‘சரசர… சரசர… என ஏதோ சத்தம் கேட்டது. அறையில் குளிரூட்டியும் உச்ச நிலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அந்த ‘சர…சர…’ சத்தத்தை தெளிவாக கேட்க முடிந்தது. வெளியில் மழை பெய்கிறதோ என எண்ணி நான் குளிரூட்டியின் செயற்பாட்டு வேகத்தை குறைத்து விட்டு கட்டிலில் மறுபுறம் புரண்டு படுக்க முற்பட்டேன்.
அப்போது மெதுவாக திறக்கப்பட்ட எனது அறை கதவின் ஊடாக ‘டோர்ச்’ ஒன்றினால் ஒளிபாய்ச்சப்பட்டது. யாரோ ஒருவன் எமது அறையின் வெளிப்பக்கமாக இருந்து ஒளிபாய்ச்சுவதை மிகத் தெளிவாக அவதானிக்க முடிந்தது. உடனே நான் கூச்சலிட ஆரம்பித்தேன். திருடன்… திருடன்… என நான் போட்ட கூச்சலில் அருகில் படுத்திருந்த கணவரும் பிள்ளையும் திடுக்கிட்டு எழ கொள்ளைக்காக வந்திருந்தவன் ஜன்னல் கதவை திறந்துகொண்டு மின்னலாய் மறைந்தான்’.
வெள்ளவத்தை, பீற்றர்சன் ஒழுங்கையில் 70/18ஆம் இலக்க தொடர்மாடி குடியிருப்பில் கடந்த ஞாயிறு நள்ளிரவு வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளை தொடர்பில் மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கேசரியிடம் அதிர்ச்சியுடனும், கண்ணீருடனும் பகிர்ந்து கொண்ட விடயங்களே அவை.
மாலா இலங்கையில் பிறந்த போதும் நோர்வேயிலேயே வசித்து வருபவர், சதீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை திருமணம் செய்துள்ள மாலாவுக்கு செல்லமாக ஒரு பெண் பிள்ளையும் உண்டு.
நோர்வேயில் வசித்து வந்த இந்த தம்பதிகள், இலங்கைக்கு அண்மையில் வந்திருந்தனர். அதாவது எதிர்வரும் 20ஆம் திகதி யாழில் இடம்பெறவுள்ள சதீஷின் சகோதரரின் திருமணத்திற்காகவே அவர்கள் இங்கு வந்தனர்.
இந்த திருமணத்தின் பொருட்டு மாலா – சதீஷ் தம்பதிகள் மட்டும் வரவில்லை. மொத்தமாக 13 பேர் (உறவினர்கள்) நோர்வேயிலிருந்து இங்கு வந்திருந்தனர்.
கடந்த வாரம் இங்கு வந்திருந்த இவர்களில் பலர் யாழ். சென்றிருந்தனர். எனினும், மாலாவின் பெற்றோர் வெள்ளவத்தை பீற்றர்சன் ஒழுங்கையில் உள்ள குடியிருப்புத் தொகுதியில் நான்காவது மாடியில் இடது புறம் உள்ள வீட்டிலேயே வசித்து வந்தனர்.
இதனாலோ என்னவோ நோர்வேயிலிருந்து வந்த மாலா – – சதீஷ் தம்பதியினர் வெள்ளவத்தை பீற்றர்சன் ஒழுங்கையில் உள்ள மாலாவின் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தனர்.
இந்நிலையில்தான் கடந்த சனிக்கிழமை மாலாவின் பெற்றோர் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டனர். பெற்றோர் யாழ். செல்ல வெள்ளவத்தை வீட்டில் நோர்வேயிலிருந்து வந்த அந்த தம்பதிகள் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த ஞாயிறன்று நள்ளிரவுக்குப் பின்னர் கொள்ளையனின் கைவரிசை இந்த வீட்டின் மீது காட்டப்பட்டுள்ளது.
மிகத் திட்டமிட்டு இக்கொள்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த குடியிருப்புத் தொகுதிக்கென்று காவலாளி ஒருவரும் உள்ள நிலையில், அவர் கண்ணிலும் மண் தூவி விட்டு ஏனைய எந்தவொரு வீட்டிலும் கைவைக்காமல் நான்காவது மாடியில் உள்ள இந்த வீட்டில் மட்டுமே கைவரிசையை காட்டியுள்ளமை திட்டமிட்ட செயற்பாடு என்பதை உறுதி செய்கின்றது.
