தலாய் லாமா என்­பது இவ­ரது பெய­ரல்ல. திபெத் நாட்டின் பௌத்­தர்­களின் ஆத்­மீக தலைவர், தலாய் லாமா என்ற பதவிப் பெயரால் அழைக்­கப்­பட்டு வருகின்­றனர்.

தலாய் லாமா தேர்வு செய்­யப்­ப­டு­வ­தில்லை.  கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கி­றார்கள். திபெத்தின் முத­லா­வது தலாய்லாமா­வாக கெண்டுன் ட்ருப் (1391–-1474) பதவி வகித்தார்.

13 ஆவது தலாய் லாமா­வாக துப்டீன் கியாட்ஸோ (1876–-1933) பதவி வகித்தார். 14 ஆவது தலாய்லாமா­வாக தற்­போ­தி­ருக்கும் தலாய் லாமா­விற்கு பெற்றோர் இட்ட  பெயர் லாமோ தொண்டுப்  (தலாய் லாமா­வாக இனங்­கா­ணப்­பட்­டதன் பின் டென்ஸின் கியாட்ஸோ).

லாமோ தொண்டுப், 1935 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி டக்ஸ்டர் எனும் கிரா­மத்தில் வைக்கோல் பரப்­பப்­பட்ட அழுக்­கான தரையில் சோக்யாங் செரின்  சோனம்  சோமோ எனும்  தம்­ப­தி­யி­ன­ருக்கு 16 குழந்­தை­களில் ஒரு­வ­ராக பிறந்தார்.

ஏழு குழந்­தைகள் மட்­டுமே உயிர் பிழைத்­தன. தாயார் குழந்­தை­களைப் பெற்­றெ­டுத்த போது செவி­லி­யர்கள் யாரும் உட­னில்லை. தொப்புள் கொடியைக் கூட தானே அறுத்­தெ­றிய வேண்­டிய நிலை.

பிர­சவம் முடிந்து சில தினங்­களில் வீட்டு வேலை­க­ளையும் கவ­னிக்கத் தொடங்­கி­விட்டார். அந்­த­ள­வுக்கு அசாத்­தி­ய­மான மன­வு­று­தியும் திட­மான மன­நி­லையும் கொண்­டவர்.

தலாய் லாமாக்கள் புத்த பெரு­மானின் அவ­தா­ரங்கள் என்றே திபெத் மக்கள் நம்­பு­கின்­றனர். . ஒரு தலாய் லாமா இறந்­ததும் அவ­ரது ஆத்மா புதி­தாக பிறந்த குழந்­தை­யொன்றின் உட­லினுள் புகுந்­து­கொள்­வ­தாக அவர்கள் நம்­பு­கின்­றனர்.

பல்­வேறு சோத­னை­களின் ஊடாக இந்தக் குழந்தை இனங்­கா­ணப்­பட்ட பின் ஊர்­வ­ல­மாக லாஸா நக­ருக்கு எடுத்துச் செல்­லப்­பட்டு சம்­பி­ர­தாய முறையில் தலாய் லாமா என்ற புனிதப் பத­வியில் அமர்த்­தப்­படும். லாஸா­வி­லுள்ள ஆயிரம் அறை­களைக் கொண்ட பொதாலா அரண்­ம­னையே தலாய் லாமாவின் வாசஸ்­த­ல­மாகும்.

ஒவ்­வொரு அறை­யிலும் பழங்­காலப் பொருட்கள் நிறைந்­தி­ருக்கும். ஒரு சில அறை­களில் வெள்­ளியும் தங்­கமும் விலை­யு­யர்ந்த கற்­களும் இருந்­தன. வேறு சில அறை­களில் அந்தக் காலத்தில் பயன்­ப­டுத்­திய வாள், கத்தி, கவசம், ஈட்டி ஆகி­ய­வற்­றுடன் துப்­பாக்­கி­களும் தோட்­டாக்­களும் குவித்து வைக்கப்பட்டி­ருக்­கின்­றன.

பழைய தலாய் லாமாக்­களின் தனிப்­பட்ட பொருட்கள், புத்­த­கங்கள் ஆகி­யவை சில அறை­களில் காணப்­ப­டு­கின்­றன.

தலாய் லாமா­வுக்கு அடுத்த அந்­தஸ்­துள்ள பதவி பஞ்சன் லாமா ஆகும். திபெத்­தி­யர்­களைப் பொறுத்­த­வரை இவர்கள் இரு­வ­ருமே அர­சியல், ஆன்­மீகம் இரண்­டிலும்  கௌர­வ­மான உயர்­ப­தவி வகிப்­ப­வர்கள்.

