04_7

வெற்றியுடன் விடைபெற்றார் மஹேல; டெஸ்ட் வாழ்வின் இறுதி தருணம் (video)

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி, 17 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் பிரகாசித்த மஹேல ஜயவர்த்தனவிற்கு வெற்றியுடன் டெஸ்ட் அரங்கிலிருந்து பிரியாவிடை அளித்துள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது 17 ஆண்டுகாலம் டெஸ்ட் அரங்கில் பிரகாசித்த சிரேஷ்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு இலங்கை கிரிக்கெட்டின் சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நினைவுப்பரிசு ஒன்றையும் வழங்கினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், எஸ் எஸ் சி கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் சார்பாகவும் மஹேல ஜயவர்தனவிற்கு ஞாபகார்த்த சின்னங்களும் வழங்கப்பட்டன.

போட்டியின் இறுதி நாளான இன்று 271 ஓட்டங்கள் என்ற வெற்றியிக்கை நோக்கி தனது 2 ஆம் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 165 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து தோல்வி அடைந்தது.

உபாதை காரணமாக ஜுனைட் கான் துடுப்பெடுத்தாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தை பெற்ற மஹேல ஜயவர்த்தன தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய மைதானமான எஸ் எஸ் சியில் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல ஜயவர்தன 11 ஆயிரத்து 814 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் , டெஸ்டில் அதிக ஒட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன் டெஸ்ட்டில் அதிக பிடிகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள மஹேல ஜயவர்தன உள்ளார். அவர் இதுவரை 205 பிடிகளை எடுத்துள்ளார்.

இதனிடையே டெஸ்ட் போட்டிகளில் அதிக ஒட்ட இணைப்பாட்டத்தை பெற்றவர்கள் வரிசையில் குமார் சங்க்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இரண்டாம் இடத்திலுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

 

Share.
Leave A Reply

Exit mobile version