இதனை விட, வீட்டின் பிரதான அறையில் தொலைக்காட்சி உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள், கொள்ளையிடப்பட்ட அறையில் சதீஷின் மடிக்கணினி, புதிய பெறுமதி வாய்ந்த கையடக்க தொலைபேசி போன்றன இருந்தபோதிலும் திருடன் / கொள்ளையன் அதில் கைவைத்துக்கூட பார்க்கவில்லை. மாற்றமாக குரோனர்களாக (நோர்வே பண நோட்டு) பண நோட்டுக்களையும் திருமணத்தின் பொருட்டு செய்யப்பட்டிருந்த மாலா, அவரது அம்மாவுக்கு சொந்தமான தங்க நகைகள் ஆகியன மட்டுமே கொள்ளையிடப்பட்டிருந்தன.
எனவே நகை, பணத்தை மட்டும் இலக்காக கொண்டு மிக சூட்சுமமாக இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட பணம், நகை என்பன சுமார் 70 இலட்சத்தையும் தாண்டுவதாக பறிகொடுத்தவர்கள் கவலையுடன் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் கொள்ளையிடப்பட்ட குரோனர்களின் இலங்கை மதிப்பு 34 இலட்சம் ரூபா என குறிப்பிடும் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் நகைகளின் பெறுமதியை நேற்று மாலைவரை கணிப்பிட்டிருக்கவில்லை. ஏனெனில் நகைகள் தொடர்பில் தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் பல கோணங்களில் இடம்பெறுவதாகவும், நகைகளின் பெறுமதியை காண அதனை பறிகொடுத்தவர்களிடம் விஷேட வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் சுட்டிக்காட்டுகிறார்.
விசாரணை தகவல்கள் ஒருபுறமிருக்க, இந்த கொள்ளை எப்படி இடம்பெற்றது என்பது தொடர்பிலான விடயங்களை பொலிஸாரும், குறித்த வீட்டாரும் கேசரியுடன் பகிர்ந்து கொண்டனர்.
பொலிஸாரின் தகவல்களின் பிரகாரம், குறித்த குடியிருப்பில் 30 அடி உயரத்தில் உள்ளது மாலா – – சதீஷ் தம்பதியினர் தங்கியிருந்த வீடு. குறித்த குடியிருப்பின் இடதுபுறமுள்ள வீடுகள் பெரும்பாலும் குளிரூட்டப்பட்டவை. எனவே குளிரூட்டிகளின் இயந்திரப்பகுதி வீட்டின் வெளிப்பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளது.
ஆறு மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பில் இரு குளிரூட்டி இயந்திரங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி சுமார் 4 முதல் 5 அடி மட்டுமே. இந்நிலையில் கொள்ளையன் அதனை மிகச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளான்.
அந்த குளிரூட்டி சாதனங்களின் வழியே, குடியிருப்பின் கீழ் பகுதியில் இருந்து தாவி வந்துள்ள கொள்ளையன், நான்காம் மாடியை அடைந்து குறித்த வீட்டின் பின்பக்க ‘பெல்கனி பகுதியை அடைந்துள்ளான்.
அந்த பெல்கனிக்குள் நுழைய அந்த கொள்ளையனுக்கு எவ்வித தடைகளும் இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பொலிஸார் பாதுகாப்பு வேலிகளோ கம்பிகளோ அற்ற அந்த ‘பெல்கனிக்குள்’ திருடன்/கொள்ளையன் மிக இலகுவாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து ‘பெல்கனி’யிலிருந்து நோட்டமிட்டுள்ள அந்த திருடனின் கண்களுக்குள் இலேசாக திறந்திருந்த குளியலறையின் சிறிய ஜன்னல் தென்பட்டிருக்க வேண்டும். குறித்த ஜன்னலை நன்றாக திறந்து அதனூடாகவே அவன் வீட்டினுள் உள் நுழைந்துள்ளான்.