080718100357ZOஒரு பஞ்சன் லாமா அடுத்த தலாய் லாமாவை தேர்ந்­தெ­டுப்­பதும், அந்த தலாய் லாமா அடுத்த பஞ்சன் லாமாவை தேர்வு செய்­வதும் சங்­கிலித் தொடர் போல் பல­நூறு ஆண்­டு­க­ளாகத் தொடர்ந்து நடை­பெற்று வரு­வது பாரம்­ப­ரிய விட­ய­மாகும்.

தற்­போது பத­வி­யி­லி­ருப்­பவர் தலாய் லாமா என இனங்­கா­ணப்­பட்ட முறையைப் பற்றி அல­சுவோம். இந்தத் தேடல் தியா­னத்தில் தொடங்­கு­கி­றது. திபெத்­தி­லுள்ள புனித ஏரியின் பெயர் லாமோ லாட்சோ.

இந்த ஏரியை பால்டன் லாமோ எனும் தேவதை பாது­காப்­ப­தாக நம்­பப்­ப­டு­கி­றது. தலாய் லாமா  இனங்­காண முன்பு இந்த ஆற்­றங்­க­ரையில் அமர்ந்து பௌத்த  தர்­ம­கர்த்­தாக்கள் தியானம்  செய்­வது வழக்கம். தியானம்  செய்­ப­வரின் கனவில் தேவதை தோன்றி அடுத்த தலாய் லாமாவை அடை­யாளம் காட்­டு­வ­தாக நம்­பப்­ப­டு­கி­றது. குறித்த இடத்தில் அவர் வசிக்­கிறார் என்று தேவ­தைகள் கைகாட்­டு­வ­தில்லை.

மாறாக சில குறிப்­பு­களை தேவ­தைகள் அளிக்கும். சங்­கேத வடிவில் அவை அமைந்­தி­ருக்கும். உதா­ர­ணத்­திற்கு ஏரிக்­க­ருகில் ஒரு பள்ளம் தோன்றி அதற்கு மேலே மேகங்கள் பல வடி­வங்­களில் தோன்றும்.

இந்த வடி­வங்கள் அனைத்தும் சங்­கேதக் குறிப்­புகள். அடுத்த தலாய் லாமா யார் என்­ப­தற்­கான விடை இதில் அடங்­கி­யி­ருக்கும். இந்தக் குறிப்­பு­களை சரி­யான முறையில் உள்­வாங்கிக் கொண்டால் விளக்­கங்கள் கிடைக்கத் தொடங்கும்.

ஒவ்­வொரு தலாய் லாமாவும் ஒவ்­வொரு வித­மாக அடை­யாளம் காட்­டப்­ப­டுவார். பீடத்தில் இருக்கும் தலாய் லாமா இறந்­து­விட்டால் அவரை எரிக்கும் புகை எந்தத் திசையில் செல்­கி­றது என்­பதை குறித்து வைத்துக் கொள்­வார்கள்.

குறிப்­பிட்ட திசையில் உள்ள பகு­தி­களை ஆராய்­வார்கள். அங்­கே­யுள்ள குழந்­தை­களை உன்­னிப்­பாக பார்­வை­யி­டு­வார்கள். சோத­னைகள் செய்து பிறகு முடி­வெ­டுப்­பார்கள்.

தற்­போ­துள்ள தலாய் லாமாவை இனங்­காண்­ப­தற்கு அனைத்து திற­மை­க­ளையும் கொண்ட ரெடிங் ரின்­போசே இந்தப் பணிக்கு தேர்வு செய்­யப்­பட்டார். சம்­பி­ர­தா­யப்­படி முதல் குறிப்பை பெற இவர் லாமோ லாட்சோ ஏரிக்கு சென்று தியா­னத்தை ஆரம்­பித்தார்.

அப்­போது  பலத்த காற்று வீசி­யது. நீல நிற தண்ணீர் வெள்ளை நிற­மாக   மாறி கறுப்பு நிறத்தில் பெரிய பள்ளம் தோன்­றி­யது. அதன் மேலே கரு­மே­கங்கள் பல வடி­வங்­களில் விரிந்­தன.

