தனது கணவரை கொன்றவரது குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்குடன் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று அடியாட்களைக் கொண்டு கொலை செய்த சம்பவம் என்ற திடுக்கிடும்  தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மந்துவில் பகுதியில் உள்ள நபர் ஒருவர் கல்லுண்டாய் வெளியில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த யூலை 12 ஆம் திகதி மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியை சேர்ந்த நாகராசா பார்த்தீபன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் அசிட் வீசியும், வெட்டியும் , சித்திரவதை செய்தும் கொலை செய்யப்பட்டு கல்லுண்டாய் வெளியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த மானிப்பாய் பொலிஸார் மந்துவில் பகுதியை சேர்ந்த தாய், மகன், உட்பட மானிப்பாயை சேர்ந்த மேலும் ஒருவர் உட்பட மூவரைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்து விசாரித்துவந்தனர்.

2010 ஆம் ஆண்டு இறந்தவரின் சகோதரனுக்கும் அயலில் உள்ள ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் உயிரிழந்தார். அதனையடுத்து குறித்த குடும்பத்தை பழிவாங்கும் நோக்குடன் பார்த்தீபன், அடியாட்கள் மூலம் கொலை செய்ய திட்டம் வகுக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டார்.

இறந்தவரான பார்த்தீபன் சாவகச்சேரியில் மின்னிணைப்பு , ஒட்டுவேலை கடை ஒன்றினை வைத்துள்ளார். சம்பவ தினத்தன்று மட்டுவில் பகுதியில் வீடு ஒன்றில் மின்னிணைப்பு வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அன்றிரவு 11 மணிக்கு வீட்டுக்காரர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். பின்னர் அவருடன் எந்தவித தொடர்பையும் மேற்கொள்ளவில்லை.

எனினும் வேலை ஒன்றுக்கு வருமாறு அடியாட்களே தொலைபேசியில் அழைத்துள்ளனர். அவ்வாறு சென்றவரை அழைத்துச் சென்று சித்திரவதைகள் செய்து கொலை செய்துள்ளனர். மறுநாள் காக்கை தீவை அண்மித்த பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில் பார்த்தீபனின் உடல் மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் இருந்து பியர் ரின், மிக்ஸர் பை , மோட்டார் சைக்கிள் ஆகியனவும் மீட்கப்பட்டது. சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் உண்மையினை ஒத்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆணைக்கோட்டை பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version