அந்த ஜன்னல் சிறியதாக இருந்ததால் தனது உடம்பில் கீறல்கள் விழாதிருப்பதற்கான உத்திகளையும் அந்த திருடன் கையாண்டுள்ளான். அதாவது ‘பெல்கனி’ யில் உலரவிடப்பட்டிருந்த துவாயை அழகாக மடித்து ஜன்னல் கட்டின் விளிம்பில் வைத்து அதன் பின்னரேயே உள் நுழைந்துள்ளான்.
குளியலறையூடாக உள்நுழைந்துள்ள திருடன் வீட்டின் பல பகுதிகளிலும் திரிந்து அலைந்து கொள்ளையிடவில்லை. அவன் நேராக குளியலறையிலிருந்து வலப்பக்கமாக இருந்த அறைக்குள் நுழைந்துள்ளான்.
அந்த அறை மாலாவின் பெற்றோரின் அறை, அவர்கள் யாழ். சென்றிருந்த நிலையில் அங்கு எவரும் இருக்கவில்லை. எனினும் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் பணமும் அந்த அறையிலேயே வைக்கப்பட்டிருந்துள்ளன. இது கொள்ளையனுக்கு மேலும் இலகுவான விடயமாக இருந்துள்ளது.
குறித்த அலுமாரியின் பூட்டை உடைத்துள்ள திருடன் அந்த அலுமாரியில் இருந்த அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து அருகிலிருந்த கட்டிலில் கொட்டி தேடுதல் நடத்தி தனக்கு தேவையான நகைகளையும் பணத்தினையும் மட்டும் சுருட்டிக்கொண்டான்.
இந்நிலையில்தான் மீண்டும் அந்த அறையிலிருந்து வெளியில் வந்துள்ள அந்த கொள்ளையன் மாலா தம்பதி உறங்கியிருந்த அந்த அறையின் கதவை சற்று திறந்து அவர்கள் நித்திரையா என்பதை உறுதி செய்ய ‘டோச்’ கொண்டு ஒளியை பாய்ச்சி சோதித்துள்ளான். இந் நிலையிலேயே விழித்துக்கொண்ட மாலா, திருடன்… திருடன்.. என சப்தமிட அங்கிருந்து அவன் தப்பிச் சென்றுள்ளான்.
ஏனெனில் திருடனின் கையில் ஆயுதங்கள் இருந்து, அதனால் தமக்கு உயிராபத்துக்களை அவன் ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் திருடனை பிடிக்க முயற்சிக்காத போதும் ஊரை கூட்டும் அளவுக்கு கத்திக் கூச்சலிட்டுள்ளனர்.
எனினும் அந்த கொள்ளையனோ தான் திருடிய நகை, பணத்துடன் தான் திருடிய அறையின் ஜன்னல் கதவொன்றை திறந்துகொண்டு மிக இலகுவாக தான் வந்த வழியே ‘ஸ்பைடமேன்’ போல் தாவி மின்னலாய் மறைந்துள்ளான்.
வீட்டின் ஜன்னல்கள், பெல்கனி என்பன உரிய பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்காததும் பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் ஒரு அறையில் எவ்வித பாதுகாப்புமின்றி வைத்துவிட்டு அந்த அறையில் ஒருவருமே தங்காது வேறு அறையில் படுத்திருந்தது ஆச்சரியமாக இருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதனாலேயே திருடன் மிக இலகுவாக கைவரிசையை காட்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திருடன் தப்பிச் செல்லும் போது நாம் அவ்வளவு கூச்சலிட்டும் காவலாளியோ வேறு எவருமோ வரவில்லை. அவன் தப்பிச் சென்ற பின்னரே காவலாளி சிலருடன் வந்தார். எவரும் உதவிக்கு வரவில்லை. நாம் உயிர் பயத்திலேயே திருடனை பிடிக்க முயற்சிக்கவில்லை. பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதும் அவர்கள் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
வீடு முழுவதையும் அவர்கள் சோதனை செய்தனர். தடயங்களை தேடினர். பின்னர் சென்று ஒருவனை கைது செய்து கொண்டு வந்து, ‘இவனா அவன்?’ என அடையாளம் காட்ட கோரினர். இருட்டிலேயே கண்டதால் அவனை என்னால் சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை. கஷ்டப்பட்டு சிறுகச் சிறுக சேர்த்த அனைத்தையும் திருடன் சுருட்டிக்கொண்டு போய்விட்டானே..! என ஸ்தலம் சென்ற கேசரியிடம் மாலா கண்ணீர் வடிக்கின்றார்.
இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றதை அடுத்து கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட கொழும்பு தெற்கிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரணகல ஆகியோரின் மேற்பார்வையில் கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டீ சொய்ஸாவின் ஆலோசனையின் கீழ் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின் நேரடி கட்டுப்பாட்டில் அப் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் தகவத்த தலைமையில் விஷேட தனிக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் கொள்ளையிடப்பட்ட வீட்டின் அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கைவிரல் ரேகை, குடியிருப்புக்கு அப்பாலுள்ள சீ.சீ.ரி.வி. கமரா பதிவுகள், கால் தடங்கள் உள்ளிட்ட தடயங்களை கொண்டு பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர்.
முதலில் கைது செய்யப்பட்ட நபர் இக் கொள்ளையுடன் தொடர்பற்றவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், விசாரணைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மிக விரைவில் குற்றவாளியை கைது செய்ய முடியும் என்ற தரத்துக்கு விசாரணைகள் வந்துவிட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் குறிப்பிடுகின்றார்.
விசாரணை நிலைமை தொடர்பில் கலந்துரையாட கேசரி, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகத்திற்குள் நுழையும் போது, அங்கு இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, பெளத்த மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் காலையில் இந்த பிரார்த்தனைகளுடனேயே கடமையை ஆரம்பிப்பதாக அந்த செயல்களுக்கு விளக்கமளித்தவாறே சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் எம்முடன் கலந்துரையாடினார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை மிக விரைவில் கைது செய்ய முடியும் என மிக நம்பிக்கையுடன் வாய் மலர்ந்த அவர், கொள்ளையிடப்பட்ட வீட்டில் வசித்தவர்களுக்கும் அந்த தொடர்மாடியில் இருந்த ஏனையவர்களுக்கும் அன்னியோன்ய உறவு இருந்ததாக தெரியவில்லை எனவும், அதனை திருடன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் வீட்டில் உள்ள பெறுமதி வாய்ந்த பொருட்களை பாதுகாக்க எந்தவொரு பாதுகாப்பு பொறிமுறையும் இல்லை. அத்துடன் தமது குடியிருப்பு காவலாளி தொடர்பில் அவதானமோ தெளிவோ இல்லை. இவ்வாறான காரணங்களே கொள்ளையன் இலகுவாக கைவரிசையை காட்டவும் தப்பிச் செல்லவும் ஏதுவாக இருந்துள்ளது.
சம்பவத்தையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது அப்பிரதேச மக்கள் எவ்விதமான ஒத்துழைப்புக்களையோ, தகவல்களையோ எமக்கு வழங்கவில்லை. இப்படியான ஒரு இக்கட்டான சூழலிலேயே எமது குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் பிரதி பலனை இன்னும் சில நாட்களில் அறியக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன்.
வெள்ளவத்தை பகுதியை குற்ற சூன்ய பிரதேசமாக்குவதே (குற்றமற்ற பிரதேசம்) எனது இலக்கு.
இவ்வாறான கொள்ளைகள், திருட்டுக்களை தடுக்க அயலவர்களுடன் அன்னியோன்யமாக இருக்க வேண்டும். அத்துடன் தமது வீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பட்டியிலிட்ட அவர், வெள்ளவத்தையில் எங்கு என்ன நடந்தாலும் உடன் தனது தொலைபேசி இலக்கமான 077 6631382க்கு அறியத் தருமாறும், 24 மணி நேரமும் தன்னிடம் முறைப்பாடளிக்க முடியுமெனவும் குறிப்பிடுகின்றார்.
அண்மை நாட்களாக வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் கொள்ளையர்களின் இலக்காக கொள்ளப்படுவதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது. எனவே எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நாட்டுக்கு வர அச்சப்படக்கூடிய சூழலை உருவாக்கினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனவே இந்த சம்பவம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் மனதில் அச்சத்தை போக்கவல்லது. எனவே இலங்கை பாதுகாப்பானது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதனால் இந்த விடயத்தில் சட்டம் விரைவில் செயற்பட வேண்டும்.
அதுவரை அவதானத்துடனேயே இருக்கும்.
–எம்.எப்.எம்.பஸீர்–