அவர் கண்­க­ளுக்கு மட்டும் தெரியும் வகையில் அவைகள் தோன்றி மறைந்­தன. கூடவே பல காட்­சிகள் அடுத்­த­டுத்து கண்முன் விரிந்­தன. அவை­யா­வன மூன்று அடுக்­குகள் கொண்ட பொற்­கூரை வேய்ந்த பௌத்த ஆல­யம், ஒரு கிரா­மப்­புற வீடு, மழை நீர் இறங்கும் கால்­வாய், மலைப் பாதை, கொடி மரம், வீட்டு வாசலில் ஒரு கறுப்­பு, வெள்ளை நாய். ரெடிங் இந்தக் காட்­சி­களை தொகுத்துக் கொண்டார்.

13 ஆம் தலாய் லாமா இறந்த போது அவர் தலை திரும்­பிய கிழக்குத் திசையை குறித்துக் கொண்டார். அனைத்­தையும் ஒன்­றி­ணைத்துப் பார்த்தார். சில விட­யங்கள் புரிந்­தன.

அ என்­பது ஆம்தோ என்ற பகு­தியைக் குறிக்­கும், ”க” என்­பது மூன்­ற­டுக்கு கொண்ட கும்பம் பௌத்த ஆல­யம், ”ம” என்­பது கர்மா ரோல்பாய் தோர்ஜே எனும் இடத்தைக் குறிக்­கி­றது. இந்த அடை­யா­ளங்­களை வைத்­துக்­கொண்டு தலாய் லாமாவை தேட ஆரம்­பித்­தார்கள்.

பஞ்சன் லாமா அவர்­களால் நிய­மிக்­கப்­பட்ட ரெடிங் ரின்­போசே 13 ஆம் தலாய் லாமா வைத்­தி­ருந்த சில பொருட்­களை தன்­னுடன் எடுத்துச் சென்றார். அந்தப் பொருட்­களைப் போல உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த போலி­க­ளையும் உடன் கொண்டு சென்றார்.

அவர் கொண்டு சென்­றவை தியா­னத்தின் போது பயன்­ப­டுத்­தப்­படும் மஞ்சள் மற்றும் கறுப்பு மணிகள் கொண்ட இரண்டு ஜெப மாலை­கள், இரண்டு கைத்­த­டி­கள், இரண்டு உடுக்­கைகள் என்­ப­ன­வாகும்.

பஞ்சன் லாமா அவர்­க­ளினால் ரெடிங் ரின்­போசே மூல­மாக மூன்று குழந்­தைகள் தேர்வு செய்­யப்­பட்­டனர். மூவரும் ஆம்தோ பகு­தியை சேர்ந்­த­வர்கள். அனை­வரும் கும்பம் பௌத்த ஆல­யத்­திற்கு அருகே வசித்­த­வர்கள்.

இவர்­களில் ஒரு­வரே அடுத்த தலாய்லாமா என கணிக்­கப்­பட்­டார்கள். தேடல் தொடங்­கி­யது. ஆரம்­பிக்கும் போதே மூவரில் ஒரு சிறுவன் இறந்து போயிருந்தான். அடுத்த சிறு­வனோ இவர்­களைப் பார்த்­ததும் ஓட்டம் பிடித்தான்.

எனவே மூன்­றா­வது சிறுவன் இருக்­கு­மி­டத்தை நோக்கிச் சென்­றனர். நம்­பிக்­கை­யுடன் முன்­னே­றிய குழு ரின்­போ­சேவின் குறிப்­பு­களின் அடிப்­ப­டையில் வீடு வீடாகத் தேடி­னார்கள். இறு­தியில் ஒரு வீட்டை அடைந்­தனர்.

கிரா­மப்­புற வீடு, மலைப் பாதை, கொடி மரம், வாச­லிலே ஒரு நாய் ஒன்­றும் ­வி­டாமல் அனைத்தும் பொருந்­தி­யி­ருந்­தன.

ரின்­போசே தன்னை அடை­யாளம் தெரி­யா­த­வாறு உடை­களை மாற்­றிக்­கொண்டு மாறு­வே­டத்தில் அந்தச் சிறுவன் வீட்­டிற்குள் நுழைந்தார். கடு­மை­யான பனிப் பொழிவால் இரவு தங்க வேண்­டு­மென்று அந்த வீட்­டி­ன­ரிடம் அனு­மதி கோரினார்.

