், 1990 வரையான காலப்பகுதியில். நேரடியாகப் போரில் தொடர்புபட்டிருந்தது இந்தியா. இந்தக் காலகட்டத்தில், இந்தியப் படையினர் இலங்கையில் அமைதி காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் விடுதலைப் புலிகளுடன், போரை நடத்தியிருந்தனர். அந்தக் காலகட்டத்திலும், ஏராளமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.
எனவே, சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அதில் இந்தியாவும் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால், ஜெனீவாவில் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடும்போது இந்தியாவினது ஆதரவை இழக்க நேரிடலாம் என்பதாலேயே, விசாரணைக்கான கால எல்லையை வரையறுத்து இறுதித் தீர்மான வரைவைத் தயாரித்தது அமெரிக்கா.
அதாவது, நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியை உள்ளடக்கியதாக, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விரிவான விசாரணையை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு தீர்மானத்தில் கேட்கப்பட்டிருந்தது.
இதன்படி, பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட 2002 பெப்ரவரி 22ஆம் திகதி தொடக்கம், போர் முடிவுக்கு வந்த 2009 மே 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவே நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறு காலவரையறையை வகுத்த போதும், ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை.
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்ததுடன், ஐ.நா. விசாரணை கோரும், தீர் மானத்தின் 10ஆவது பந்தி நீக்கப்பட வேண்டும் என்பதை ஆதரித்தும் வாக்களித்திருந்தது. இந்தநிலையில், ஐ.நா. தீர் மானத்துக்கு அமைய, அமைக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழு, 2002ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்தே விசாரணையை மேற் கொள்ளும் என்றே முதலில் நம்பப்பட் டது.
அதாவது ஏழு ஆண்டுகளுக்குள் அந்த விசாரணை சுருக்கப்படும் போது, போருக்குப் பிந்திய பல மீறல்கள் கண்டு கொள்ளப்படாமல் போகும் வாய்ப்புகள் இருப்பதை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் உணர்ந்து கொண்டது.
குறிப்பாக, போரின் முடி வில் சரணடைந்து, கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களின் விவகாரம், போர் முடிவுக்கு வந்த பின்னரே தீவிரமடைந்தது.
அது இந்த விசாரணையின் முக்கியமான பகுதியாகும்.
அதனைக் கவனத்தில் கொண்டே, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்த காலப்பகுதியை உள்ளடக்கி – 2011 நவம்பர் 15ஆம் திகதி வரை விசாரணை இலக்கை நிர்ணயித்துள்ளது.
இது அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைத் தரத்தக்கதொரு விடயம் தான்.
அதுமட்டுமன்றி முறைப்பாடுகளுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல் சம்பவங்கள், குறித்த காலத்துக்கு முன்னரோ, பின்னரே இடம்பெற்றிருந்தாலும் கூட, அவை குறித்தும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
இது, அண்மைய. மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவுகள் விசாரணைகள் பற்றிய விடயங்களும், அறிக்கையில் உள்ளடக்கப்படும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இலங்கை மீதான சர்வதேச விசாரணைகளின் பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை மேலோட்டமாகப் பார்க்கப் போனால், இந்தளவுக்கு வலிமையானதொரு விசாரணைக்கு வாய்ப்பிருக்கிறதா என்றே எண்ணத் தோன்றும்.
ஆரம்பத்தில், இந்த தீர்மான வரைவு முன்வைக்கப்பட்ட போது, இதனை ஒரு சர்வதேச விசாரணையல்ல என்றும், இது தமிழர்களின் எதிர்பார்ப்பின் மீது மண் அள்ளிப் போட்டு விட்டதாகவும், அவசரப்பட்டு பலர் அறிக்கைகளை வெளியிட்டதை மறக்க முடியாது.
ஆனால், சர்வதேச சட்டங்களுக்குள் மறைந்திருக்கும், பல சூட்சுமங்களையும், அவற்றைப் பயன்படுத்தி காத்திரமானதொரு விசாரணையை முன்னெடுக்கலாம் என்பதையும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் தனது நடவடிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தி வருகிறது.
அதேவேளை, தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அது ஈடேற்றும் என்று மிகையான நம்பிக்கை கொள்ள முடியாது.
தனது வரையறைக்குள் நின்று கொண்டு, இந்த விசாரணைகளை உச்சப் பயன்பாடுடையதாக மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் முனைகிறது என்பதை மட்டும் உணர முடிகிறது.
இது இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான எரிச்சலையும், சீற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அதனால் தான், இந்த விசாரணைகளுக்குப் போட்டியாக, தானும் ஒரு உள்ளக விசாரணையை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.
எவ்வாறாயினும், சர்வதேச விசாரணைகளின் முக்கியத்துவத்தையும், அதன் விளைவையும் அரசாங்கத்தினால் உதறித் தள்ள முடியாது.
முன்னர், ஐ.நா. தீர்மானம் உள்நாட்டு விசாரணையைக் கோரிய போதெல்லாம், அதனை நிராகரித்திருந்தது அரசாங்கம்.
கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அரசாங்கம் நிராகரித்திருந்தது.
ஆனால் இப்போது, அதில் கூறப்பட்டுள்ள உள்நாட்டு விசாரணையை தாம் நிராகரிக்கவில்லை என்கிறது.
இப்படி அரசாங்கம் பல்வேறு குத்துக்கரணங்களை அடித்துக் கொண்டிருக்க, ஐ.நாவின் விசாரணைகள் ஜெனீவாவில் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
ஆனால் இந்த விசாரணையில் சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதாக ஐ.நா. கூறியுள்ள போதிலும், அதனை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசுக்கும் சமஅளவு என்பதைவிட கூடியளவு பங்கும் பொறுப்பும் இருக்கிறது என்றே கூறலாம்.
அண்மைய சில சம்பவங்கள், அரசாங்கம் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்கிறது.
ஐ.நா. விசாரணை மீதுள்ள தனது வெறுப்பை சாட்சிகளின் மீது திருப்பி விட அரசாங்கம் முனைந்தால், அதன் விளைவுகளும் மோசமானதாகவே அமையும்.
சுபத்ரா