ஆயுதமுனையில் மகனை பணயமாக வைத் துக்கொண்டு தாயை அழைத்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தங்க நகைகளையும் கடைக்குள் இருந்த பொருட்களையும் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
கிளிநொச்சி திருமுறிகண்டியிலுள்ள சேரமான் களஞ்சியம் என்னும் கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று நள்ளிரவு கடையின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் கடைக்குள் உறங்கிக்கொண்டிருந்த மகனை கத்தியைக்காட்டி அச்சுறுத்தி குறித்த கடைக்கு அருகிலுள்ள வீட்டிலிருந்த தாயை அழைத்துள்ளனர்.
நள்ளிரவு நேரம் கடையில் படுத்திருந்த மகன் அழைக்கும் குரல் கேட்டு கடைக்கு சென்ற தாயிடம் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப்போவதாக கொள்ளையர்கள் பயமுறுத்தியுள்ளனர்.
மேலும் வீட்டில் வைத்திருக்கின்ற நகைகளை எடுத்துவருமாறும் அச்சுறுத்தியுள்ளனர்.
குறித்த தாயார் தங்களிடம் நகைகள் இல்லையென தெரிவித்ததைத் தொடர்ந்து வீட்டிற்கு தாயையும் மகனையும் கத்தி முனையில் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள் அவ்வீட்டில் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். இதன்போது சுமார் நாலரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலிகள் இரண்டு மற்றும் காப்பு ஆகிய தங்க நகைகளை கொள்ளை
யர்கள் எடுத்துள்ளனர். அத்துடன் மீண்டும் கடைக்குச் சென்ற கொள்ளையர்கள் கடையிலிருந்த கையடக்கத்தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள், சிகரெட், பிஸ்கட்டுக்கள் போன்ற சுமார் இரண்டரை இலட்சம்ரூபா பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொன்னம்பலம் கெங்காதரன் என்பவர் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.