அனு­மதி கிடைத்­தது. சுவை­யான தேநீர், ரொட்டி ஆகி­யவை பரி­மா­றப்­பட்­டன. தேநீர் குடித்துக் கொண்­டி­ருந்தபோது லாமோ தொண்டுப் (இன்­றைய தலாய் லாமா) திடீ­ரென்று ஓடி வந்தான்.

ரின்­போசே கையி­லி­ருந்த ஜெபமாலை மணி­களை சில நிமிடம் உற்றுப் பார்த்தான். பிறகு பர­ப­ரப்­புடன் சொன்னான். “இது என்­னு­டை­யது. இதை ஏன் நீங்கள் வைத்­தி­ருக்­கி­றீர்கள்? அதை என்­னிடம் தாருங்கள்” என்றான்.

ரின்­போசே தன் திகைப்பை மறைத்­த­படி “இது பழை­யது. வேண்­டு­மானால் வேறு தரு­கிறோம்” என்று கூறினார். அந்தச் சிறுவன் ஒப்­புக்­கொள்­ளாமல் “புதி­யது வேண்டாம். எனக்கு இதுதான் வேண்டும்” என்றான்.

இதுதான் தருணம் என்று ரின்­போ­சே­வுக்கு தெரிந்து போனது. தாம­திக்­காமல் பரி­சோ­த­னை­களை ஆரம்­பித்­து­விட வேண்­டி­ய­துதான் என நினைத்து பையி­லி­ருந்த பொருட்­களை ஒவ்­வொன்­றாக எடுத்து மேசையில் வைத்தார். சிறு­வனை அருகில் அழைத்தார்.

“இந்தா எல்­லாமே உனக்­காக கொண்டு வந்­துள்ளேன். வேண்­டி­யதை எடுத்துக் கொள்” என்றார். அச் சிறுவன் அதிக நேரம் எடுத்துக் கொள்­ள­வில்லை. அசல் கறுப்பு மற்றும் மஞ்சள் ஜெப மாலை­களை எடுத்துக் கொண்டான். கைத்­த­டி­யையும் உடுக்­கை­யையும் எடுத்துக் கொண்டான்.

தன்­னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். “இவை என்­னு­டை­யவை எனக்­குத்தான் சொந்தம்” என்றான். ரின்­போசே ஆராய்ந்தார். 13 ஆம் தலாய் லாமா பயன்­ப­டுத்­திய பொருட்­களை மிகத் துல்­லி­ய­மாக தேர்ந்­தெ­டுத்­தி­ருந்தான்.

போலி­யான பொருட்­களை மேசை­யி­லி­ருந்து கீழே தள்­ளி­விட்டான் அச்­சி­றுவன்.

ரின்­போ­சே­வுக்கு நம்­பிக்கை பிறந்­தது. இச்­சி­ரு­வந்தான் 14 ஆம் தலாய் லாமா என்று நிம்­மதிப் பெரு­மூச்சு விட்டார். இவ்­வா­றுதான் இன்­றி­ருக்கும் தலாய் லாமா இனங்­கா­ணப்­பட்டார்.

நான்கு மாத காலம் நோர்­பு­லிங்கா மாளி­கையில் தங்­கிய பின்­னர், 1940 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 22 ஆம் திகதி நான்கு வயது நிரம்­பிய லாமா தொண்டுப் அதிகா­ர­பூர்­வ­மாக தலாய் லாமா­வாக முடி­சூட்­டப்­பட பொதாலா அரண்­ம­னைக்கு ஊர்­வ­ல­மாக அழைத்துச் செல்­லப்­பட்டார்.

மங்­கள மணி­யோசை ஒலிக்­க,  வாத்­தி­யங்கள் முழங்க, முர­சுகள் ஒலிக்க திபெத்­திய பௌத்த மத பாரம்­ப­ரி­யத்தில் வடி­வ­மைக்­கப்­பட்ட தங்க சிம்­மாசனத்தில் லாமா தொண்டுப் சிறுவன் உட்­கார வைக்­கப்­பட்டான்.

தங்­கம். வைரம்,  மாணிக்கம் உள்­ளிட்ட  நவ­ரத்­தி­னங்­களால் உரு­வாக்­கப்­பட்ட  சிம்­மா­ச­னத்தை இரு பக்­கங்­க­ளிலும் எட்டு சிங்­கங்­களின் உரு­வங்கள் தாங்கிக் கொண்­டி­ருந்­தன. தலாய் லாமாவை விட உய­ர­மாக யாரும் உட்­காரக் கூடாது என்­ப­தற்­காக இந்த சிம்­மா­சனம் ஏழு அடி உய­ரத்தில் நிறு­வப்­பட்­டி­ருந்­தது.

