பக்காவாக திட்டமிடப்பட்ட கொள்ளை ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சவுதி இளவரசர் ஒருவர் சென்ற வாகனத் தொடர் ஒன்று, எந்திரத் துப்பாக்கி ஏற்தியவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு நடந்த இந்த துணிகர கொள்ளையின்போது, துப்பாக்கி முனையில் இரண்டரை லட்சம் யூரோ பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள், அத்துடன் ‘சென்சிட்டிவ் ஆவணங்கள்’ சிலவற்றையும் கவர்ந்து சென்றதாக பிரெஞ்ச் போலீஸ் கூறுகிறது.

‘சென்சிட்டிவ் ஆவணங்கள்’ அரசியல் தொடர்பானவையா என்றும் ஒரு சந்தேகம் உள்ளது.

காரணம், சவுதி இளவரசரின் கார், பாரிஸ் நகரில் Champs Elysees பகுதியில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இருந்து Le Bourget ஏர்போர்ட் நோக்கி சென்றபோதே கொள்ளையடிக்கப்பட்டது என்ற போதிலும், அதற்குமுன் இளவரசரின் கார் பிரான்ஸில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்று திரும்பியதாக கூறப்படுகிறது.

தூதரகத்தில் இருந்து இந்த ஆவணங்கள் சவுதிக்கு விமானம் மூலம் இளவரசருடன் செல்ல இருந்தனவா? என்பதே, மில்லியன் டாலர் கேள்வி.

சவுதி இளவரசர் ஏர்போர்ட்டுக்கு சென்ற வாகனத் தொடரணியில் 10 மெர்சிடீஸ் பென்ஸ் கார்கள் சென்றன. வடக்கு பாரிஸில் இந்த கார்கள் சென்றுகொண்டு இருந்தபோது, இரண்டு BMW கார்களில் கொள்ளைர்கள் வந்தனர். 5 முதல் 8 கொள்ளையர்கள் இரு கார்களிலும் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இவர்கள், வாகன தொடரணியில் வந்த கார்களில் முதலாவதாக சென்று கொண்டிருந்த காரை துப்பாக்கி முனையில் மடக்கி, தம்முடன் கடத்திச் சென்றார்கள்.

அதன் பின்னர், கடத்தல் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள Saint-Mesmes என்ற கிராமத்தில் கடத்தப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் காரும், கொள்ளையர்களின் BMW கார்களில் ஒன்றும் பகுதி எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.

காரின் எரிந்த பகுதிகளில் இருந்து, இரு 500 யூரோ நோட்டுக்களும், அரபு மொழியில் எழுதப்பட்ட சில காகிதங்களும் பிரெஞ்ச் போலீஸால் கைப்பற்றப்பட்டன.

பாரிஸில் இருந்து வெளியாகும் Le Parisien பத்திரிகை, தமது இன்று காலை பதிப்பில், இந்த காரின் உள்ளே சென்சிட்டிவ் ஆவணங்கள் சில இருந்தன எனவும், அவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரெஞ்ச் போலீஸ் இந்த கொள்ளை பற்றி தகவல் தெரிவிக்கையில், “இது யாரோ நன்றாக ‘உள்-விவகாரம்’ தெரிந்த ஆட்களாலேயே செய்யப்பட்டுள்ளது. வரிசையாக சென்ற 10 கார்களில், முதலாவதாக சென்ற காரில்தான் பணமும், ஆவணங்களும் இருந்தன என்பதை கொள்ளையர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அதனாலேயே அந்த காரை மட்டும் கடத்தி சென்றுள்ளனர்” என்கின்றனர்.

“எந்திரத் துப்பாக்கிகளுடன் இயங்கும் ப்ரொஃபெஷனல் கொள்ளையாகள்தான் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளையை செய்துள்ளனர். சவுதி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கினால்தான், கொள்ளையரை கண்டுபிடிக்க முடியும்” எனவும் போலீஸ் கூறுகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version