பௌத்த விகாரை தர்­ம­கர்த்தா முடி­சூட்டு விழாவின் ஆரம்­ப­மாக தலாய் லாமாவை வணங்கி புத்த பக­வானின் தங்கச் சிலை,  புத்த பக­வானைப் பற்­றிய நூலுடன் அன்­றாடம் கடைப்­பி­டிக்க வேண்­டிய சம்­பி­ர­தாயக் கட­மைகள் அடங்­கிய குறிப்­புகள், பௌத்­தர்­களின் புனிதப் புத்­தகம் உள்­ளிட்ட மூன்று முக்­கிய பொருட்­களை அவ­ருக்கு வழங்­கினார்.

மூலி­கைகள் கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட சுவை­யான பானத்தை தங்கக் கோப்­பையில் அருந்தக் கொடுத்­தார்கள். திபெத்­திய அரசின் சார்­பாக தங்கச் சக்­க­ரம்இ வெள்ளைச் சங்கு ஆகி­யவை வழங்­கப்­பட்­டன.

அதி­கா­ர­பூர்வ அரசுச் சின்னம் பொறித்த இலட்­சி­னையும் வழங்­கப்­பட்­டது. சுமார் ஐந்து மணி­நேரம் இந்த சம்­பி­ர­தாய நிகழ்ச்­சிகள் நடந்­தன. அவ­ரது குடும்ப பெய­ரான லாமா தொண்டுப் என்ற பெய­ருக்கு பதி­லாக டென்சின் கியாட்சோ எனும் புதிய பெயர் சூட்­டப்­பட்­டது.

பின்னர் அரு­கி­லுள்ள ஜோகாங் ஆல­யத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்டார். அங்கு அவரை உட்­கார வைத்து தலை­மு­டியை வெட்ட ஆரம்­பித்­தனர். ஆசை ஆசை­யாக வளர்த்த அழ­கா­னஇ நீள­மான முடி தன் கண்­முன்னே வெட்­டப்­ப­டு­வதை அவரால் தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. குழந்­தை­தானே.

முதல் சடங்கு தலை முடியை முற்­றி­லு­மாக மழிக்க வேண்டும் என்­பதே. பிறகு தலாய் லாமா­வுக்­கான பிரத்­தி­யேக ஆடைகள் அணி­விக்­கப்­பட்­டது. தலை­முடி இல்­லாமல் புதிய ஆடையில் தன்னைத் தானே கண்­ணா­டியில் ஆச்­ச­ரி­யத்­துடன் பார்த்து ரசிக்க ஆரம்­பித்தார் டென்சின் கியாட்சோ எனும் 14 ஆம் புதிய தலாய் லாமா.

தங்­க­ளுக்கு புதிய தலாய் லாமா கிடைத்­து­விட்டார் என்ற சந்­தோ­ஷத்தில்  திபெத் நாடே குதூ­க­லித்­தது. தலாய் லாமா­வாக பீடத்தில் அமர்ந்­தாலும் அவர் சிறு­வ­னாக இருந்த கார­ணத்­தினால் அதி­காரம் முழு­மை­யாக ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை.

அவரைத் தலாய் லாமா­வாக இனங்­கண்ட ரெடிங் ரின்­போ­சேயின் கட்­டுப்­பாட்­டில்தான் முழு நிர்­வா­கமும் இருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

புதிய தலாய் லாமா­வுக்கு பல நாட்டுப் பிர­தி­நி­திகள் கொடுத்த வித­வி­த­மான விளை­யாட்டுப் பொம்­மைகள் அவர் அறையில் நிரம்பி வழிந்­தன. அமெ­ரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தங்கக் கடி­காரம் ஒன்­றையும் பாடும் பறவை பொம்மை ஒன்­றையும் பரி­சாக அளித்­தி­ருந்தார். பிரிட்டன், இந்­தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தும் பரி­சுகள் குவிந்­தி­ருந்­தன.

திபெத்­திய கலை, இலக்­கி­யம், சமஸ்­கி­ரு­தம்,  மருத்­து­வம்,  இசை,  நாட்­டி­யம்,  சோதி­டம்,  பௌத்த தத்­துவம் ஆகிய பாடத்­திட்­டங்கள் இவ­ருக்குக் கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டது. பௌத்த தத்­து­வத்தில் பல பிரி­வுகள் முக்­கி­ய­மாக கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டது.

தலாய் லாமாவும் பஞ்சன் லாமாவும் ஒற்­று­மை­யாக இருப்­பது சீன அர­சுக்கு எரிச்­சலை உண்­டாக்­கி­யது. இவர்­களைப் பிரித்­தாளும் சூழ்ச்­சியை சீனா தொடர்ந்து மேற்­கொண்டு வந்­தது.

ஒவ்­வொரு முறையும் தோல்­வி­யையே தழு­வி­யது. ஆனால் தொடர்ந்து வந்த பஞ்சன் லாமாக்­களில் பத்­தா­வது பஞ்சன் லாமா ஸோகி கியால்ட்சென் (1938-1989) சீனாவின் வஞ்­சக வலையில் வீழ்ந்தார். இம்­முறை சீனா நினைத்­ததை சாதித்துக் கொண்­டது.

1959 இல் திபெத்தின் மீது சீனா படை­யெ­டுத்து தன்­னுடன் இணைத்துக் கொண்­டது. தற்­போ­தைய தலாய் லாமா டென்சின் கியாட்சோ (24 வயது) சீன அர­சிற்குப் பயந்து வெளி­யேறி இந்­தி­யாவில் 1959ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி தஞ்சம் புகுந்தார்.

அப்­போ­தைய இந்­தியப் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு அடைக்­கலம் அளித்தார். இம­ய­மலை அடி­வா­ரத்­தி­லுள்ள தரம்­சாலா என்ற இடத்தில் எல்லை தாண்டிய திபெத்­திய அரசு நிறு­வப்­பட்­டது.

திபெத் வர­லாற்றில் இது­வரை இல்­லாத புதிய திருப்பம் இப்­போது ஏற்­பட்­டது. திபெத் பௌத்­தத்தின் இரு கண்­க­ளாக தலாய் லாமாவும் பஞ்சன் லாமாவும் கரு­தப்­ப­டு­வது தெரிந்­ததே.

வழக்­கத்­துக்கு மாற்­ற­மாக 10 ஆவது பஞ்சன் லாமா சீன அர­சிற்கு தனது முழு ஆத­ர­வையும் பகி­ரங்­க­மாக அறி­வித்தார். பஞ்சன் லாமாவின் சம்மதத்துடன்தான்  திபெத் மீது ஆக்­கி­ர­மிப்பு  நடத்­தினோம் என சீன அரசு உள்­நாட்டு  மக்­க­ளையும்  உலக நாடு­க­ளையும் நம்ப வைக்கத் திட்­ட­மிட்­டது.

1989 ஆம் ஆண்டு ஜன­வரி 20 ஆம் திகதி 10 ஆவது பஞ்சன் லாமா தனது 51 ஆவது வயதில் மர்­ம­மான முறையில் திடீ­ரென மர­ண­ம­டைந்தார். புதிய 11 ஆவது பஞ்சன் லாமா தேடு­தலின் பின்னர் ஆறு வரு­டங்கள் கழித்து 1995 ஆம் மே மாதம் 14 ஆம் திகதி தலாய் லாமா, புதிய பஞ்சன் லாமா கெதும் சோகி நியிமா என்­ப­வரை நிய­மித்தார்.

சீன அரசு ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. மாறாக தங்கள் அலு­வ­ல­கத்தில் வேலை பார்க்கும் பாது­காப்பு அதி­காரி ஒரு­வரின் மக­னான கியான்சென் நொர்பு என்­ப­வரை பஞ்சன் லாமா­வாக தேர்வு செய்­தி­ருக்­கிறோம் என சீன அரசு அறி­வித்­தது.

திபெத்­திய அக­தி­க­ளுக்­காக இந்­தியப் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு அவர்­களால் ஆச்­சார்ய கிரு­ப­ளானி தலை­மையில் மறு­வாழ்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்­டது.

அமெ­ரிக்­காவும்   வேறு பல நாடு­களும் நித­யு­த­வி­ய­ளித்­தது. இந்தச் சந்­தர்ப்­பத்தில் இலங்­கையை சேர்ந்த புத்த பிக்கு ஒருவர் தலாய் லாமாவை பார்க்க வந்­தி­ருந்தார். திபெத்தை போன்று இலங்­கையும் பௌத்த நாடு என்­பதால் இரு­வரும் பௌத்த ஆன்­மீகம் பற்றி உரை­யா­டினர்.

இறு­தியில் விடை பெறும்­போது இலங்­கைக்கு வரு­மாறு தலாய் லாமா­வுக்கு அழைப்பு விடுத்தார். அவர் பௌத்தம் தழைக்கும் முக்­கிய நாடு­களில் இலங்­கையும் ஒன்று என்­ப­தா­லும்,  அதை­விட பகவான் புத்­தரின் புனி­த­மான “பல்” இலங்­கையில்   இன்­றைக்கும் மக்கள் பார்­வைக்கு இருப்­ப­தாலும் தலாய் லாமா உட­ன­டி­யாக வரு­வ­தற்கு ஒப்­புக்­கொண்டார்.

பய­ணத்­திற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் திடீ­ரென ஒருநாள் இலங்கை வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் இருந்து தந்தி ஒன்று வந்­தது.

சில எதிர்­பா­ராத நிகழ்­வுகள் கார­ண­மாக தலாய் லாமாவை வர­வேற்க இய­லாத சூழல் நில­வு­வ­தாக தெரி­வித்­தி­ருந்­தார்கள். அந்த எதிர்­பாரா நிகழ்­வுகள் எப்­படி ஏற்­பட்­டி­ருக்கும் என்­பதை தலாய் லாமா உணர்ந்­து­கொண்டார்.

சீன அரசின் எதி­ரி­யாக கரு­தப்­படும் தலாய் லாமா­வுக்கு இந்­தியா புக­லிடம் அளித்­ததை அடுத்து இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் அடிக்­கடி முறுகல் நிலை ஏற்­பட்­டது.

முறுகல் நிலை முற்றி 1962 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 20 ஆம் திகதி சீன இரா­ணுவம் இந்­திய எல்­லைக்குள் அத்­து­மீறி நுழைந்­தது. வேறு வழி­யின்றி இந்­தியா அமெ­ரிக்­காவின் உத­வியை நாடி­யது.

அப்­போது அமெ­ரிக்க அதி­ப­ராக இருந்த கென்­ன­டியும் உத­விக்­காக உட­ன­டி­யாக விமா­னங்­க­ளையும் ஆயு­தங்­க­ளையும் அனுப்­பு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். சீனா என்ன நினைத்­ததோ!

திடீ­ரென போரை நிறுத்­து­வ­தாக அறி­வித்­தது. போர் நிறுத்­தப்­பட்­டது. ஆனால் சீனாவால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட 33,000 சதுர கிலோ மீற்றர் பகு­தியை விட்டு அது நக­ர­வில்லை. (அந்தப் பகு­தியை இந்­தி­யா­வுக்குத் திருப்பிக் கொடுக்­காமல் இன்­றைக்கும் சீனா தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.)

இரு நாடு­க­ளுக்­கு­மி­டையே நடந்த போரில் இந்­தியா படு­தோல்­வியை சந்­தித்­தது. திபெத் மற்றும் அதனை சுற்­றி­யுள்ள இந்­திய பகு­தி­களை சீனா வளைத்துக் கொண்­டது.

இதன் மூலம் திபெத்தை சுற்றி இந்­தியப் பகு­தி­க­ளையே வேலி­யாக்­கி­விட்­டது. பிர­தமர் நேரு அதிர்ந்து போனார். தலாய் லாமா தன்­னால்தான் இந்­தியா மிகப் பெரும் இழப்பை சந்­திக்க நேரிட்­ட­தாக வருந்­தினார். நேரு­விடம் நேர­டி­யா­கவே தனது வருத்­தத்தை தெரி­வித்தார்.

நேருவைத் தொடர்ந்து வந்த அனைத்து இந்­தியப் பிர­த­மர்­களும் தலாய் லாமா­வுக்கு ஆத­ர­வா­கவே இருந்து வந்­தனர். இந்­தி­யா­விலும் வேறு பல நாடு­க­ளிலும் திபெத் மக்கள் அக­தி­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர்.

தலாய் லாமா அந்­தந்த நாடு­க­ளுக்கு சென்று திபெத் அக­தி­க­ளுக்கு ஆறு­த­ல­ளித்து வந்தார். தலாய் லாமா­வுக்கு 1989 இல் நோபல் பரிசு வழங்­கப்­பட்­டது. உள்­நாட்­டுஇ வெளி­நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்கள் 84 டாக்டர் பட்­டங்­களை வழங்கி கௌர­வப்­ப­டுத்­தின. இது­வரை சுமார் 62 நாடு­க­ளுக்கு தலாய் லாமா சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ளார். 106 புத்­த­கங்கள் எழு­தி­யுள்ளார்.

இடை­யி­டையே திபெத்­திய மக்கள் சீன இரா­ணு­வத்­திற்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழு­வார்கள். சீன அரசு ஆயி­ரக்­க­ணக்கில் திபெத் மக்­களை கொன்று குவிப்­பார்கள். திபெத்­தியக் கடை­க­ளுக்கு சீன இரா­ணு­வமே தீ வைத்து கொளுத்­துவர்.

ஒரு சந்­தர்ப்­பத்தில் ஜோகாங் பௌத்த ஆல­யத்­தையும் இரா­ணுவம் விட்­டு­வைக்­க­வில்லை. உள்ளே நுழைந்து அங்கே அமை­தி­யாக தியா­னத்தில் ஈடுபட்டுக்­கொண்­டி­ருந்த பிக்­கு­களை வெட்டிக் கொன்­றனர்.

சில நேரத்தில் ஜோகாங் ஆல­யமே சுடு­கா­டா­கி­யது. கடு­மை­யான பத்­தி­ரிகை தணிக்­கை­க­ளையும் மீறி இந்த செய்­தி­களை உல­குக்கு அறி­வித்­தவர் பிரிட்டிஷ் அர­சியல் தலைவர் லோர்ட் எனல் என்­பவர் ஆவார்.

இவர் திபெத்தில் மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்ய வந்­தவர். சீனர்­களின் கோரத்­தாண்­டவம் இவ­ரா­லேயே வெளிச்­சத்­திற்கு வந்­தது.

திபெத்­திய பௌத்த பிக்­குகள் கூட சித்­தி­ர­வ­தைக்­குள்­ளா­னார்கள். மேலும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்­பு­றுத்­தப்­பட்டு சீர­ழிக்­கப்­பட்­டனர். திபெத்தில் இருக்கும் சீனர்கள் எத்­தனை பிள்­ளை­க­ளையும் பெறலாம்.

திபெத் மக்கள் இரண்டு பிள்­ளை­க­ளுக்கு மேல் பெற முடி­யாது என்று சீன இரா­ணு­வத்தின் அடா­வ­டித்­தனம் தொடர்ந்தது. மூன்றாவது முறையாக எந்தவொரு திபெத்திய பெண்ணாவது கருவுற்றால் கருவை வலுக்கட்டாயமாக சிதைக்கும் கொடூரத்தை சீனர்கள் செய்துவந்தனர்.

இதன் மூலம் திபெத்திய மக்கள் தொகை குறைந்து சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. சீனாவின் இந்த திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையால் தலாய் லாமா கவலை கொண்டுள்ளார்.

தலாய் லாமா ஓய்வில்லாத கடுமையான உழைப்புக் காரணமாக நோய்வாய்ப்பட்டுவிட்டார். 10-10-2008 அன்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். தொடர்ந்தும் தன்னால் முன்பு போல் முழுவேகத்துடன் உழைக்க முடியுமோ என்று யோசித்ததன் விளைவாக 25-10-2008 இல் சீன அரசுக்கு அறிக்கை ஒன்றை விடுத்தார்.

சொந்த நாடான திபெத்திற்கு தனிநாடு அந்தஸ்து கிடைக்க பாடுபட்டு கிடைக்கவில்லை. திபெத் மக்களோ சொந்த நாட்டில் பாரபட்சமாக நடாத்தப்படுகிறார்கள்.

அதுபற்றி தலாய் லாமா கவலையடைந்ததால் தனிநாடு அந்தஸ்து வேண்டாம். சுயாட்சி அதிகாரமே போதும் என்று சீனாவிடம் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகாவது திபெத்திய படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிறுத்தப்படல் வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். திபெத்திற்கு இனியொரு தலாய் லாமா தேவைப்படாது என்றும் அவர் கூறினார்.

தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்து 55 ஆண்டுகளாகியும் திபெத்திய பிரச்சினைக்கு இன்னும் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. தனது கோரிக்கைகளுக்கு என்றேனும் ஒருநாள் சீனா செவிசாய்க்கும், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் திபெத்திற்கு சுயாட்சி வழங்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் தலாய் லாமா.

தலாய் லாமாவின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?!!!!

பரீட் இக்பால், பாணந்துறை

Share.
Leave A Reply

Exit mobile version